Monday, November 13, 2017

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இனி "பல்கலைக்கழகம்' என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது: யுஜிசி உத்தரவு


By  சென்னை,  |   Published on : 13th November 2017 03:21 AM  | 
ugc

"பல்கலைக் கழகம்' என்ற பெயரை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் இனி பயன்படுத்தக் கூடாது. உடனடியாக நீக்கிவிட வேண்டும் என பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
 உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை யுஜிசி எடுத்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை நாடு முழுவதும் உள்ள 123 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 28 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் இடம்பெற்றுள்ளன. அந்தச் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
 உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், நாடு முழுவதும் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், அவற்றின் பெயர்களில் "பல்கலைக் கழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகின்றன. இது யுஜிசி சட்டப் பிரிவு 23-க்கு எதிரானதாகும். எனவே, இதுதொடர்பாக யுஜிசி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
 இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக யுஜிசி சட்டப் பிரிவு 23-இன் கீழ் ஒரு மாதத்துக்குள்ளாக உரிய நடவடிக்கை எடுக்க யுஜிசி-யை அறிவுறுத்தியுள்ளது.
 அதன்படி, நாடு முழுவதும் உள்ள 123 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் அவற்றின் பெயரில் "பல்கலைக் கழகம்' என்பதைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. தங்களது கல்வி நிறுவனங்களின் பெயரோடு பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நீக்கத் தவறும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மீது யுஜிசி வழிகாட்டுதல் 2016-இன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பல்கலைக்கழகம் என்ற பெயருக்குப் பதிலாக, எந்தவிதமான மாற்று வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்பது குறித்த பரிந்துரையை யுஜிசி-க்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சமர்ப்பிக்கலாம்.
 அடுத்த 15 நாள்களுக்குள் இந்தப் பரிந்துரையைச் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் தேவையானத் திருத்தத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கொண்டுவரும் என சுற்றறிக்கையில் யுஜிசி தெரிவித்துள்ளது.
 
 
 

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024