இன்று கூடுகிறது தமிழக சட்டசபை : புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
சென்னை: புத்தாண்டில், தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று துவங்குவதால், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்துகிறார். இந்தத் தொடரில், மக்கள் பிரச்னைகள் குறித்து, புயலை கிளப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தமிழக சட்டசபை இன்று காலை, 10:00 மணிக்கு கூடுகிறது. இதில் பங்கேற்க, காலை, 9:55க்கு, கவர்னர் வருகிறார். அவரை, சபாநாயகர், தனபால் வரவேற்கிறார். பின், சபாநாயகர் இருக்கையில் அமரும் பன்வாரிலால் புரோஹித், ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்ததும், அதன் தமிழ் உரையை, சபாநாயகர் தனபால், அவையில் வாசிப்பார். அதைத் தொடர்ந்து கூட்டம் முடிவடையும். பின், மதிய நேரத்தில், சபாநாயகர் தலைமையில், அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடக்கும். அதில், எத்தனை நாள் கூட்டத் தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். இதையடுத்து, நடக்கவுள்ள கூட்டத் தொடரில், கேள்வி நேரம் முடிந்ததும், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். இதில், ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேச உள்ளனர். இறுதி நாளில், முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து பேச உள்ளார். அதைத் தொடர்ந்து சட்டசபை கூட்டம் ஒத்தி வைக்கப்படும். மார்ச் மாதத்தில், 2018- - 19க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
கவர்னர் உரையாற்றியதும், பஸ் ஸ்டிரைக், 'நீட்' தேர்வு, ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம், உள்ளாட்சி வார்டு தொகுதிகள் மறுவரையறை குளறுபடி, 'ஒக்கி' புயல் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, புயலை கிளப்ப எதிர்கட்சிகளான, தி.மு.க., - காங்கிரஸ்
திட்டமிட்டுள்ளன.
சுயேட்சை எம்.எல்.ஏ., தினகரனுக்கு, சட்டசபையில், 148ம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.
ஆனால், தினகரன் அணி எம்.எல்.ஏ., வெற்றிவேல், 'நான் சட்டசபை பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளை காண விரும்புகிறேன். அதற்கு அனுமதி சீட்டு வேண்டும்' என, சட்டசபை செயலர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அவர் பார்வையாளர்கள் மாடத்தில் அமர முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சட்டசபை நிகழ்ச்சிகள் பொதிகை, 'டிவி'யில் நேரடியா ஒளிபரப்பாக உள்ளன. இன்று கூட்டத்தொடர் துவங்குவதால், சட்டசபை வளாகத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
'நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்' : ''சட்டசபையில், வாய்ப்பு உருவானால், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று துவங்கவுள்ள நிலையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில், முதன்மை செயலாளர் துரைமுருகன் உட்பட, எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். அப்போது, சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகள் குறித்தும், அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது, கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கறுப்பு சட்டை அணிந்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்து வெளியே வந்த ஸ்டாலின் நிருபர்களிடம், ''சட்டசபையில், வாய்ப்பு உருவானால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம், குட்கா போன்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது,'' என்றார்.
No comments:
Post a Comment