Saturday, January 13, 2018

உலகை விழுங்கும் அமேசான் படைகள்!

Published : 10 Jan 2018 16:11 IST


சி.கோபிநாத் | தமிழில் ஆர்.முத்துக்குமார்.



ஹைதராபாத், தெலுங்கானா. அமேசானின் மிகப்பெரிய வேர்ஹவுஸ் வசதி. - கோப்புப் படம். | கே.வி.எஸ். கிரி.

சில காலங்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகையே விலைக்கு வாங்கி விட்டதாக அனைவரும் பயந்தனர். பொறுப்பாண்மை அதிகாரிகள் இது குறித்து நீதிமன்றம் வரை சென்றனர். ஒருநாள் நாம் அனைவருமே மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்காகவே ஏதோ ஒரு விதத்தில் பணி புரிவோம் என்று நினைத்தோம். இன்று அதே உலகை விழுங்கும் வர்த்தகமாக, சக்தியாக அமேசான் ஆன்லைன் வர்த்தகம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

1995-ம் ஆண்டு ஆன்லைன் புத்தக விற்பனை நிலையமாக கால்பதித்தது அமேசான். ஆனால் தற்போது ஊசி முதல் யானை வரை, அனைத்தும் அமேசான் வர்த்தக மையமாகியுள்ளது. எல்லாவற்றுக்குமான சந்தையாக அமேசான் வளர்ச்சியடைந்துள்ளது. அதன் சியாட்டில் தலைமைச் செயலகத்தில் சுமார் 40,000 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர், உலகம் முழுதும் சுமார் 450,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது அமேசான்.

மிக முக்கியமான செய்தித்தாளான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை அமேசானுக்குச் சொந்தமானது. முக்கிய விவகாரங்களில் வலுவான சுதந்திர நிலைப்பாடுகளை எடுத்த பத்திரிகையாகும் வாஷிங்டன் போஸ்ட். அதே போல் ஆரோக்கிய உணவு, இயற்கை, ஆர்கானிக் உணவுப்பொருட்களைக் கொண்ட மிகப்பெரிய ஹோல் ஃபுட்ஸ் மார்க்கெட் என்ற மிகப்பெரிய மளிகை வர்த்தகமும் அமேசானுக்குச் சொந்தமானதே. கிளவுட் சர்வீசஸ், பப்ளிஷிங், ஏன் திரைப்பட தயாரிப்பு வரை அனைத்திலும் அமேசான் தன் கையை பதித்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் 20 பில்லியன் டாலர்கள் செலவில், அதாவது ரூ.1,30,000 கோடி செலவில் தனக்கு 2-வது தலைமைச் செயலகத்தை அமைக்க அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்டது. சுமார் 20 ஆண்டுகால திட்டமாகும் இது. சில முன் நிபந்தனைகளை திருப்தி செய்யும் வகையில் இந்தத் திட்டத்துக்குத் தயாராக இருக்கும் நகரங்களிலிருந்து ஒப்பந்தப் புள்ளிகளை இத்திட்டத்துக்காகக் கோரியது அமேசான். அதாவது அந்நகரம் குறைந்தது சுமார் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெருநகரமாக இருப்பது அவசியம். மேலும் மென்பொருள் மற்றும் பிற தொழில்நுட்பத் திறன்கள் கிடைக்கும் நகரமாக இருக்க வேண்டும், நல்ல போக்குவரத்து, பொழுதுபோக்கு வசதிகள், இன்னபிற நிபந்தனைகளுடன் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியது அமேசான்.

இதற்கு 238 நகரங்கள், பெரும்பாலும் அமெரிக்காவிலிருந்தும், பிறகு கனடா, மெக்சிகோ ஆகியவையும் இந்த ஒப்பந்தப் புள்ளிகளில் ஆர்வம் காட்டியது. இத்தகைய திட்டத்தைத் தீட்டவும், நடைமுறைப்படுத்தவும் மிகப்பெரிய தீவிர முயற்சியும் உணர்வும் அறிவுக்கூர்மையும் தேவைப்படும். சுமார் 50,000 புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும் என்பதே இந்த திட்டத்தில் அனைவரும் ஆர்வம் காட்ட காரணமாக உள்ளது.

நெவார்க் நகரம் 10 ஆண்டுகளில் இத்திட்டத்துக்காக 7 பில்லியன் டாலர்கள் செலவிட முன்வந்தது. ஃபாக்ஸ்கான் டெக்னாலஜியை ஈர்ப்பதற்காக தய்வான் மின்னணுப் பொருள் அசெம்ப்ளர் நிறுவனம் விஸ்கான்சினில் ஆலை ஒன்றை அமைக்க அம்மாகாணம் 3 பில்லியன் டாலர்கள் தொகையை உறுதியளித்தது.

ஆன்லைன் கொள்முதலை விரிவுபடுத்தியுள்ள அமேசான் நிறுவன வர்த்தக உத்திகளினால் மிகப்பெரிய வர்த்தக முதலைகள் ஆட்டம் கண்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் ஆன்லைன் செலவிடுதலில் 40% அமேசானில் மட்டுமே நடைபெறுகிறது. இதனையடுத்து மிகப்பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோரான சியர்ஸ் திவால் ஆகும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்களில் வர்த்தகம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. அசுர நிறுவனமான வால்மார்ட் கூட அமேசான் அதிர்ச்சியிலிருந்து தற்போதுதான் மீண்டுள்ளது. சமீபத்தில் அமேசான் மருந்து விநியோகச் சேவையையும் பரிசீலித்து வருகிறது. அமேசானின் வர்த்தக மாதிரியான குறைந்த வரி செலுத்துதல், டிவிடெண்ட் இன்மை, பணத்தை தக்கவைத்துக் கொள்ளுதல் போன்றவை வேறு ஒரு சுவாரசியமான கதையாகும்.

அடுத்ததாக பல சி.இ.ஓ.க்களை விழிக்கச் செய்யும் திட்டத்துக்கு அமேசான் தயாராகி வருகிறது. பல்வேறு தொழில்துறைகளில் இருக்கும் பல நிறுவனங்கள் அமேசான் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப நிறுவனங்களின் உத்திகளை கவனித்து வருவதோடு, தங்கள் நிறுவனங்களை அமேசான் விழுங்காமல் பாதுகாக்க எதிர் உத்திகளை வகுத்து வருகின்றனர். அமேசான் நிறுவனம் மருந்து விநியோகத்தில் குதிக்கும் முடிவினால் சங்கிலித் தொடர் மருந்து நிறுவனமான சிவிஎஸ், ஹெல்த் காப்பீட்டு நிறுவனமான ஏட்னாவை வாங்க முயன்று வருகிறது. அதேபோல் நெட்பிளிக்ஸ் வளர்ச்சி, விரிவாக்கத்துக்கு எதிராக டிஸ்னி நிறுவனம் ஃபாக்ஸ் நிறுவனத்தின் முக்கியச் சொத்துகளை வாங்கியுள்ளது. ஏடி&டி நிறுவனம் டைம் வார்னரை வாங்கியுள்ளது.

உலகின் 4 மிகப்பெரிய தொழில்நுட்ப அசுரர்களான அமேசான், பேஸ்புக், ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகியவை மரபான நிர்வாக மேலாண்மைக் கோட்பாடுகளை உடைத்தெறிந்து புதிய வாடிக்கையாளர்களின் தேவைகள் என்னவென்பதை கண்டுணர்ந்து சேவை செய்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மானுடச் செயல்பாடுகளின் பல்வேறு புலங்களில் இந்த நிறுவனங்கள் ஊடுருவியுள்ளது. ஒரு நேரத்தில் ஸ்டார்ட் அப் தொழில் நுட்ப நிறுவனங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் தாங்கள் வாங்கப்படுவோம் என்ற எதிர்பார்ப்பில் வெற்றிக்காகப் போராடினர். இப்போது அமேசான் நிறுவனம் அந்த இடத்தை ஆக்ரமித்துள்ளது.

எழுத்தாளர், பாஸ்டனில் உள்ள சஃபோல்க் பல்கலைக் கழக பேராசிரியர்.

மூலம் : தி இந்து பிசினஸ்லைன்

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...