Monday, January 8, 2018


40 ஆயிரம் தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள்...களமிறக்கம்!
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின், 'ஸ்டிரைக்'கை முறியடிக்கும் வகையில், 40 ஆயிரம் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை, இன்று முதல் களமிறக்க அரசு, தீவிரம் காட்டி வருகிறது. பணிக்கு வராத, 52 ஆயிரம் ஊழியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் பிடிவாதம் காட்டி வருவதால், ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வருவதில் இழுபறி நீடித்து வருகிறது.




அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரி, நான்கு நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். அதனால், மாநிலம் முழுவதும், 80 சதவீத பஸ்களின் போக்குவரத்து முடங்கி, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மொத்த ஊழியர்கள், 1.43 லட்சம் பேரில், முதல் நாளில், 1.13 லட்சம் பேர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

முடங்கியது

பின், ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் முயற்சியால், 50 ஆயிரம் பேர் வரை பணிக்கு திரும்பி உள்ளதாகவும், 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், பஸ் போக்குவரத்து, நான்காவது நாளாக நேற்றும் முடங்கியது. தொழிலாளர்கள் பணிக்கு திரும்புமாறு, உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

அரசு தரப்பிலும் வேண்டுகோள் விடுத்தாலும், ஊழியர்கள் பணிக்கு திரும்பாமல், போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். தொழிற்சங்கங்களின் விடாப்பிடியால்,ஸ்டிரைக்கைமுடிப்பதில், இழுபறி நீடிக்கிறது.எனவே, பஸ் ஊழியர்களின், ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர, அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன்படி, நிலைமையை சமாளிக்க, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் டிரைவர், கண்டக்டர் வேலைக்கு பதிவு செய்துள்ள, 40 ஆயிரம் பேர் தற்காலிகமாக களமிறக்கப்படுகின்றனர்.அவர்களில், 20 ஆயிரம் பேரை, இன்று பரிசோதனை முறையில், பஸ்களை இயக்க வைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கல்லுாரி டிரைவர்கள்

இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:பஸ் ஊழியர்கள், 2016 மே மாதம், 'ஸ்டிரைக்' நடத்திய போது, கல்லுாரி, பள்ளிகள் விடுமுறையில் இருந்ததால், அங்குள்ள டிரைவர்களை, பஸ்களை இயக்க பயன்படுத்தினோம்.

தற்போது, பள்ளி, கல்லுாரிகள் செயல்படுவதால், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், தனியார் பஸ்களின் மாற்று ஊழியர்கள் மற்றும் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்திருந்தவர்களை தேர்வு செய்துள்ளோம்.


வேலை வாய்ப்பகங்களில், 40 ஆயிரம் பேர் டிரைவர், கண்டக்டர் வேலைக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களை வைத்து, அனைத்து வழித்தடங்களிலும், இன்று முதல் பஸ்கள் இயக்கப்படும். பஸ்களை விபத்தின்றி பாதுகாப்பாக ஓட்ட, தற்காலிக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பறந்தது நோட்டீஸ்

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட, 18 தொழிற்சங்கங்களை சேர்ந்த, 52 ஆயிரம் பேருக்கு, முதற்கட்டமாக, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு வருகிறது. 'உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது; இதுகுறித்து, ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்' என, அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு வாரத்தில், இவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

முதலில், போராட்டம் துவங்கிய, 4ம் தேதி இரவு, திடீரென பஸ்களில் இருந்து, பயணியரை பாதி வழியில் இறக்கி விட்டவர்கள், பஸ் நிறுத்தத்தில், பஸ்களை குறுக்கே நிறுத்தியவர்களிடம் விளக்கம் கேட்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- நமது நிருபர் குழு -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024