Monday, January 8, 2018

தற்காலிக ஊழியர்களை கொண்டு அரசு பஸ்களை இயக்க நட வடிக்கை எடுத்திருந்த நிலையில் அந்த பஸ்களில் பயணம் செல்ல பயப்பட்டனர். சிலர் பயணத்தை தவிர்த்தனர். 
 
சாத்தூர்,

விருதுநகர் மாவட்டத்தில் 4-வது நாளாக போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நேற்றும் தொடர்ந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள போக்குவரத்துக்கழக பஸ்களில் 80 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் காலை 6 மணிக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டதாலும், பல கிராமங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் நிறுத்தப்பட்டதாலும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

மொத்தமுள்ள 1,940 தொழிலாளர்களில் 557 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்காலிக ஊழியர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டன.

சாத்தூர் பணிமனையில் மொத்தமுள்ள 57 பஸ்களில் 40 பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. இங்கு 20 பேர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு சீருடை ஏதும் வழங்கப்படாதநிலையில் பணியாற்றினர். கண்டக்டர்களுக்கு பணப்பை வழங்கப்படாததால் மஞ்சள் பை மற்றும் பாலித்தீன் பைகளை பயன்படுத்தினர். மேலும் அவர்களுக்கு டிக்கெட் வழங்கும் எந்திரம் கொடுக்கப்படவில்லை. அனைவரும் டிக்கெட் சீட் கிழித்து கொடுத்தனர்.

பெரும்பாலான பஸ்களுக்கு அவை செல்லும் பெயர்பலகைகளை டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தங்களது சொந்த செலவில் வாங்கி எழுதி வைத்து ஓட்டி வந்துள்ளனர். வேலை நிறுத்தம் செய்ததால் அவற்றை கையோடு எடுத்து சென்று விட்டநிலையில் தற்போது பெயர் பலகை இல்லாமல் வெள்ளைத்தாளில் எழுதி ஒட்டி வைத்து பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் குழப்பம் அடைந்தார்கள். ஒரு சில பஸ்களில் டேப்ரிக்கார்டர் போன்றவற்றை ரெகுலராக ஓட்டிய டிரைவர்கள் தனது சொந்த செலவில் வைத்திருந்தார்கள். தற்போது அதனையும் அவர்கள் எடுத்துச்சென்று விட்டனர்.

பஸ் நிறுத்தும் இடங்களை முறையாக தெரிந்து வைத்திருக்காததால் விவரமான பயணிகளின் வழிகாட்டுதலோடுதான் பஸ் நிறுத்தத்தை அடையாளம் காண வேண்டியிருந்தது. கட்டண விவரம் தெரியாமலும் தடுமாறினார்கள். மேலும் சாத்தூர் உள்ளிட்ட முக்கிய பஸ் நிலையங்களில் பஸ்களை நிறுத்தும் உரிய இடம் கூட தெரியாமல் புதிய டிரைவர்கள் திணறியதைக்காணமுடிந்தது. அதேபோல முறையாக விசில் கொடுக்க கூட தெரியாத கண்டக்டர்களும் இருந்தனர்.

முந்தைய காலங்களில் வேலை நிறுத்தம் செய்யும்போது புதிய டிரைவர் இயக்கும் பஸ்சுக்கு ஏற்கனவே பணியாற்றிய கண்டக்டர் இருப்பார்கள். கண்டக்டர் புதியவர் என்றால் டிரைவர் முன்பே பணியாற்றியவராக இருப்பார். ஆனால் தற்போது இருவருமே புதிய நபர்களாக இருந்ததால் பெரும் சிரமம் ஏற்பட்டது.

விடுமுறைதினமான நேற்று பெரும்பாலான இடங்களில் பஸ்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. எனினும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

தற்காலிக ஊழியர்கள் பணியாற்றிய பஸ்களில் பயணிக்க அஞ்சி சிலர் அதனை தவிர்த்து கூட்டம் அதிகமாக இருந்த நிலையிலும் தனியார் பஸ்களை நாடினர்.

வேலைநிறுத்தம் செய்து வரும் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மின்வாரிய ஓய்வுபெற்றோர் நலஅமைப்பின் மாவட்ட தலைவர் செல்வராஜ், அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட செயலாளர் தங்கப்பழம், ஓய்வு பெற்ற ஆசிரியர் அமைப்பின் சார்பில் சிவபெருமான், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஜெயக்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டக்கிளை செயலாளர் கருப்பையா, அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமசுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி நிறைவுரையாற்றினார்.

No comments:

Post a Comment

Man submits fake NEET cert at AIIMS, held

Man submits fake NEET cert at AIIMS, held  TIMES OF INDIA 28.10.2024  Ramanathapuram : Ramanathapuram district police have arrested a 22-yea...