இன்ஜினியர் உயிரை பறித்த, 'கட் - அவுட்' கம்பம் அமெரிக்காவிலிருந்து பெண் பார்க்க வந்த போது சோகம்
Added : நவ 26, 2017 01:07
கோவை, கோவையில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவுக்காக நடுசாலையில் அமைக்கப்பட்ட,
'கட் - அவுட்' கம்பத்தில் மோதி, அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.கோவை, சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி; இவரது மகன் ரகுபதி, 32; அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். பெண் பார்ப்பதற்காக, 12 நாட்களுக்கு முன் கோவை வந்தார். இன்று மீண்டும்,அமெரிக்கா திரும்ப திட்டமிட்டிருந்தார்.அமெரிக்கா செல்லும் முன், பழநி கோவிலுக்கு செல்ல முடிவு செய்தவர், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, பைக்கில், சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டு புறப்பட்டார். பஸ் ஸ்டாண்டில் பைக்கை நிறுத்தி, பஸ்சில் பழநி செல்லவிருந்தார். கோவை அரசு மருத்துவ கல்லுாரியை தாண்டி, ஹோப்காலேஜ் மேம்பாலம் மீது பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.
சாலையின் நடுவில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவுக்காக, 50 அடி உயரத்தில் கட் - அவுட் கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. நடுசாலையில் சவுக்குக் கட்டைகளால் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவு மீது, ரகுபதி சென்ற பைக் மோதியது.நிலை தடுமாறி சாலையில் விழுந்தவர் மீது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி, நிற்காமல் சென்றது.
விபத்தில் தலை சிதைந்து, சம்பவ இடத்திலேயே ரகுபதி பரிதாபமாகஉயிரிழந்தார்.
போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார், சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவையில், டிச., 3ல், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடக்க உள்ளது. இதற்காக, மாநகர் முழுவதும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன.அவிநாசி சாலையில், சிட்ரா மற்றும் விபத்து நடந்த ஹோப்காலேஜ் சந்திப்பு உட்பட பல்வேறு இடங்களில், 50 அடிக்கும் மேலான உயரத்தில், நடுசாலையில் கட் - அவுட்டுக்காக கம்பங்கள் கட்டப்பட்டன. இந்த ஆடம்பர
ஏற்பாடுகள், கோவை மக்களை முகம் சுளிக்க வைத்து உள்ளன.
இதற்கேற்ப, நேற்று சாப்ட்வேர் இன்ஜினியர் விபத்தில் உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நேற்று மதியம் சாலையில் அமைக்கப்பட்ட அனைத்து
தோரணங்களையும் அகற்ற, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
'சாலையிலேயே வைப்போம்'
நேற்று முன்தினம் மாலை, சிட்ரா சந்திப்பு அருகே நடுரோட்டில், அலங்கார வளைவு கட்டப்பட்டு வந்தது. இதை பார்த்த ரோந்து போலீசார், பணிகளை நிறுத்த அறிவுறுத்தினார். ஆனால், 'நாங்கள் பைபாஸ் சாலையிலேயே தோரணம் கட்டுவோம்' என, பதிலளித்துள்ளனர்.
பின், போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, சிட்ரா அருகே அமைக்கப்படவிருந்த வரவேற்பு வளைவு அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதேபோன்று, ஹோப்காலேஜ் பகுதியிலும் எச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால், உயிரிழப்பை தடுத்திருக்கலாம்.
அனுமதி வாங்கவில்லை
வாலிபர் உயிரிழப்பு குறித்து, சமூக வலை
தளங்களில் தகவல்கள் பரவின. அதில், 'விபத்துக்கு கோவை மாநகராட்சி கமிஷனர் தான் காரணம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு சமூக வலைதளத்தில் பதிலளித்த, கமிஷனர்
விஜயகார்த்திகேயன், 'உரிய அனுமதி வாங்காமல்
அலங்கார வளைவுகளை அமைத்துள்ளனர். அவற்றை உடனடியாக அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என, குறிப்பிட்டிருந்தார்.
No comments:
Post a Comment