Saturday, January 13, 2018

நாளை பொங்கல் பண்டிகை. சாதி, மத, இன வேறுபாடு இல்லாமல் தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும் இனிய நாள். 
 
நாளை பொங்கல் பண்டிகை. சாதி, மத, இன வேறுபாடு இல்லாமல் தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும் இனிய நாள். தை பொங்கல் என்பது தமிழர்களின் தனி அடையாளம். வயலும் வயல் சார்ந்த வெளிகளுமான மருதம் நிலத்தை அதிகம் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் கூறியபடி, ‘‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்’’ என்று உழவுத்தொழிலை மேன்மைப்படுத்திய இனம் தமிழ் இனம். தமிழன் எப்போதும் நன்றியுடையவன். அதனால்தான் இயற்கைக்கும், உழவுத்தொழிலுக்கு ஆதாரமான மண்ணுக்கும், விண்ணுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி பாராட்டும் தமிழனின் நாகரிகம்தான் பொங்கல் திருநாள். வளமிக்க மாதம் தை மாதம். மழை மறைந்து, குளிர் குறைந்து, இதமான வெயில் படர்ந்து, நிலம் விளைந்து, அறுவடை முடிந்து, குடும்பங்களில் பொருளாதாரம் வந்து சேரும் மாதம் தை மாதம். கையில் காசு வரும் மாதம் தை மாதம். அதனால்தான் தை பிறந்தால் வழிபிறக்கும் என்கிறோம்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்கிறார்கள். ஆனால், விவசாயிகளின் நிலைமை எப்போதும் மகிழ்ச்சியில் இல்லை. உழவன் கணக்கு பார்த்தால், உழக்கு மிஞ்சாது என்பது தமிழ்நாட்டு பழமொழி. விளைந்தால் விலை இல்லை. விலை இருந்தால் விளைச்சல் இல்லை. விவசாயம் லாபகரமான தொழில் இல்லை என்பதால்தான், பல கிராமத்து குடும்பங்கள் நகரங்களை நோக்கி நகர ஆரம்பித்து விட்டனர். எல்லை கற்கள் மட்டும் இருந்த விளைநிலங்கள், இப்போது வீட்டுமனை கற்கள் நிறைந்து கட்டாந் தரையாகிவிட்டது. ‘‘கரும்பு நட்டேன் விற்கவில்லை. வாழை நட்டேன் விற்கவில்லை. நெல் நட்டேன் விற்கவில்லை. கல் நட்டேன் விற்றுவிட்டது’’ என்பது ‘‘விவசாயிகள் ஏன் விளைநிலங்களை விற்கிறார்கள்’’ என்பதுபற்றி எழுதப்பட்ட ஒரு சோகமான கவிதை. விவசாயிகளின் விளைநிலங்கள், ஏன் வீட்டுமனை நிலமாக ஆகிறது என்பதை அரசுகள் எண்ணிப்பார்த்து அவசர அவசியமாக நடவடிக்கை எடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது.

விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவேண்டும் என்று மத்திய–மாநில அரசுகள் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கின்றன. நமது பிரதமர் நரேந்திரமோடி கூட 2022–ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கில் அறிவிப்புகளை வெளியிட்டார். அரசாங்கங்கள் விரும்புகின்றன. ஆனால், அதற்குரிய திட்டங்களும் இல்லை. நிதியும் ஒதுக்கப்பட வில்லை. இந்தியா விவசாய நாடு. விவசாயத்தை பெருக்கினால்தான் நாடு செழிப்பை காணமுடியும். விவசாயத்துக்கான திட்டம் வகுக்கும்போது அதிகாரிகளால் மட்டும் திட்டங்கள் வகுக்கப்படாமல், சேற்றில் உழன்று கொண்டிருக்கும் விவசாய பெருமக்களையும் பிரதிநிதிகளாக சேர்த்துக்கொண்டு வகுக்கவேண்டும். விவசாயம் வளர ஒரு சுலபமான வழி. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமி‌ஷன் கூறியதுபோல, விவசாய உற்பத்தி செலவோடு 50 சதவீத தொகையை சேர்த்து விலை நிர்ணயம் செய்தால்தான் விவசாயம் தழைக்கும். அந்த காலகட்டங்களில்தான் பொங்குகிற பொங்கலில் சர்க்கரை இனிக்கும். அடுத்துவரும் ஆண்டுகளிலாவது பொங்கலை விவசாயிகளுக்கு இனிப்பான பொங்கலாக்க மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...