Monday, January 1, 2018

அரசியலுக்கு வருவது உறுதி; சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி - ரஜினி அறிவிப்பு

அரசியலுக்கு வருவது உறுதி; சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி - ரஜினி அறிவிப்பு
 
நான் அரசியலுக்கு வருவது உறுதி, வரும் தமிழக சட்டபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியென நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். #Rajinikanth #Rajinikanthpoliticalentry 
 
 சென்னை,

கடந்த மே மாதம் நடிகர் ரஜினி காந்த் ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்ட போது நமது அரசியல் சிஸ்டமே கெட்டுப்போய் விட்டது என்றார். மேலும் தேர்தலை மனதில் வைத்து போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று ரசிகர்களுக்கு ஆலோசனை கூறி பேசினார். இது ரஜினி அரசியலுக்கு வருவார? மாட்டாரா? என்ன நிலைப்பாடு எடுப்பார் என்ற நீண்ட விவாதத்தை மீண்டும் வலுவடைய செய்தது. தற்போது மறுபடியும் கடந்த 26-ந்தேதி முதல் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்து வந்தார்.

 நடிகர் ரஜினிகாந்த் இறுதி நாளான இன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு அறிவிப்பதாக கூறியிருந்தார். இன்று ரசிகர் மத்தியில் பேசுகையில், அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் அறிவித்தார். 

ரஜினிகாந்த் பேச்சு விவரம் வருமாறு:-

முதலில் நான் ரசிகர்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. கட்டுப்பாடாக ஒழுக்கமாக இருந்து கிட்டத்தட்ட 6 ஆயிரம் பேர் இங்கு வந்து போட்டோ எடுத்து போனது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கட்டுப்பாடு ஒழுக்கம் மட்டும் இருந்தால் போதும் நாம் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம். இது நானாக பில்டப் கொடுக்கவில்லை. எனக்கு அரசியல் கட்சி தொடங்க பயம் இல்லை. மீடியாவை பார்த்து தான் எனக்கு பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் மீடியாவை பார்த்து பயப்படுகிறார்கள், திணறுகிறார்கள். நான் இன்னும் குழந்தை. நான் காரில் வரும்போது, போகும் போது எல்லாம் கேட்பார்கள். நான் ஏதாவது சொல்ல அது விவாதம் ஆகிவிடும்.

நேற்று முன்தினம் வரும்போது, சார் உங்கள் கொள்கைகள் என்ன என்று கேட்டார்கள். சோ சார் முதலிலேயே என்னிடம் மீடியாவிடம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள் என்றார். இப்போது அவரை நான் மிஸ் பண்றேன். அவர் இருந்து இருந்தால் எனக்கு ரொம்ப பக்க பலமாக இருக்கும். அவரது ஆன்மா இப்போது எனக்கு பக்க பலமாக இருக்கிறது. 

கண்ணன் அர்ச்சுனனிடம் கடமையை செய், யுத்தத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். யுத்தம் செய் நான் ஆள்கிறேன், செத்தால் வீர மரணம். யுத்தம் செய்யாமல் போனால் உன்னை கோழை என்று சொல்வார்கள். நான் எல்லாவற்றையும் ஏற்கனவே முடித்துவிட்டேன். இனி அம்பு விடுவதுதான் பாக்கி. நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம்... இது காலத்தின் கட்டாயம்... வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். 

அதற்கு முன்னால் உள்ளாட்சி தேர்தல் வருகிறது. அதற்கு நாட்கள் ரொம்ப குறைவாக இருப்பதால் அதில் போட்டியிடப் போவதில்லை. பாராளுமன்ற தேர்தல் பற்றி அந்த நேரத்தில் முடிவு எடுப்பேன். நான் பதவிக்கோ, பெயருக்கோ, புகழுக்கோ அரசியலுக்கு வரவில்லை. அதை கனவில் கூட நினைக்க முடியாத அளவுக்கு நீங்கள் ஆயிரம் மடங்கு கொடுத்து விட்டீர்கள். எனக்கு பதவி ஆசை இருந்தால் 1996-லேயே வந்திருப்பேன். 1996-லேயே நாற்காலி என்னைத் தேடிவந்தது. அது வேண்டாம் என்று தள்ளி வைத்தேன். 45 வயதிலேயே எனக்கு அந்த பதவி ஆசை இல்லை. 68 வயதில் பதவி ஆசை எனக்கு வருமா? அப்படி வந்தால் நான் பைத்தியக்காரன் இல்லையா? 

நான் ஆன்மீகவாதி என சொல்வதற்கு தகுதியற்றவனா? அரசியல் ரொம்ப கெட்டுப்போச்சு... நாட்டு அரசியல் ரொம்ப கெட்டுப் போச்சு... ஜனநாயகம் சீர்கெட்டுப் போச்சு. கடந்த ஒரு ஆண்டாக தமிழ்நாட்டில் நடந்த அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள், ஒவ்வொரு தமிழ் மக்களையும் தலைகுனிய வைத்துவிட்டது. எல்லா மாநிலத்து மக்களும் நம்மைப்பார்த்து சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் நான் இந்த முடிவு எடுக்கவில்லை என்று சொன்னால், என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கு நல்லது செய்வதற்கு ஜனநாயக ரீதியாக, நான் ஒரு முயற்சி எடுக்கவில்லை என்றால், சாகிற வரைக்கும் அது என்னை துரத்தும். மாத்தணும் எல்லாவற்றையும்  மாத்தணும். 

அரசியல் மாற்றம் அதுக்கு நேரம் வந்தாச்சு. சிஸ்டமை மாற்றணும். உண்மையான, நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஜாதி, மத சார்பற்ற, ஒரு ஆன்மீக அரசியலை கொண்டு வரணும். அதுதான் என்னு டைய நோக்கம். அதுதான் என்னுடைய விருப்பம். அதுதான் என்னுடைய குறி. அது ஒரு தனி மனிதனால் முடியாது. தமிழக மக்கள் நீங்கள் எல்லோரும் என்கூட இருக்கணும். இது சாதாரண விஷயம் இல்லை. எனக்கு தெரியும். ஒரு கட்சியை ஆரம்பித்து தேர்தலில் நின்று ஜெயித்து ஆட்சி அமைக்கிறது என்பது சாதாரண விஷயம் இல்லை என்பது எனக்கு தெரியும். கடலில் மூழ்கி முத்து எடுப்பது மாதிரி.

ஆண்டவனின் அருள், மக்களின் நம்பிக்கை, அவர்களுடைய அபிமானம், அவர்களது அன்பு, அவர்களது ஒத்துழைப்பு, அவர்களது ‘சப்போர்ட்’ இருந்தால் நாம் எதையும் சாதிக்க முடியும். ஆண்டவனின் அருள், மக்களின் ஆதரவு இரண்டும் எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை இருக்கு. இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார். அவர் பேசி முடித்ததும் ரசிகர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு வந்து ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024