பணி விலகிய ராணுவ வீரருக்கு இயலாமை ஓய்வூதியம் தர உத்தரவு
Added : ஜன 03, 2018 01:01
சென்னை: ராணுவ விதிப்படி, 10ஆண்டு பணியை பூர்த்தி செய்யாத ராணுவ வீரருக்கு, இயலாமை ஓய்வூதியம் வழங்க, ராணுவ தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர், நரசய்யா கோமுலா, 35. இவர், 2001ல், ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 2007 செப்டம்பரில், 20 நாட்கள் விடுமுறையில் சென்ற போது, விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அடுத்தவர்களின் உதவியுடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டார். பின், பணியில் இருந்து விலகிய கோமுலா, இயலாமைக்கான ஓய்வூதியம் அளிக்க கோரி விண்ணப்பித்தார். 10 ஆண்டுகள் பணியை பூர்த்தி செய்யாததால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னையில் உள்ள ராணுவ தீர்ப்பாயத்தில், இயலாமைக்கான ஓய்வூதியம் அளிக்க உத்தரவிடக்கோரி, கோமுலா மனு தாக்கல் செய்தார்.
வழக்கு விசாரணையின் போது, ராணுவ அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில், 'கோமுலா, விடுப்பில் இருந்த போது, விபத்தில் சிக்கி உள்ளார்; இதற்கும், ராணுவ பணிக்கும் தொடர்பில்லை' என, தெரிவித்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாபு மேத்யூ பி ஜோசப், உறுப்பினர், சுரேந்திரநாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர், 10ஆண்டு பணியை முடிக்காவிட்டாலும், ராணுவத்தில் பணியாற்றி உள்ளார். தற்போது, இயலாமையில் இருப்பதால், அவரது குடும்பத்தை வழி நடத்த, அவருக்கு பண உதவி வேண்டும். எனவே, மனுதாரருக்கு, ராணுவ அமைச்சகம் குறைந்தபட்ச ஓய்வூதியம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment