சைக்கிளுக்கு திரும்புவோம்!
By பா. ராஜா |
Published on : 04th January 2018 02:25 AM |
சைக்கிள்தானே என்று சிலருக்கு ஏளனம். ஆனால் அதை சாதாரணமாக எடை போட்டுவிட வேண்டாம். 19-ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சைக்கிள்கள் இன்று உலகம் முழுவதும் சுமார் 100 கோடி எண்ணிக்கையில் புழக்கத்தில் உள்ளது. உலகின் பல நாடுகளில் சைக்கிள் ஒரு முக்கிய போக்குவரத்து சாதனமாக விளங்குகிறது. அதைப் பயன்படுத்துவதன் மூலம் காற்றில் ஏற்படும் மாசைக் குறைக்கலாம். ஒலி மாசைக் குறைக்கலாம். எரிபொருளை சேமிக்கலாம். போக்குவரத்து மிகுந்த பகுதியிலும் எளிதாக ஓட்டிச் செல்லலாம்.
டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் அதிகமானோர் சைக்கிளை பயன்படுத்தி வருகின்றனர். பல நாடுகளில் குழந்தைகள் எப்படிப் பொறுப்புடன் சைக்கிள் ஓட்ட வேண்டுமென்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் பயிற்சியளிக்கப்படுகிறது.
பல்வேறு நாடுகளில் அஞ்சல் துறை தமது பிரதான தபால் விநியோக வாகனமாக இன்றளவும் சைக்கிளைப் பயன்படுத்தி வருகின்றன. லண்டன் ஆம்புலனஸ் சர்வீஸானது, விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு சைக்கிளை இன்றும் பயன்படுத்துகிறது.
நகரமயமாக்கம், தாராளமயமாக்கம் இவையெல்லாம் நமக்கு புதுப்புது நோய்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் முக்கியக் காரணம், காற்று மாசு. நம்மைச் சுற்றி, நாம் மேற்கொள்ளும் பல்வேறு செயல்பாடுகள் மாசு அதிகமேற்படக் காரணமாகின்றன. அவற்றில் காற்று மாசு முக்கியப் பங்கு வகிக்கிறது. காற்றில் கலந்துள்ள புகை நமக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை இதில் முதலிடம் வகிக்கிறது.
புகையில் உள்ள நச்சுப் பொருள்கள் நமக்குப் பல்வேறு நோய்களை உண்டாக்குகின்றன. இந்தியாவில் 2015-ஆம் ஆண்டில் மட்டும் காற்று மாசால் சுமார் 12 லட்சம் பேர் உயிரிழந்தனர். நம் நாட்டில் 2010 முதல் 2015 வரையிலான 5 ஆண்டுகளில் காற்று மாசின் அளவு 13% அதிகரித்துள்ளது. இவையெல்லாம் நவீன நகர வாழ்க்கை குறித்து நமக்கு கிடைக்கும் அபாய எச்சரிக்கைகள்.
மோட்டார் வாகனங்களின் புழக்கமும் அதிகரித்து வருகிறது. மாதந்தோறும் புதுப் புது வடிவங்களில் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இத்தகைய வாகனங்களைப் பல லட்சம் ரூபாய் கொடுத்து வாங்குவதோடு, பல்வேறு நோய்களையும் சேர்த்து இலவச இணைப்பாக வாங்கி வருகிறோம். இரு சக்கர வாகன விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வருமானம் குறைவாக உள்ள மாநிலங்களில் இரு சக்கர வாகன விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. இவற்றைப் பயன்படுத்துவது தனி நபருக்கு சுகமாக இருக்கலாம். வசதியாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஆபத்தானதாகும்.
மேலும், சாலைகளில் ஓடுவதற்கு தகுதியற்ற வாகனங்களும் சாலைகளில் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. இவற்றால் காற்று மாசு அதிகரிப்பதோடு, விபத்துகளும் அதிகரிக்கின்றன.
சுற்றுச்சூழல் மேம்பாட்டைப் பொருத்தவரையில், தற்போது காற்று மாசு குறித்து அதிகம் பேசப்படுகிறது. காற்று மாசைக் குறைக்க, தனியார் வாகனங்கள் பயன்படுத்துவதை மாதத்தில் ஒருநாள் நிறுத்திவிட்டு, அரசுப் போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்துவது, மின்சார கார்கள், பயோ-கேஸ், இயற்கை எரிவாயுவில் இயங்கும் கார்களின் புழக்கத்தை அதிகரிப்பது என பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும், பலன் ஒன்றும் இல்லை.
பெங்களூரு நகரில் காற்று மாசு ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவை போக்குவரத்து வாகனங்களே. காற்று மாசில் 42% அளவு வாகனங்களால் ஏற்படுகிறதாம். இந்த பெருநகரச் சாலைகளில் சுமார் 70 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. இதில் 20% வாகனங்கள் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. இப் பிரச்னைக்குத் தீர்வு காண, மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை அறிமுகப்படுத்த அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை, கொல்கத்தா, புது தில்லி, புணே, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்கள் எல்லாமே காற்று மாசு அதிகமுள்ள நகரங்கள் பட்டியலில் உள்ளன.
காற்று மாசைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருபுறம் நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்களாகிய நமது பங்கும் இதில் அவசியம் இருக்கிறது. அதை உடனே நாம் தொடங்க வேண்டும்.
முதலில், பரண்களிலும் வீட்டு மூலைகளிலும் தூசில் புதைந்து உறங்கும் சைக்கிள்களை வெளியே இறக்குங்கள். அல்லது, புதிதாக சைக்கிளை வாங்குங்கள்! அங்காடிகளுக்குச் சென்று வர, குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் கொண்டுவிட... என்று குறைந்த தூரப் பயணத்துக்கு அதைப் பயன்படுத்தத் தொடங்குவோம். உடற்பயிற்சிக்காக சைக்கிளைப் பயன்படுத்துவோம். சிறிது காலம் கஷ்டமாக இருக்கும். போகப் போக பழகிவிடும்.
நாம் அன்றாடம் சைக்கிளைப் பயன்படுத்துவதன் மூலம் நம் ஆயுள் காலம் அதிகரிக்கிறதாம். உடற்பயிற்சிக்கு உகந்த வாகனம். இதய நோய், மூட்டு வலியைத் தடுக்க உதவுகிறது. எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. இறப்பு விகிதத்தைக் குறைக்கிறது. இவ்வளவு பலன்கள் இருக்கும்போது, நம் உடல் நலத்தைப் பேண சைக்கிளைப் பயன்படுத்துவதில் தவறில்லையே.
பொது சுகாதாரத்தைப் பொருத்தவரையில், சைக்கிள் ஓட்டுவது உடல் நலனுக்கு உகந்தது என்று உலக சுகாதார நிறுவனம் சான்றளித்துள்ளது. என்ன சைக்கிளைத் தேடத் தொடங்கிவீட்டீர்களா!
No comments:
Post a Comment