தீயா வேலை செய்யணும்
By ஆர். நடராஜ் | Published on : 04th January 2018 02:25 AM
தீயோடு விளையாடக்கூடாது என்பார்கள். ஆனால் தினமும் விளையாடிக்கொண்டிருக்கிறோம். 2015-இல் வெள்ளம், 2016-இல் வார்தா புயல், 2017-இல் தீயால் ஆபத்து என்றார்கள். தமிழகம் 2017-இல் தீ கண்டத்திலிருந்து தப்பித்துக்கொண்டாலும் ஆபத்து துரத்திக் கொண்டுதான் இருக்கிறது.ஆனால் டிச.29, மும்பை நகரில் கேளிக்கை விடுதியில் பயங்கர தீவிபத்து 14 உயிர்களை பலி கொண்டது!
மூன்று பெரிய விபத்துக்கள் மும்பையில் 29-ஆம் தேதி நிகழ்ந்தன. ஆகஸ்ட் 29-இல் பருவ மழை காரணமாக அடித்த புயல் 10 உயிர்களை பலி கொண்டது. சரியாக ஒரு மாதம் கழித்து செப்டம்பர் 29 பரேல் ரயில் நிலையம் எல்பின்ஸ்டன் சாலை இணைப்பு மேம்பாலத்தில் நெரிசலில் 23 பயணிகள் சிக்கி உயிர் இழந்தனர்.
இப்போது டிச.29 கமலா நூற்பாலை மேல்தளத்தில் விதிகள் மீறி கட்டப்பட்ட மதுபான விடுதியில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். அதில் 11 பேர் பெண்கள். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவிற்கு டிசம்பர் ஜனவரி மாதங்களில் வருகின்றனர். அவர்கள் குடியேறிய நாடுகளில் பனி மாதங்களில் குளிர் அதிகம். இங்கு மிதமான சீதோஷ்ண நிலை என்பதால் அதை நாடி வருகின்றனர். வந்த இடத்தில் குறுகிய காலத்தில் எல்லா சந்தோஷங்கள், கேளிக்கைகளை அனுபவிக்க அவசரம். கிடைத்த இடத்திலெல்லாம் கூடி மகிழ நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
விபத்து நடந்த மதுபான விடுதியிலும் அவ்வாறு வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பம் நண்பர்கள் உறவினருடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாட்டம் விபரீதத்தில் முடிந்தது. பிறந்த நாள் கேக் வெட்டிய பெண்ணும் இறந்ததுதான் கொடுமை. அதில் ஒருவர் வெளியில் கார் வரை வந்துவிட்டு, தனது உறவினர் பெண் உள்ளே இருக்கிறார் என்று பார்க்கச் சென்றவர் தீயில் அந்த பெண்ணோடு சேர்ந்து உயிரிழந்தார். விதியின் கொடுமையை என்ன என்பது!
பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கேக் வெட்டும்பொழுது மத்தாப்பு பட்டாசு வெடிக்கிறார்கள். வாயில் பெட்ரோல் வைத்து ஊதி நெருப்பினைக் கக்கும் சாகசமும் நடைபெறுகிறது. இம்மாதிரி தருணங்களில் விபத்து நிகழ காத்துக்கொண்டிருக்கிறது. மேலும் விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் வலுவானதாக இருக்காது. கேளிக்கை விடுதி என்பதால் மரத்திலான கூரை, தேக்குப் பலகைகள் பொருத்திய சுவர்கள் என்று எளிதில் தீ பற்றக்கூடிய பொருள்கள் அதிகமாக இருக்கும்.
மேலும் மின்சார இணைப்புகள் பாதுகாப்பின்றி கொடுக்கப்பட்டிருக்கும். மின்சாரக் கம்பிகள் தேவையான பருமன் இல்லாதவையாக இருக்கும். இதனால் மின் தடங்கல், கம்பிகளில் மின் கசிவால் தீப்பொறி ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். இந்தக் காரணங்களால்தான் 70% தீ விபத்துகள் ஏற்படுகின்றன.
கமலா மில் 'ரெஸ்டோபார்' விபத்தில் பலர் புகையில் சிக்கி வெளியேற முடியாமல் பலியாகியுளளனர்.
உயர் மாடி கட்டடங்களில் விபத்து ஏற்பட்டால் வெளியேற தனி படிக்கட்டுகள் இருக்க வேண்டும். உள்ளே வர ஒரு வழி, வெளியேற வேறு வழி வேண்டும். இது இல்லாததால்தான் 2004-ஆம் வருடம் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் வெளியேற வழியின்றி 94 குழந்தைகள் மிதிபட்டு இறந்தன. கமலா மில் விபத்திலும் இதுதான் முக்கிய காரணம். பலர் மூச்சுத்திணறலாலும் மிதிபட்டும் மாண்டனர்.
1975-ஆம் ஆண்டு சென்னையின் முதல் உயர் மாடி ஆயுள் இன்ஷூரன்ஸ் கட்டடத்தில் பெரிய தீவிபத்து, தொடர்ந்து 1981-ஆம் வருடம் ஸ்பென்சர் வணிக வளாகத்தில் விபத்து, அடுத்து 1985-ஆம் வருடம் மூர் மார்க்கெட்டில் விபத்து, 2000-ஆம் வருடம் பாரிமுனை தபால் நிலையத்தில் தீ, 2008 தி.நகர் சரவணா வணிக வளாகத்தில் துவங்கி ரங்கநாதன் தெருவில் 80-க்கும் அதிகமான கடைகள் சேதமடைந்து இரண்டு கோடி ரூபாய் இழப்பு, 2012 எழிலகத்தில், 2016 பாரிமுனை வங்கி கட்டடத்தில், 2017 சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் என்று தொடர் தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன. சென்னையில் முக்கிய அடையாளங்களான இடங்கள் தீக்கிரையாயின.
எல்லா விபத்துகளையும் ஆராய்ந்தால் தவிர்த்திருக்க வேண்டியது நிகழ்ந்துவிட்டதே என்ற ஆதங்கம் ஏற்படும். எந்த ஒரு விபத்தும் பொறுப்பற்ற நடத்தையின் விளைவு என்பது தெளிவாகும். தனிநபர் அஜாக்கிரதை அல்லது விதிகள் மீறுவதற்கு துணை போகும் நிர்வாகம், கட்டமைப்புகளில் உறுதிக்குத் தேவையான தரமான பொருட்களை உபயோகிக்காமல் இருத்தல் போன்ற நேர்மையற்ற செயல்களால் விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
2014-இல் சென்னை புறநகர் மெளளிவாக்கத்தில் உயர் மாடி கட்டடம் ஸ்திரத்தன்மை இழந்து இடிந்ததில் 61 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நீதியரசர் ரகுபதி விசாரணை கமிஷன் போடப்பட்டு பரிந்துரை அளித்துள்ளது. விதிகள் எவ்வாறு மீறப்படுகின்றன என்பது விபத்து விசாரணையில் தெளிவாக தெரிய வந்துள்ளன.
ஒப்பளிக்கப்பட்ட தரையளவிற்கு அதிகமாக கட்டுதல், வரையறுக்கப்பட்ட கட்டட உயரத்திற்கு அதிகமாக எழுப்புதல், கட்டடத்தின் சுற்றுப்புறம் குறைந்த பட்சம் 7 மீட்டர் திறந்தவெளி, அவசர காலத்தில் உயிர் மீட்பிற்கு வசதியாக இருக்க வேண்டும் போன்ற பல விதிகள் மீறப்படுவதால் விபத்துகள் நடைபெறுகின்றன.
முதலில் விதிகளுக்கு உட்பட்டு ஒப்புதல் வாங்கி நிறைவேற்றிவிட்டு காலப்போக்கில் அனுமதியின்றி கூடுதல் கட்டுமானங்கள் இணைக்கப்படுகின்றன. நெரிசல் அதிகமாகின்றது. முக்கியமாக மின் இணைப்புகள் தேவையான தரமான கம்பிகள் மூலம் கொடுக்கப்படுவதில்லை. குளிர்சாதன பெட்டிகள் சகட்டுமேனிக்கு பொருத்தப்படுகின்றன.
எல்லா கட்டடங்களும் ஆண்டுக்கு ஒரு முறையாவது தணிக்கை செய்யப்பட வேண்டும். கட்டடத்தின் ஸ்திரத்தன்மை, மின் இணைப்புகள், எர்த்திங்க் - நிலத்தடி மின்வாங்கி சரிவர உள்ளதா என்பதை துறை வல்லுநர்கள் மூலம் தணிக்கை செய்யப்பட வேண்டும்.
உயர் மாடி கட்டடங்கள் வணிக வளாகங்கள் மருத்துவ மனைகள், எங்கு மக்கள் அதிகமாக கூடுகிறார்களோ அங்கு கட்டாயம் ஆபத்து நிகழும்போது எவ்வாறு வெளியேறுவது என்ற பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
கமலா மில் விபத்திற்குப் பிறகு மும்பையில் பல இடங்களில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு விதிகள் மீறிய கட்டடங்கள் இடிக்கப்பட்டன என்பது காலம் தாழ்ந்த உரிய நடவடிக்கை. சென்னையிலும் பல மருத்துவ மனைகளில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது வரவேற்கத்தக்கது.
முக்கியமாக சிற்றுண்டி விடுதிகள், திரையரங்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரி, தீயணைப்பு அதிகாரி கொண்ட குழு திரையரங்குகளை உரிமம் வழங்கும்போதும் புதுப்பிக்கும்போதும் ஆய்வு செய்ய வேண்டும் என்று திரைப்பட சட்ட விதிகள் உள்ளன. ஆனால் நடைமுறையில் சாதாரணமாக வழங்கப்பட்டு
விடுகிறது.
1979-இல் தூத்துக்குடி லக்ஷ்மி டாக்கீசில் நடந்த தீவிபத்து 77 பேரை பலி கொண்டது. விபத்துக்கு காரணம் மின் கசிவு. தில்லி உபஹார் திரையரங்கில் 1997-இல் நடந்த கொடிய தீ விபத்தில் 59 அப்பாவி மக்கள் வெளியேற முடியாமல் நசுங்கி இறந்தனர். அஜாக்கிரதையாக இருந்துவிட்டால் எந்நேரமும் திரையரங்குகளில் விபத்து ஏற்படலாம்.
விதிகளும் சட்டங்களும் குறைவில்லாமல் இருக்கின்றன. ஆனால் நிறைவேற்றுவதில் தான் சுணக்கம். கட்டடங்களுக்கும் திரையரங்குகளுக்கும் சிபாரிசு பிடித்து அல்லது குறுக்கு வழியில் ஒப்புதலும் தடையின்மை சான்றிதழும் பெற்றுவிடுவதுபோல் மக்கள் விரோதமான செயல் வேறொன்றுமில்லை. விதிகளை மதிக்க வேண்டும்.
'பப் ' எனப்படும் மதுபானம் மற்றும் சிற்றுண்டி விநியோகிக்கும் விடுதிகள் பல நகரங்களில் உள்ளன. தமிழ்நாட்டில் 'பப்' போன்ற விடுதிகள் இல்லாவிட்டாலும் 'பார்' வசதியுடன் பட்டிதொட்டியிலெல்லாம் டாஸ்மாக் கடைகள் உள்ளன! அங்கு நெரிசலில் சுகாதாரமற்ற முறையில் மது விநியோகிக்கப்பட்டு அருந்துகிறார்கள். பீடி, சிகரட்டுக்கு குறைவில்லை.எங்கும் புகை மண்டலம். ஒரு விதியும் புகாத இடம்! இங்கு எப்போது வேண்டுமானாலும் விபத்து நிகழலாம்.
தீயணைப்புத் துறை மிக கடினமான சூழலில் சிறந்த பணி செய்கிறது. எழிலகம் தீ விபத்திலும் சமீபத்தில் நடந்த கொடுங்கையூர் ரொட்டிக் கடை விபத்திலும் தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் 315 தீயணைப்பு நிலையங்களும் இரண்டு மீட்புப்பணி நிலையங்கள் (ஒகேனக்கல், கோத்தகிரி) உள்ளன. ஏழு புதிய தீயணைப்பு நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 349 நீர்தாங்கி வாகனங்கள், தண்ணீர் லாரிகள் 55, அவசர மீட்பு ஊர்திகள் 19, உயர் மாடி கட்டடங்களில் விபத்தினை சமாளிக்க 54 மீட்டர் முதல் 104 மீட்டர் வரை உயரம் செல்லக் கூடிய ஏணிகள் பொருந்திய வாகனங்கள் 5, மற்றும் பலவகை வாகனங்கள் தீயணைப்பதற்கு உதவுகின்றன.
அவசர காலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிக்கு எந்த அளவிற்கு மாநிலங்கள் தயார் நிலையில் உள்ளன என்பது பற்றி மேற்கொண்ட ஆய்வில் தயார் நிலை சுமார் 30 சதவிகிதத்திற்கும் குறைவு என்பது நிதர்சன உண்மை.
தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலங்களில் தயார் நிலை சிறப்பானது என்றாலும் முழுமையான பாதுகாப்பை எட்ட வேண்டும். அதற்கு பணியாளர்களுக்கு சிறப்பான பயிற்சி, உயர்தர நவீன மீட்புப் பணி உபகரணங்கள், தீயணைப்பு உத்திகள் மாற்றத்திற்கு ஏற்றவாறு திறன் மேம்பாடு அவசியமாகிறது. விதிகள் மீறப்பட்டால் உரிமம் பறிக்கப்படும் என்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அப்போதுதான் விதிகள் மீது பயம் இருக்கும்.
போக்குவரத்து விதிகள் இருந்தால் மீறுகிறார்கள். தேர்தல் விதிகள் மீறப்படுகின்றன. சட்டங்கள் இருந்தால் அதில் ஓட்டையைத் தேடுகிறார்கள். வரி விதித்தால் எவ்வாறு ஏய்க்கலாம் என்ற ஆராய்ச்சி செய்வதற்கு நிபுணர்கள் உள்ளார்கள்.
இந்த நிலை மாற வேண்டும். விபத்தின்மையே முழுமையான பாதுகாப்பு என்பதை விதிகளை நிர்வகிப்பவர்கள் உணர வேண்டும். அப்போதுதான் தேவையான விழிப்புணர்வு ஏற்படும்.
தீயா வேலை செய்யணும், தீவிரமாக தீ பாதுகாப்பு செய்யவில்லை என்றால் தீ எல்லாவற்றையும் விரயமாக்கிவிடும்.
No comments:
Post a Comment