Wednesday, January 24, 2018

`கொள்ளைக் காசைக் கொடுத்து பஸ்ல எதுக்குப் போகணும்' - 3 கி.மீட்டர் நடக்கும் பொதுமக்கள் ஆவேசம் 

பாலஜோதி.ரா



தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியதன் விளைவாக, சாமானிய மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். 'இந்தக் கட்டண உயர்வு தாங்கமுடியாத சுமையானது மக்களுக்கு. எனவே, இந்த உயர்வைக் குறைக்க வேண்டும்' என்று எல்லா கட்சித் தலைவர்களும் அறிக்கை விட்டு, போராட்டங்களுக்கும் நாள் குறித்துவிட்டார்கள். எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று (22-ம் தேதி) மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தி முடித்துவிட்டார்கள். கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களைத் தன்னெழுச்சியாக முன்னெடுத்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சூழலில், புதுக்கோட்டை நகரமக்கள் புதுவிதமான பிரச்னையை, இந்த கட்டண உயர்வால் சந்தித்துவருகிறார்கள். என்ன அது என்று பார்ப்போம்.

புதுக்கோட்டை நகர மக்கள், தினமும் சொந்த அலுவல், வியாபாரக் கொள்முதல், உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அருகில் உள்ள திருச்சி மாநகருக்குப் பேருந்தில் போய்வருவார்கள். புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்ல அதிகப்பட்ச கட்டணமே 33 ரூபாயாக இருந்தது. கட்டண உயர்வுக்குப் பிறகு அது, 51 ரூபாயாகிவிட்டது. அவ்வளவா... என்று மலைத்த மக்கள், இனி ரயிலே துணை என்று வழக்கம் போல மனம் மாறியிருக்கிறார்கள். புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு பாசஞ்சர் ரயிலில் போகவும் வரவும் சேர்த்து மொத்தமே 30 ரூபாய்தான் கட்டணம். இந்த மார்க்கத்தில் திருச்சியிலிருந்து காரைக்குடிக்கும் மானாமதுரைக்கும் விருதுநகருக்கும் தனித்தனியாக டெமோ ரயிலும் பாசஞ்சர் ரெயிலும் தினமும் ஓடுகின்றன. இதில் டெமோ ரயில், ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக மற்ற வார நாள்களில் இயங்குகின்றன. புதுக்கோட்டை நகர மக்கள் சந்திக்கும் புதுவிதப் பிரச்னை ரெயிலைப் பிடிப்பதிலோ, அதில் பயணிப்பதிலோ இல்லை. ரயில்வே நிலையத்துக்குச் செல்வதில்தான் இருக்கிறது.

அதாவது, பேருந்து நிலையத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்கு, பேருந்துகள் மிக அரிதாகவே வரும். ஆட்டோ ஒன்றுதான் வழி. ஆட்டோக்காரர்கள் 70 ரூபாய்க்குக் குறையாமல் வருவதே இல்லை. அவர்களுக்கு 70 ரூபாய் கொடுத்து, ரெயிலுக்கும் டிக்கெட் எடுக்க ஆகும் செலவைக் கூட்டிக்கழித்து கணக்குப்போடும் மக்கள் திகைத்துப்போய்விடுகிறார்கள். அதேசமயம், கூடுதலான கட்டணம் கொடுத்து பேருந்தில் பயணிக்கவும் மக்கள் தயாராக இல்லை. 'இவ்வளவு மலிவான கட்டணத்தில் ரயில் போகும்போது, நாங்கள் எதுக்குங்க கொள்ளைக் காசைக் கொடுத்து பஸ்ல போகணும்' என்று கேட்டபடியே மூன்று கிலோமீட்டர் தூரம் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பொடிநடையாகவே நடந்து சென்றுவிடுகிறார்கள். மேலும், "பஸ்காரனுக்கு அநியாயமா குடுக்குற காசில், வீட்டுக்கு காய்கறியாச்சும் வாங்கலாம். ஓட்டல்காரங்கிட்டே கொடுத்து வயிறார சாப்பிடலாம்" என்கிறார்கள்.

சரி, மக்கள் இப்படி சிரமப்படுவதற்கு என்னதான் தீர்வு? அதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் இரா.கணேசன் நம்மிடம் பேசினார். "பஸ் ஸ்டாண்டிலிருந்தும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்தும் ரயில்வே ஸ்டேஷனுக்கு அதிக எண்ணிக்கையில் டவுன் பஸ் விடவேண்டும். புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து திருச்சிக்கு மட்டுமல்ல, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ராமேஸ்வரம் வரை செல்வதற்கு ரயில் வசதி இருக்கிறது. அதை மக்கள் பயன்படுத்திக்கொள்ளத் தடையாக இருப்பது, ரயில்வே ஸ்டேஷனுக்குப் போக பஸ் வசதி இல்லாமல் இருப்பதுதான். போக்குவரத்து நிர்வாகம் உடனடியாக அந்த வசதியைச் செய்துகொடுக்க வேண்டும்'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024