Thursday, January 4, 2018

சென்னையில் இருந்து 5,158 சிறப்பு பஸ்கள் பொங்கல் பண்டிகைக்காக அரசு ஏற்பாடு

Added : ஜன 04, 2018 01:43

சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், கூடுதலாக, 5,158 சிறப்பு பஸ்களை இயக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.சென்னை, பல்லவன் இல்லத்தில், நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:சென்னையில் இருந்து தினமும், 2,275 பஸ்கள், வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. 


பொங்கல் பண்டிகையையொட்டி, வரும், 11ம் தேதி, 796; 12ம் தேதி, 1,980; 13ம் தேதி, 2,382 என, மொத்தம், 5,158 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.வழக்கமாக, மூன்று நாட்களிலும் இயக்கப்படும் பஸ்களையும் சேர்த்து, மொத்தம், 11 ஆயிரத்து, 983 பஸ்கள் இயக்கப்படும்.அதற்காக, கோயம்பேடு பஸ் நிலையத்தில், 26; தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில், 2; பூந்தமல்லி பஸ் நிலையத்தில், ஒன்று என, 29 முன்பதிவு மையங்கள், வரும், 9ம் தேதி முதல் செயல்படும்.அதேபோல, மற்ற ஊர்களில் இருந்து, 11ம் தேதி, 1,405; 12ம் தேதி, 3,656; 13ம் தேதி, 5,376 என, மொத்தம், 10 ஆயிரத்து, 437 சிறப்பு பஸ்களை இயக்கவும், அரசு திட்டமிட்டுள்ளது.பொங்கலுக்கு பின், 15, 16, 17ம் தேதிகளில், முறையே, 792; 1,548; 1,430 என, மொத்தம், 3,770 சிறப்பு பஸ்கள், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, சென்னைக்கு இயக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

பஸ் நிலையங்கள் எங்கே?பண்டிகை காலங்களில், சென்னை மாநகரில் ஏற்படும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஐந்து இடங்களில், சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. செங்குன்றம் வழியாக ஆந்திரா செல்லும், தமிழக மற்றும் ஆந்திர மாநில அரசு பஸ்கள், அண்ணாநகர் மேற்கில் உள்ள, மாநகர பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்* கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் செல்லும் பஸ்கள், சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகேயுள்ள பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்* திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக, கும்பகோணம், தஞ்சை செல்லும் பஸ்கள், தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்* பூந்தமல்லி வழியாக, ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மற்றும் ஓசூருக்கு செல்லும் பஸ்கள், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.* மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, துாத்துக்குடி, திருச்செந்துார், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோவை, எர்ணாகுளம், பெங்களூரு செல்லும் பஸ்கள், வழக்கம் போல், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

நெரிசல்ஏற்படும்பொங்கல் பண்டிகை சிறப்பு பஸ்கள் இயக்கம், வெளியூர் செல்லும் வாகனங்கள் அதிகரிப்பால், வரும், 11 முதல், 13ம் தேதி வரை, தாம்பரம், பெருங்களத்துார் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே, வாகனங்கள், திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு; ஸ்ரீபெரும்புதுார் - செங்கல்பட்டு வழியாக செல்லலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்தீர்களா? கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஏறும் வகையில், 11ம் தேதி முதல், 13ம் தேதி வரை முன்பதிவு செய்துள்ளோர், சம்பந்தப்பட்ட சிறப்பு பஸ் நிலையங்களுக்கு சென்று, பயணிக்க வேண்டும். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருக்கை பூர்த்தியான பஸ்கள், வெளிவட்ட சாலை வழியாக, வண்டலுார் சென்று விடும். எனவே, தாம்பரம், பெருங்களத்துாரில் ஏறும் வகையில் முன்பதிவு செய்துள்ளோர், ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிலையம் சென்று பயணிக்கலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024