Saturday, November 4, 2017

தற்போதைய,மழையால்,பாதிப்பில்லை,'அச்சம் வேண்டாம்!

''சென்னை உட்பட தமிழகத்தின் எந்த பகுதிக்கும், தற்போதைய மழையால் வெள்ள அபாயம் இல்லை. அதனால், மக்கள் அச்சப்பட வேண்டாம். இப்போதைக்கு புயலும் இல்லை; சுனாமியும் வர வாய்ப்பில்லை,'' என, 'தமிழ்நாடு வெதர்மேன்' என அழைக்கப்படும், பிரபல தனியார் வானிலை ஆய்வாளர், பிரதீப் ஜான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



சென்னையில், 2015ல், கன மழை பெய்தபோது, நகரின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை, செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் கபளீகரம் செய்தது.அந்த கசப்பான நினைவுகள் அகலாத நிலையில், 2016ல், வட கிழக்கு பருவ மழை, போக்கு காட்டியது. அதனால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. குடிநீர் ஏரிகள் வறண்டதால்,தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதனால் இம்முறை, வட கிழக்கு பருவ மழையை, மக்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். மக்கள் எதிர்பார்த்தபடி, அக்., 31 இரவு முதல், கன மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், 'சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்படும்; செம்பரம்பாக்கம் ஏரி உடைப்பெடுத்தது; மீண்டும் சுனாமி தாக்கப் போகிறது' என, பல்வேறு வதந்திகள் பரவ துவங்கி உள்ளன.

கடும் மழையை எதிர்கொண்டுள்ள மக்கள் மத்தியில், இது பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்தேகங்களை எல்லாம், பல லட்சம் மக்களால் நம்பப்படும், 'வெதர்மேன்' பிரதீப் ஜான் தெளிவுபடுத்தி உள்ளார்.கடந்த, 2015 வெள்ளத்தின்போது, இவர் தந்த மழை தொடர்பான தகவல்கள், அப்படியே பலித்தன. அதனால், 'பேஸ்புக்' வலைதளத்தில், அவரை

பல லட்சம் பேர் தொடர்கின்றனர். இம் முறையும்,அவர் கணித்தபடியே மழை பெய்கிறது.

நமது நாளிதழுக்கு, அவர் அளித்த பேட்டி:

சென்னையில், நேற்று முன்தினம், மழை மேகங்கள், கடலோரமான இடத்தில் இணைந்ததால், கடற்கரைக்கு சற்று அருகில் உள்ள பகுதிகளில் மழை கொட்டியது. அதனால், எழும்பூரில் துவங்கி கேளம்பாக்கம் வரை, மிக அதிக அளவில் மழை பெய்தது. டி.ஜி.பி., அலுவலகம் அருகில், 28.6 செ.மீ., மழை பதிவானது. ஆனால், வளசரவாக்கம், பெரம்பூர், செங்குன்றம் என, பல பகுதிகளில் மழை குறைவாகவே பெய்தது.

சென்னையில், தற்போது பெய்து வரும் மழை இயல்பானது. அது, மேலும் சில நாட்கள் தொடரும். எனினும், நேற்று பெய்ததை போல், பல மணி நேரம் தொடர்ந்து, கன மழை பெய்யாது.சென்னை நகரில், தாழ்வான சில இடங்களில், மழைநீர் தேங்கியிருப்பது, உண்மை தான். ஆனால், வரலாற்றின் அடிப்படையிலும், சென்னையின் தேவை அடிப்படையிலும், இந்த மழை போதாது.

இது வழக்கமான மழை தான். 2015ல், இதை விட இரு மடங்கு நீர், சென்னை சாலைகளில் ஓடியது. அதை ஒப்பிட்டால், இது ஒன்றும் பெரிது கிடையாது.'வெள்ள அபாயம் ஏற்படும்' என சிலர், தகவல் பரப்புகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியில், 15 சதவீதம் தான் தண்ணீர் வந்துள்ளது. அதனால், இப்போதைக்கு வெள்ளம் ஏற்பட வாய்ப்பே இல்லை.

சென்னையில் மழை பெய்தாலும், செங்குன்றம், பூந்தமல்லி போன்ற ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில், குறைவான அளவே மழை பெய்துள்ளது. அதனால், வதந்திகளை நம்ப வேண்டாம்.

இதேபோல், 'டிசம்பருக்குள், 11 நாடுகளை, சுனாமி தாக்கும்; தமிழகம், கேரளா அருகே பூகம்பம் உருவாகும்; 2004ம் ஆண்டை விட, பாதிப்பு பன்மடங்கு அதிகமிருக்கும்' என, சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன.

அதனாலும், மக்களிடம் கலக்கம் ஏற்பட்டு உள்ளது. உலகில் எந்த மனிதனாலும், பூகம்பத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது. அதற்கான தொழில்நுட்பமும், யாரிடமும் இல்லை.

தற்போது பரவும் தகவலில், எந்த நாளில் அதை, சம்பந்தப்பட்ட விஞ்ஞானி எழுதினார் என்ற, விபரம் இல்லை. அதில், பூகம்பத்தின் மையப் பகுதி, எங்கு உருவாகும் என குறிப்பிட வில்லை. கடவுளால் தான், பூகம்பத்தை கணிக்க முடியும். கண்டிப்பாக, சமூக வலைதளத்தில் பரவும் கடிதத்தை, கடவுள் எழுதியிருக்க முடியாது. எனவே, மக்கள் பயப்படத் தேவையில்லை. பலத்த மழை பெய்யும்போது, வீட்டுக்குள் பாதுகாப்பாக இருங்கள்; அது போதும்.இவ்வாறு அவர் கூறினார்.

நான் விஞ்ஞானி அல்ல!பிரதீப் ஜான் கூறியதாவது:

குமரி மாவட்டம், மார்த்தாண்டம், சொந்த ஊர். சென்னை, அண்ணா நகர், எஸ்.பி.ஓ.ஏ.,வில் பள்ளி படிப்பு. தற்போது, 'டுபிசில்' எனும், தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி சேவை கள் நிறுவனத்தில் பணி. சிறு வயது முதல், மழையை பார்த்தால், கவலை மறப்பேன். பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தாலும், வானிலை மீதான காதல் தொடர்ந்தது.

பல்வேறு நாடுகளின், வானிலை ஆய்வு மையங்கள், 25க்கும் மேற்பட்ட வானிலை மாடல்களை ஆய்ந்து, 2003ல் எழுத துவங்கி னேன். 2014ல், 'பேஸ்புக்'கில், மக்கள் எதிர்பார்க் கும் தகவல்களை எழுத துவங்கினேன். 2015 வெள்ளத்தின்போது, நம்பகமான தகவலை பதிவிட்டதால், லட்சக்கணக்கானோர், என்னை தொடர்கின்றனர்.

நான் விஞ்ஞானி அல்ல. ஆனால், மக்களுக்கு என்ன தேவை; மழை, புயல் குறித்து, என்ன தெரிந்து கொள்ள விரும்புவர் என்பதற்கேற்ற தகவல்களை, நம்பகமான விபரங்களுடன், மழைக் காலங்களில், தினசரி, மூன்று முறை பதிவிடுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

news today 23.10.1024