Saturday, November 25, 2017


எஸ்ஆர்எம் பல்கலைக்கழக சிறப்பு பட்டமளிப்பு விழா: பெண் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு புகழாரம்

Published : 24 Nov 2017 10:03 IST

காட்டாங்கொளத்தூர்



காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு. அருகில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், எஸ்ஆர்எம். கல்விக் குழுமங்களின் வேந்தர் பாரிவேந்தர், பல்கலைக்கழக தலைவர் பி.சத்தியநாராயணன் உள்ளிட்டோர்.

பெண் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.

காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

அறிவியல் படிப்பதுதான் சிறந்தது என்ற சூழல் தற்போது நிலவுகிறது. பன்முகத் தன்மை கொண்ட, கல்வியை கொண்டு மாணவர்களைச் செதுக்க வேண்டும். பழமையும், புதுமையும் கலந்த சிந்தனை கொண்ட மாணவர்களை உருவாக்க பேராசிரியர்கள் முன்வர வேண்டும். இதற்கு பேராசிரியர்கள் தங்களைத் தினமும் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

நம் நாட்டில் பாகுபாடும், பாரபட்சமும் என்றும் இருந்ததில்லை. முயன்றால் இங்கு எவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். பெண் கல்வியில் இன்றைய நிலையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. மற்ற மாநிலங்களை விட முன்னிலையில் இருக்கிறது. பெண்களைப் போற்றும் தன்மைகொண்ட நம் கலாச்சாரமே இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் இந்நிகழ்ச்சியில் பேசும்போது, “இன்று தமிழகம் கல்வியில் தனித் தும் பெற்று முதன்மையான மாநிலமாக திகழ்கிறது. உயர்கல்வியின் நேர்த்தியும் தனித்துவமுமே இதற்கு காரணம் ஆகும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் 6 ஆயிரம் மாணவ , மாணவிகள் பட்டம் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற 185 மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே. பி. அன்பழகன், எஸ்ஆர்எம். கல்விக்குழுமங்களின் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர், பல்கலைக்கழக தலைவர் பி.சத்தியநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024