Wednesday, January 24, 2018

சென்னை இன்ஜினீயர் திருமணத்தை நிறுத்திய காதலி - மணக்கோலத்தில் தவித்த பட்டதாரிப் பெண்

நமது நிருபர்



தாலிகட்டும் நேரத்தில் சென்னை இன்ஜினீயரின் திருமணத்தை அவரின் காதலி வீட்டினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் குமார். இன்ஜினீயர். இவருக்கும் திருவள்ளூர் மணவாள நகரைச் சேர்ந்த எம்.சி.ஏ பட்டதாரிப் பெண்ணுக்கும் திருமணத்தை நடத்த பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதன்படி திருமண நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இருவருக்கும் வெகுவிமர்சையாக நேற்று (22.1.2018) திருமணம் நடத்தப்படவிருந்தது. அதற்கு முன்பு ஜனவரி 21-ம் தேதி இரவு வரவேற்பு நிகழ்ச்சி திருவள்ளூர் மணவாளநகரில் நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்தினர். பரிசு பொருள்களைக் கொடுக்கும்போது மணமக்களுடன் அவர்கள் போட்டோவும் எடுத்துக்கொண்டனர். அப்போது, மணமக்கள் இருவரும் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் இரவில் அனைவரும் தூங்கச் சென்றனர். திருமணத்துக்கான அலங்காரம் மணமகளுக்கு நேற்று காலை நடந்தது. மணமகன் குமாரையும் தயார்படுத்த அவரது அறைக்கு உறவினர்கள் சென்றனர். அங்கு அவர் இல்லை. உடனடியாக அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டனர். அந்த நம்பரும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. குமாரின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை மணமகள் வீட்டினரால் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் மணமகள் வீட்டினர் அதிர்ச்சியடைந்தனர்.

மணமகன் தலைமறைவானத் தகவல் கேட்டு மணமகள் அதிர்ச்சியில் உறைந்தார். திருமணத்துக்கு வந்தவர்களிடம் பதில் சொல்ல முடியாமல் மணமகள் வீட்டினர் தவித்தனர். வரவேற்பு நிகழ்ச்சி வரை மணமக்கள் மகிழ்ச்சியாகவே இருந்தனர். தாலிகட்டும் நேரத்தில் மணமகன் தலைமறைவானது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. முகூர்த்த நேரம் முடிந்தும் மணமகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் திருமணம் நின்றுபோனது.

இதனால் மனவேதனையடைந்த மணமகள் வீட்டினர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு, மணமகன் குமாரை நள்ளிரவில் ஒரு தரப்பினர் சந்தித்துள்ளனர். அப்போது, குமாருக்கும் அந்த தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகே மணமகன் குமார் மாயமாகியிருப்பது தெரியவந்தது. குமாரிடம் தகராறு செய்தவர்கள் யார் என்று போலீஸார் விசாரித்தபோது, குமார், ஒரு பெண்ணை காதலித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தப் பெண்ணின் தரப்பினரே குமாரிடம் தகராறு செய்ததும் தெரிந்தது.

இந்தத் தகவலையறிந்த மணமகள் வீட்டினர், நல்லவேளை திருமணத்துக்கு முன்பே மணமகனின் சுயரூபம் தெரிந்துவிட்டது. இருப்பினும் திருமணத்துக்கு செலவு செய்த பணத்தை மணமகன் வீட்டிலிருந்து பெற்றுத்தரும்படி போலீஸாரிடம் கோரிக்கை வைத்தனர். மணமகள் வீட்டினரின் கோரிக்கையை மணமகன் வீட்டினரும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, வழக்கு சமரசமாக முடித்துவைக்கப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024