Monday, January 1, 2018

புதிய நம்பிக்கையை கொடுக்கும் புத்தாண்டு 
 
2017–ம் ஆண்டு முடிந்து, இன்று 2018–ம் ஆண்டு பிறந்தது. அரசியல் ரீதியாகவும், நாட்டின் பொருளாதார ரீதியாகவும், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பல சவால்கள், சோதனைகள் 2017–ஐ வாட்டி வதைத்தது. 2016–ம் ஆண்டு கடைசியில் நவம்பர் 8–ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் பாதிப்பு 2017–ல் தான் முழுமையாக தெரிந்தது.  இதுபோல, ஜூலை 1–ந் தேதி சரக்கு சேவை வரி அமலுக்கு வந்தது. சரக்கு சேவை வரியால் பொருட்களின் விலையெல்லாம் குறையும், மத்திய–மாநில அரசுகளுக்கு வருமானம் பெருகும், பல வரிகளை கட்டுவதற்கு பதிலாக, ஒரே வரியாக சரக்கு சேவை வரியை கட்டுவதால் வியாபாரிகளுக்கும், தொழில் முனைவோருக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக பொது மக்களுக்கும் மிகுந்த பலன் கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், யாரும் அந்தளவு பலனை அனுபவிக்கவில்லை.

ரியல் எஸ்டேட் துறைக்கு 2017–ல் நிச்சயமாக ஒரு சிறப்பான ஆண்டாக இல்லை. இந்த தொழிலில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. வேலைவாய்ப்புகளும் பெருமளவில் குறைவாகவே இருந்தது. பொருளாதார வளர்ச்சி சரிவடைந்ததோடு மட்டுமல்லாமல் ஏப்ரல் முதல் நவம்பர் வரையுள்ள கால கட்டத்தில் அரசின் வருவாயைவிட செலவு ரூ.6 லட்சத்து 12 ஆயிரத்து 105 கோடி அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், அ.தி.மு.க. பிளவுபட்டது. ஆண்டுதோறும் நடக்க வேண்டிய மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு இந்த ஆண்டு நடைபெறவில்லை. பருவமழை தவறியதால் கடும் வறட்சி நிலவியது. நவம்பர் 30–ந்தேதி ‘ஒகி’ புயலினால் பலத்த சேதம் ஏற்பட்டது. தொழில் வளர்ச்சி இல்லாததால், வேலைவாய்ப்புகளும் பெருமளவு குறைந்துள்ளது.

இந்த நிலையில், இந்த புத்தாண்டில் நிச்சயமாக மத்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசாங்கத்தை பொறுத்தமட்டில், பிப்ரவரி 1–ந் தேதி தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட்தான் 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்போகும் முழுமையான பட்ஜெட்டாக இருக்கும். இதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு 8  மாநில சட்டசபை தேர்தல்களை பா.ஜ.க. சந்திக்க இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசாங்கம் தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்கள் நிச்சயமாக இடம்பெறும். தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, இரண்டுக்குமே இந்த ஆண்டு மத்திய அரசாங்க பட்ஜெட்டில் முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் வறட்சியும்,   குடிநீர்   பற்றாக்குறையும்   இருக்கும்.  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அறிவிப்புகள் நிறையவரும். மேலும், இந்த ஆண்டு தமிழக அரசு பல புதிய திட்டங்களை அறிவித்து முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாடத்திட்டங்களில் கொண்டுவரப்படும் மாற்றம் கல்வி வளர்ச்சியில் எந்த அளவுக்கு முன்னேற்றம் கொண்டுவரப்போகிறது என்பதையும் பார்க்கலாம். தமிழக அரசியலிலும், அரசிலும் இந்த ஆண்டு ஒரு பரபரப்பான ஆண்டாகத்தான் இருக்கும்.

No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...