Thursday, January 11, 2018

ஜெ., இருந்தபோது பேச அஞ்சியவர்கள் இன்று துள்ளி குதிக்கின்றனர்: செம்மலை

Added : ஜன 11, 2018 01:38

சென்னை: ''ஜெ., ஆட்சியிலிருந்தபோது, வெளியில் வந்து பேச அஞ்சியவர்கள் எல்லாம், இன்று துள்ளி குதிக்கின்றனர்,'' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செம்மலை தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:


அ.தி.மு.க., - செம்மலை: கவர்னர் உரையை வைத்து, ஆட்சியை கணித்து விடலாம். ஆட்சியின் தொலைநோக்கு பார்வையை, கவர்னர் உரை பிரதிபலிக்கிறது. ஜெ., அரும்பாடுபட்டு உருவாக்கிய ஆட்சியை, முதல்வர் மற்றும் துணை முதல்வர் திறம்பட, ஆட்சி செய்து வருகின்றனர்.


அ.தி.மு.க., ஆட்சி என்றாலே, அமைதியாக இருக்கும்; அராஜகம் இருக்காது; மக்கள் பயமின்றி வாழலாம். அ.தி.மு.க., ஆட்சியை பொறுத்தவரை, மக்கள் கவலையின்றி இருக்கலாம். இந்த ஆட்சியை கவிழ்ப்போம். ஓரிரண்டு மாதங்களில் கவிழ்த்து விடுவோம் எனக் கூறி வருகின்றனர்.
ஜெ., ஆட்சியிலிருந்தபோது, வெளியில் வந்து பேச அஞ்சியவர்கள் எல்லாம், இன்று துள்ளி குதிக்கும் நிலை உள்ளது.


இந்த ஆட்சி மீது, எதிர்க்கட்சியினர், கற்பனையான குற்றச்சாட்டை கூறுகின்றனர். கடும் நிதி நெருக்கடியிலும், ஜெ., கொண்டு வந்த திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசிடம் மண்டியிடுவதாக, கற்பனையான குற்றச்சாட்டை கூறுகின்றனர்.
நாங்கள் ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்கிறோம்; எதிர்க்க வேண்டியதை எதிர்க்கிறோம்.
மோட்டார் வாகன சட்டம், முத்தலாக் சட்டம் உட்பட பலவற்றை எதிர்க்கிறோம். 'உதய்' திட்டத்தை எதிர்த்தோம்; நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட பின் ஆதரித்தோம். மீத்தேன் திட்டத்திற்கு, தி.மு.க., ஆட்சியில் ஒப்புதல்அளிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின்: இது தொடர்பாக, பல முறை விளக்கம் அளித்துள்ளேன். மீத்தேன் திட்டம் ஆய்வுக்கு தான் ஒப்புதல் அளித்தோம். திட்டம் நிறைவேற்ற, ஒப்புதல் அளிக்கவில்லை.


செம்மலை: ஆய்வுக்கு ஒப்புதல் அளித்தால்,திட்டத்திற்கு ஆதரவு என்று தானே அர்த்தம்.
ஸ்டாலின்: பல திட்டங்களின் ஆய்வுக்கு அனுமதி அளிப்போம். அதில் சிலவற்றை மட்டும் ஏற்றுக் கொள்வோம். அனைத்தையும் ஏற்பதில்லை.


இவ்வாறு விவாதம் நடந்தது.
அ.தி.மு.க.,வினருடன்
தினகரன் வாக்குவாதம்!


அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செம்மலை பேசுகையில், ஸ்டாலின் அறிக்கை குறித்து, சில கருத்துக்களை தெரிவித்தார். அதற்கு, தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்டாலினுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர், செம்மலையின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து, சில கேள்விகளை எழுப்பினார். இரு தரப்பிலும் கடும் விவாதம் நடந்தது. அதைத் தொடர்ந்து, செம்மலை மற்றும் ஸ்டாலின் பேசியது, சபைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக, சபாநாயகர் அறிவித்தார்.


அதன்பின், அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க.,வினருக்கும், சுயேச்சை எம்.எல்.ஏ., தினகரனுக்கும் இடையே, கடும் வாக்குவாதம் நடந்தது. பரஸ்பரம் குற்றம் சாட்டினர். அதையடுத்து, செம்மலை, துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர் தங்கமணி, தினகரன் ஆகியோர் பேசிய அனைத்தும் நீக்கப்படுவதாக, சபாநாயகர், தனபால் அறிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024