Sunday, January 7, 2018

கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறை

By DIN  |   Published on : 07th January 2018 04:48 AM 
lalu1
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் சிறைக்குச் செல்வது, இது, இரண்டாவது முறையாகும்.


லாலு பிரசாத் உள்ளிட்ட குற்றவாளிகளின் தண்டனை விவரத்தை ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் சனிக்கிழமை அறிவித்தார்.


லாலு பிரசாத், கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் 1994-ஆம் ஆண்டு வரை முதல்வராகப் பதவி வகித்தபோது, தேவ்கர் கருவூலத்தில் இருந்து ரூ.89.27 லட்சத்தைக் கையாடல் செய்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், லாலு பிரசாத் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என்று கடந்த 23-ஆம் தேதி தீர்ப்பளித்தது. பிகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா உள்ளிட்ட 6 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
நீதிமன்றம் தீர்ப்பளித்ததில் இருந்து லாலு பிரசாத், ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பது தொடர்பான வாதம், சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங், சிறையில் உள்ள லாலு பிரசாத் உள்ளிட்டோரிடம் விடியோ கான்ஃபரன்சிங் முறையில் விவாதித்து வந்தார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாதத்தின்போது, தனது முதுமையைக் காரணம் காட்டி, தனக்கு விதிக்கப்படும் தண்டனையைக் குறைத்து வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் லாலு பிரசாத் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், தண்டனை தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், சிறையில் உள்ள லாலு பிரசாத்திடம் விடியோ கான்ஃபரன்சிங் முறையில் தண்டனை விவரத்தை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் சனிக்கிழமை அறிவித்தார். இதுதொடர்பாக, சிபிஐ தரப்பு வழக்குரைஞர் ராகேஷ் பிரசாத் கூறியதாவது: 


இந்த வழக்கில், குற்றச் சதி செய்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் படி, லாலு பிரசாத்துக்கு 3.5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.


மேலும், ஊழல் கண்காணிப்புச் சட்டத்தின் கீழ், லாலு பிரசாதுக்கு 3.5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
எனவே, மொத்தம் ரூ.10 லட்சம் அபராதத்தை லாலு பிரசாத் நீதிமன்றத்தில் செலுத்தியாக வேண்டும். இந்தத் தொகையை செலுத்தத் தவறினால், அவர் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். 2 சிறைத் தண்டனைகளையும் அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றார் அவர்.


இதேபோல், மற்ற குற்றவாளிகளான பூல்சந்த், மகேஷ் பிரசாத், பேக் ஜூலியஸ், சுனில் குமார், சுஷில் குமார், சுதீர் குமார், ராஜா ராம் உள்ளிட்டோருக்கும் தலா மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சிவபால் சிங் உத்தரவிட்டார்.
முந்தைய வழக்கு: இதற்கு முன் கடந்த 2013-ஆம் ஆண்டில் வேறொரு கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாதுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2 மாதங்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று, அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

மேலும் சில வழக்குகள்: லாலு பிரசாத்துக்கு எதிராக, தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.97 கோடியை சட்ட விரோதமாக எடுத்தது, சைபாஸா கருவூலத்தில் இருந்து ரூ.36 கோடியை எடுத்தது, தோரந்தா கருவூலத்தில் இருந்து ரூ.184 கோடியை எடுத்தது என மேலும் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பாஜக, ஜேடியு வரவேற்பு: கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், லாலு பிரசாத்துக்கு தண்டனை விதிக்கப்பட்டதை பாஜகவும், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியும் வரவேற்றுள்ளன.
இதுதொடர்பாக, பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறியதாவது:
இந்த வழக்கில் நீதிமன்றம் தனது கடமையை முடித்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தி விட்டது. நாட்டைக் கொள்ளையடிப்பவர்களுக்கு இறுதியில் என்ன கிடைக்கும் என்பதை நீதிமன்றத்தின் தீர்ப்பு தெரிவிக்கிறது என்றார் அவர்.
இதனிடையே, லாலு பிரசாத்துக்கு எதிராக பாஜக எழுப்பிய குற்றச்சாட்டுகளை இந்த தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் உறுதிசெய்துவிட்டது என்று பிகார் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி கூறினார்.


இதேபோல், ஜேடியு கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி கூறுகையில், ''பிகார் அரசியலில் லாலு பிரசாத்தின் அத்தியாயம் முடிவடைந்து விட்டது; புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம், அரசியல்வாதிகள் முறைகேடுகள் செய்வதற்கு அஞ்சுவார்கள்'' என்றார்.


காங்கிரஸ் கருத்து: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.பி.என்.சிங் கூறுகையில், 'காங்கிரஸ் கட்சி எப்போதும் ஊழலுக்கு எதிராகப் போராடி வருகிறது. கூட்டணியைப் பொருத்தவரை, ஆர்ஜேடி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது; தனிப்பட்ட நபர்களுடன் அல்ல' என்றார்.

மேல்முறையீடு
 
லாலு பிரசாதுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக, அவரது மகன் தேஜஸ்வி யாதவ் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: நீதித் துறை தனது கடமையைச் செய்து விட்டது. தீர்ப்பின் விவரத்தை முழுமையாகப் படித்த பிறகு லாலு பிரசாதுக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடுவோம் என்றார் அவர்.


மகள், மருமகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
 
 சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிஸா பாரதி, மருமகன் ஷைலேஷ் குமார் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை 2-ஆவது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக தில்லியில் உள்ள மிஸா பாரதியின் பண்ணை இல்லத்தையும் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இந்த வழக்கில் கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


இந்நிலையில், 2-ஆவது குற்றப்பத்திரிகை சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, இந்த வழக்கின் விசாரணையை சிறப்பு நீதிபதி என்.கே.மல்ஹோத்ரா பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். முன்னதாக, அவர் அமலாக்கத் துறையை கடிந்து கொண்டார்.
அவர் கூறுகையில், 'விசாரணையைத் தொடங்க விடுவீர்களா? இன்னும் எத்தனை குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்வீர்கள்? தேசத்தின் மிக முக்கியமான விசாரணை அமைப்பு இப்படி நடந்துகொள்ளலாமா?' என்றார்.


மிஸா பாரதிக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றின் மூலம் ரூ.1.2 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024