Tuesday, January 16, 2018

அங்கமுத்து தற்கொலை கடிதம்: பெரியார் பல்கலை. ஊழல் பற்றி விசாரணை தேவை!

 


By DIN | Published on : 16th January 2018 07:36 PM |

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளரும், துணைவேந்தர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டவருமான அங்கமுத்து அவரது தற்கொலை கடிதத்தில் தெரிவித்துள்ள குற்றச்சாற்றுகள் அதிர்ச்சியளிக்கின்றன. அக்கடிதத்தின் மூலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஊழலைத் தவிர வேறொன்றும் நடக்கவில்லை என்பது தெளிவாகிறது. இது மிகவும் கவலையளிக்கிறது.

முன்னாள் பதிவாளர் அங்கமுத்துவின் தற்கொலை கடிதத்தில் அவரது பணிக்காலத்தில் துணைவேந்தராக இருந்த சுவாமிநாதன் செய்த ஊழல்கள் குறித்தும், அதற்கு தாமும் உடந்தையாக இருந்தது குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. துணைவேந்தர் சுவாமிநாதன் பதவிக்காலத்தில் நிரப்பப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை கையூட்டு வசூலிக்கப்பட்டுள்ளது; இணைப்புக் கல்லூரிகளில் புதிய பாடங்களுக்கு அனுமதி அளிக்க தலா ரூ.1 லட்சம் கையூட்டு வசூலிக்கப்பட்டுள்ளது; விடைத்தாள்கள் கொள்முதல் செய்வதற்கு மட்டும் மதுரை விமலா பேப்பர் நிறுவனத்திடமிருந்து ரூ.85 லட்சம் கையூட்டு பெறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, துணைவேந்தர் சுவாமிநாதனின் ஊழல்களுக்கு உடந்தையாக இருந்ததற்காக தமக்கு அவர் ரூ.10 கோடி கமிஷன் கொடுத்ததாகவும், ஊழல் குறித்த அனைத்து ஆவணங்களையும் சுவாமிநாதன் எடுத்துச் சென்று விட்டதாகவும் அங்கமுத்து கூறியுள்ளார்.

 அங்கமுத்து கூறியுள்ள குற்றச்சாற்றுகள் எதுவும் புதியதல்ல. இந்தக் குற்றச்சாற்றுகள் அனைத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும், நானும் பல தருணங்களில் அம்பலப் படுத்தியுள்ளோம். பா.ம.க. முன்வைத்த குற்றச்சாற்றுகளை அங்கமுத்துவின் தற்கொலைக் கடிதம் உறுதி செய்துள்ளது. அங்கமுத்துவின் தற்கொலைக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள புகார்கள் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல்களில் ஒரு சிறு பகுதி மட்டும் தான். இதை விட பல மடங்கு ஊழல்கள் அங்கு நடந்துள்ளன. பல்கலைக்கழக பேராசிரியர்கள் செய்த தவறுகள் குறித்து தங்களுக்கு வேண்டியவர்கள் மீது புகார் கடிதங்களை அனுப்ப வைத்து, அதனடிப்படையில் பேராசிரியர்கள் மீது விசாரணைக்கு ஆணையிடுவது, விசாரணைக்கு ஆளாக்கப்படும் பேராசிரியர்களை குற்றச்சாற்றுகளில் விடுவிக்க தமது தரகர்கள் மூலம் பேரம் பேசி பணம் வசூலிப்பது என விதவிதமான ஊழல்களை முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனும் அவரது குழுவினரும் செய்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

சுவாமிநாதன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுகள் அனைத்தையும் நிரூபிக்க அங்கமுத்து தற்கொலை கடிதம் ஒன்றே போதுமானது. அங்கமுத்து இந்த ஊழல் வளையத்திற்கு வெளியில் இருந்தவர் அல்ல. அவரும் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனின் ஊழல் கூட்டாளி தான். சுவாமிநாதனுக்கு பணம் வாங்கிக் கொடுத்து, அதற்கான தரகுத் தொகை வாங்கிக் கொள்ளும் தரகராகத் தான் அங்கமுத்து செயல்பட்டுள்ளார். தம்மை மாட்டி விட்டு, சுவாமிநாதன் தப்பித்துக் கொள்ள முயன்றதால் தான் வேறு வழியின்றி அங்கமுத்து தற்கொலை கொண்டார். அதனால் அங்கமுத்துவின் தற்கொலை கடிதத்தை அவரும், சுவாமிநாதனும் செய்த ஊழல்களுக்கான ஒப்புதல் வாக்குமூலமாகத் தான் கருத வேண்டும்.

சுவாமிநாதன் துணைவேந்தராக பணியில் இருந்த போதே அவர் மீது ஏராளமான ஊழல் புகார்களை பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்தது. அவர் மீது விசாரணை நடத்த கையூட்டுத் தடுப்புப் பிரிவும் ஆயத்தமானது. ஆனால், அப்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பழனியப்பனும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியும் தான் அவரைக் காப்பாற்றினார்கள். இப்போது கூட பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக குழந்தைவேலு என்பவர் நியமிக்கப்பட்டதற்கு காரணம் ஊழல் குற்றச்சாற்றுகளில் இருந்து சுவாமிநாதனைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான். சுவாமிநாதன் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பணியாற்றிய போது அவருக்கு துணையாக இருந்தவர் குழந்தைவேலு. அவரை பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமனம் செய்தால் சுவாமிநாதன் மீதான ஊழல் குற்றச்சாற்றுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றுவார் என்பதற்காகவே ஆட்சியாளர்களின் ஆலோசனைப்படி அவருக்கு துணைவேந்தர் பதவி தரப்பட்டுள்ளது.

பேராசிரியர்கள் நியமனம், கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்டவற்றில் ஊழல் நடப்பது பெரியார் பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடக்கும் ஒன்றல்ல. தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும் இத்தகைய ஊழல் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் கல்விக்கூடங்கள் அனைத்தும் கொள்ளைக்கூடங்களாக மாறி விட்டன. பெரியார் பல்கலைக் கழகத்தில் சுவாமிநாதன் துணைவேந்தராக இருந்த போது நடைபெற்ற ஊழல்கள் குறித்தும், அவருக்கு ஆதரவாக இருந்த அமைச்சர்கள், உயர்கல்வித்துறை செயலாளர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி தமிழகத்தின் மற்ற பல்கலைக்கழகங்களில் நடந்த இதேபோன்ற ஊழல்கள், துணைவேந்தர் நியமன ஊழல்கள் குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆளுனர் ஆணையிட வேண்டும்.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...