Monday, January 22, 2018

“டிக்கெட்டுக்கே 3,000 போச்சு... சம்பளம் மொத்தத்தையும் புடுங்கிருங்க!” - விகடன் சர்வேயில் கதறும் மக்கள் #VikatanSurveyResult

ஐஷ்வர்யா




தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ள பேருந்து கட்டண உயர்வு சாதாரண விஷயம்தானே என்று எளிதில் கடக்கக்கூடியதாக இல்லை. அது தொடர்பாக ‘ விகடன்’ நடத்திய ஆன்லைன் சர்வேயில், பொதுமக்கள் அளித்துள்ள பதில்கள் அதனை உறுதிபடுத்துகின்றன.


அரசின் பேருந்துக் கட்டண உயர்வு முடிவு உங்களை பாதித்துள்ளதா? அப்படியென்றால் எந்த வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைப் பதிவு செய்யவும்.. என்ற கேள்விக்கு பொதுமக்களின் கருத்துகள் கீழ்வருமாறு,

“நான் பயணிக்கும் பேருந்தில் 8 ரூபாய் இருந்த டிக்கெட் விலை, தற்போது 15 ரூபாயாகியுள்ளது. 'கட்டண உயர்வு ஏன்' என்று அரசிடம் விளக்கம் கேட்டால், 'அண்டை மாநிலத்தைவிடக் குறைவுதானே' என்று பதில் கூறுகிறார்கள். அண்டை மாநிலத்தில் பேருந்துகளுக்குக் காப்பீடு உண்டு; டீசலுக்கு வாட் வரி இல்லை; எட்டு வருடங்களுக்கு மேல் ஒரு பேருந்தை அங்கே அவர்கள் இயக்குவதில்லை. அதை இவர்கள் இங்கே செய்வார்களா?”

“ஒவ்வொரு வார இறுதியிலும் நான் பெங்களூரிலிருந்து விழுப்புரம் பயணிக்க வேண்டும். இனிமேல் தமிழகப் பேருந்தைத் தவிர்த்து, நான் கர்நாடக மாநிலப் பேருந்தைத்தான் அதற்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும்”.

“ஆம்.பஸ் கட்டண உயர்வு என் பயணச்செலவை இருமடங்காக ஆக்கிவிட்டது. இதற்காக நான் மற்ற செலவினங்களைக் குறைக்க வேண்டும். இதற்குப் பதிலாக வருடம் ஒருமுறை 5 சதவிகிதக் கட்டணத்தை உயர்த்தினால் யாருக்கும் கஷ்டம் தெரியாது”.

“ஆம்! பாதிக்கிறது. 13 ரூபாய் இருந்த தூத்துக்குடி பேருந்து நிலையம் டு துறைமுகம் இடையிலான பேருந்து டிக்கெட் விலை தற்போது 25 ரூபாய்”.

“மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்துத்தான் ஊழியர்களுக்கு நிலுவைத்தொகையைக் கொடுக்க முடியும் என்பது மோசமான மேலாண்மையைக் காட்டுகிறது”.

“ஆம், நிறையவே பாதிக்கிறது. சென்னை பூந்தமல்லி டு தாம்பரம் இடையிலான டிக்கெட் விலை முன்பு 17 ரூபாய். ஆனால், தற்போது 33 ரூபாய். அனைத்து வர்க்க மக்களையும் இது பாதிக்கிறது.

“எனக்கு மாதப் பயணச்செலவு தற்போது இரண்டு மடங்காகி இருக்கிறது. இதனால் வீட்டுச் செலவுக்கான பணத்தை எப்படித் தர முடியும்? சம்பளம் முழுதும் பயணத்துக்கே சரியாகிவிடும்”.

“ஒருமுறை ஒருவர் கன்னியாகுமரியிலிருந்து சென்னை சென்றுவரக் கூடுதலாக ரூ.500 செலவாகிறது. 500 ரூபாய் என்பது நடுத்தரவர்க்கத்துக்கு அதிகமான தொகை. இதைப் போன்றுதான் மற்ற ஊர்களுக்கும். நிர்வாகச் சீர்கேட்டின் விளைவினை மக்கள் தலையில் சுமத்தியிருக்கிறார்கள்”.

“ஆம், இதிலென்ன சந்தேகம்? பாமர மக்கள் 50 சதவிகிதக் கட்டண உயர்வை எப்படிச் சமாளிக்க முடியும்?”

“இதனால் மாதம் கூடுதலாக 200 ரூபாய்வரை எனக்குச் செலவாகும்”.

“சென்னை மெட்ரோ கார்ப்பரேஷன் பேருந்துகள் மிகப் பழைமையானவை. ஒவ்வொன்றும் 10 முதல் 15 வருடங்கள்வரை பழைமையானதாக இருக்கும். ஆனால் அவற்றைத்தான் எக்ஸ்பிரஸ், க்ரீன் போர்டு, ஒயிட் போர்டு என வகைவகையாகப் பிரித்திருக்கிறார்கள். இதற்கு எதற்கு பராமரிப்பு என்கிற பெயரில் 50 சதவிகிதக் கட்டண உயர்வு?”

“பேருந்துக் கட்டணத்தை 60 சதவிகிதம் வரை எளிதாக உயர்த்தியிருக்கிறார்கள். இதுவரை பயணத்துக்காக 1500/- ரூபாய் செலவு செய்துவந்த நான், இப்போது 3000/- ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும். ஆனால், இத்தனை வருடங்களாக எனக்கு எவ்வித சம்பள உயர்வும் இல்லாமல் அதே சம்பளம் இருக்கும் நிலையில் இந்த விலையேற்றத்தை நான் எப்படிச் சமாளிப்பேன்?”

“நாகர்கோவில் டு சென்னைக்கு ரூ.490 ஆக இருந்த பயணக் கட்டணம், தற்போது ரூ.790 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கேரளத்தில் கட்டணத்துக்கேற்ப பேருந்தின் தரம், பராமரிக்கும் பணியாளர்களின் அதிக எண்ணிக்கை, வளைவு சாலைகளால் அதிக டீசல் நுகர்வு போன்றவை இருக்கிறது. மோடி - எடப்பாடி மூலம் மாதச் சம்பளத்தில் 2,500 ரூபாய்வரை அதிகம் பட்ஜெட் விழுகிறது. இதற்கு போக்குவரத்து ஊழியர்களின் தவறு கரணம் அல்ல, ஊழல் அரசின் தவறான நிர்வாகமே காரணம்”.

“கூலிக்கு ரூ.200-க்கும் ரூ.300-க்கும் மூன்று பேருந்துகள் மாறி வேலைக்குச் செல்லும் புறநகர் மக்கள், தினமும் ரூ. 100-லிருந்து ரூ. 150 வரை பயணத்துக்கு மட்டுமே கொடுத்தால் எப்படிக் குடும்பம் நடத்துவது? இது மட்டும் அல்ல. இந்த உயர்வுடன், இதனைச் சார்ந்து விலைவாசியும் ஏறும். அதை எப்படி எதிர்கொள்வது?”

“கடுமையான விலை உயர்வு. கேளம்பாக்கம் டு பாரிஸ் கார்னருக்கு டிக்கெட் 21 ரூபாய் இருந்தது. ஆனால், தற்போது 45 ரூபாய் ஆகியிருக்கிறது”.

“நகரப்பேருந்துகளில் 20 சதவிகிதமும், புறநகர் மற்றும் விரைவுப் பேருந்துகளில் 66 சதவிகிதமும் கட்டண உயர்வை தமிழக அரசு அமல்படுத்தியிருப்பதால், அது அரசின் மோசமான நிர்வாகச் செயல்பாட்டையே காட்டுகிறது”.

“கட்டண உயர்வு மட்டுமல்லாமல், ரூ.1 முதல் ரூ.10வரை கூடுதலாகச் சுங்கவரியும் மற்றும் விபத்துக் காப்பீடும் மக்கள் தலையில் கட்டப்பட்டுள்ளது. அதாவது, இனி மக்களிடம் பேருந்துக் கட்டணத்துடன் கூடுதலாகப் பணம் வசூல்செய்து சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் அரசுப் பேருந்து விபத்தில் பாதிக்கப்படுபவருக்கான நிவாரணம் ஆகியவை வழங்கப்படும். சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு தற்போது ரூ.505-ஆக உள்ள விரைவுப் பேருந்து கட்டணம் ரூ.250 அதிகரித்து, ரூ.755 ஆகியுள்ளது. அதனுடன் சுங்கவரி ரூ.10 சேர்த்து இனி, ரூ.765.00 ஆக மக்களிடம் வசூல் செய்யப்படும்.மேலும், இனி பேருந்துக் கட்டண உயர்வு டீசல் விலை உயர்வு மற்றும் நிர்வாகச் செலவைப் பொறுத்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளே நிர்ணயம் செய்துகொள்ளலாம். இதனால், இனி எந்த முன்னறிவிப்புமின்றி பேருந்துக் கட்டணம் உயரும்”.

“22,000 அரசுப் பேருந்துகளுக்கு 1,40,000 பணியாளர்களை அதிகப்படியாக நியமித்து கூடுதல் செலவினங்களை அரசே ஊழல் செய்வதற்காக அதிகப்படுத்திவிட்டு, அதை மக்கள் தலையில் கட்டுவது என்பது எவ்வளவு மோசமான நிர்வாகச் சீர்கேடு?”

“நிர்வாகத் திறமை சிறிதும் இல்லாத தற்போதைய தமிழக ஆட்சியாளர்கள் பதவி விலகி, ஒரு மாற்று அரசு ஏற்பட வழிவிட்டால்தான் தமிழக மக்களுக்கு விடிவுகாலம் ஏற்படும்”.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...