Sunday, November 5, 2017

தமிழக மருத்துவ மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் இரட்டை இருப்பிடச் சான்றிதழ்!

ஞா. சக்திவேல் முருகன்

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை, நீட் அடிப்படையிலா அல்லது பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலா என்ற குழப்பம் இருந்தது. ‘நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்த வேண்டும்’ என உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஆகஸ்ட் 25 முதல் மாணவர் சேர்க்கையை நடத்தியது தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம்.



'பொதுக் கலந்தாய்வின் முதல் நாளிலேயே வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் கலந்துகொண்டு கல்லூரியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்' என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, ‘போலி இருப்பிடச் சான்றிதழ் அளித்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சுகாதாரத்துறை அறிவித்தது. முதல்நாளில் போலி இருப்பிடச்சான்றிதழ் மூலம் சேர்ந்த ஒன்பது பேரில் நான்கு மாணவர்கள் கலந்தாய்விலிருந்து விலகிவிட்டனர். ஒரு மாணவர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. ‘நாங்கள் அளித்த இருப்பிடச் சான்றிதழ் எனத் தெரியவந்தால் எங்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம்’ என நான்கு மாணவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்களுக்குக் கல்லூரியில் இடம் கிடைத்தது.


மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பின்பு, தமிழக மருத்துவச் சேர்க்கைக்கான செயலாளர் செல்வராஜ், "பணி நிமித்தம் காரணமாக மற்ற மாநிலங்களில் பணியாற்றி வருபவர்களின் பிள்ளைகள் 428 பேர், இரட்டை இருப்பிடச் சான்றிதழ் அளித்து, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள்" என்றார். ஆனால், மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்களின் பெற்றோர்கள், "கலந்தாய்வின் முதல் இரண்டு நாள்களில் மட்டுமே இரட்டை இருப்பிடச் சான்றிதழ் அடிப்படையில் 490 மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். மருத்துவக் கலந்தாய்வில் ஏற்கெனவே வேறொரு மாநிலத்தில் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துச் சேர்ந்தவர்கள், மற்றொரு மருத்துவக்கலந்தாயில் கலந்துக்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து கலந்தாய்விலும் கலந்துகொண்டனர். இவர்கள் மீண்டும் தமிழக அரசின் கலந்தாய்விலும் பங்கேற்று, தமிழகக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள். இதன்மூலம், தமிழக மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடத்தைக் கிடைக்கவிடாமல் செய்துவிட்டனர்" என்கிறார்கள்.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார், சென்னை அயானவரத்தைச் சேர்ந்த ரவி. இவரது மகன் நீட் தேர்வில் 367 மதிப்பெண் பெற்றிருக்கிறார். 'சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், என் மகனுக்கு திருச்சி மருத்துவக் கல்லூரியில்தான் இடம் கிடைத்தது. சென்னையில் பிறந்து, வளர்ந்து, சென்னையிலேயே படித்த என்னுடைய மகனுக்குச் சென்னை கல்லூரியில் இடம் கிடக்கவில்லை. ஆனால், மற்ற மாநிலத்தைச் சேர்ந்த 104 பேர் இரட்டை இருப்பிடச் சான்றிதழைப் பயன்படுத்தி, சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். இதைப்போலவே, மற்ற மருத்துவக் கல்லூரிகளிலும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் சேர்ந்திருப்பதால் தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்காமல் போய்விட்டது. இதுகுறித்து, உயர்நீதிமன்றம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.



இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், 'மருத்துவக் கல்லூரி சேர்க்கையின்போது மாணவர்கள் அளித்த இருப்பிடச் சான்றிதழ்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், தமிழகச் சுகாதார துறைச் செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் இருவரும் 06.11.2017 அன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருக்கிறார்.

"நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போதே ஆதார் அட்டை அவசியம் என்றார்கள். ஆனால், கலந்தாய்வின்போது ஆதார் அட்டையைக் கவனத்தில் எடுக்காமல், இருப்பிடச் சான்றிதழை மட்டுமே பார்த்து சேர்க்கை நடத்தினர். ஆதார் அட்டைக்கும், இருப்பிடச் சான்றிதழுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டறிந்தால் இரட்டை இருப்பிடச் சான்றிதழின் நிலையை அறிந்திருக்க முடியும். இதைத்தவிர, இதர மாநிலங்களின் கலந்தாய்வின் தரவரிசைப்பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே, தமிழகத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கையைத் தடுத்து, தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பளித்திருக்க முடியும்" என்றனர் பெற்றோர்கள்.

இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. அன்று, தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்பதைப் பொறுத்தே, தமிழக மாணவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

No comments:

Post a Comment

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...