Wednesday, January 24, 2018

டாக்டரும் இல்லை; செவிலியரும் இல்லை! ஸ்ட்ரெச்சருக்காக ஒரு மணி நேரம் போராடிய பெண்ணுக்கு காரில் பிரசவம்!

RAGHAVAN M

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அலட்சியத்தால் வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு காரிலேயே பிரசவமான அவலம் நடந்திருக்கிறது.

திருவாரூர் அருகே புளிச்சக்காடு கிராமத்தைச் சேர்ந்த தனலெட்சுமி என்ற கர்ப்பிணிக்கு நேற்று (21-ம்தேதி) நள்ளிரவு பிரசவ வலியெடுக்க, வாடகைக் காரில் அவசரமாகத் திருவாரூர் அரசு மருத்தவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். தனலெட்சுமியுடன் வந்த உறவினர்கள், விரைந்தோடிச் சென்று காரிலிருந்து தனலெட்சுமியைக் கொண்டுவர ஸ்ட்ரெச்சர் கேட்டுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, செவிலியர் மற்றும் மருத்துவரின் உதவியை நாடியிருக்கின்றனர். அப்போது, அவர்களும் அங்கு இல்லை. இப்படி உறவினர்கள் அலைந்த ஒரு மணிநேரப் போராட்டத்துக்குள் காரிலேயே தனலெட்சுமிக்கு குழந்தை பிறந்துவிட்டது.

தனலெட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்த பெண்கள், துணியால் மறைத்து உதவியிருக்கிறார்கள். அதன்பின் அங்கிருந்தவர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை எதிர்த்துக் குரல்கொடுக்க ஆரம்பித்ததும் குழந்தையும் தனலெட்சுமியும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இந்த மருத்துவமனைக்கு இரவு நேரத்தில் வரும் நோயாளிகளுக்கு ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழப்புகள் அடிக்கடி ஏற்படுகிறது. கடந்த மாதத்தில் திடீர் மாரடைப்பால் வந்த நோயாளிக்கு, உங்களுக்கு ஒன்றுமில்லை என்று கூறி வெளியே அனுப்பிவிட்டார்கள். அவர், மருத்துவமனை வளாகத்திலேயே படுத்து, பனியால் நடுங்கி உயிரிழந்தார். எனவே, தனலெட்சுமிக்கு நேர்ந்த அவலம் குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர், இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024