Tuesday, May 1, 2018

200 வகைகள்... தனிக்கூடு... யானையை ஒரே கடியில் கொல்லும் விஷம்! - இது ராஜநாகத்தின் கதை

துரை.நாகராஜன்


vikatan 
 
'பாம்பென்றால் படையே நடுங்கும் என்பார்கள்'. அதிலும் ராஜநாகம் என்றால் பார்ப்போருக்கு சற்று கிலி ஏற்படுவதாகவே இருக்கும். உலகில் கொடூர விஷம் கொண்ட பாம்புகள் என்றால் அது ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கோப்ரா இனப் பாம்புகள்தான். அதற்கு அடுத்தது ஆசியாவிலேயே அதிக விஷம் கொண்டது ராஜ நாகம்தான். இந்த ராஜநாகம் மட்டும்தான் பாம்பு வகைகளில் கூடு கட்டி, முட்டையிட்டு அடைகாக்கும். இந்தப் பாம்புகள் இந்தியா, மலேசியா, தென்சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும், பிலிப்பைன்ஸிலும் காணப்படுகின்றன. ராஜநாகங்கள் குளிர்ச்சியான இடங்களில் மட்டுமே வாழும். அதன்படி எடுத்துக்கொண்டால் பசுமை மாறாக் காடுகள்தான் இவற்றின் முக்கியமான வாழ்விடம். இவற்றில் மொத்தமாக 200 வகையான பிரிவுகள் உள்ளன. மற்ற பாம்புகளை விட ராஜநாகங்களின் கண்பார்வை கூர்மையானவை. 300 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளைக் கூட மிகத் தெளிவாக காணக்கூடியது. இரவிலும் இதன் பார்வை மிகத் தெளிவாக இருக்கும்.



Photo - aboutanimals

ராஜநாகம் குறைந்தபட்சம் எட்டு முதல் 20 அடி நீளம் வரை இருக்கும். மற்ற வகை பாம்புகள் தவளை, எலி எனச் சாப்பிட்டாலும், ராஜநாகம் மட்டும் மற்றொரு பாம்பை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளும். மற்ற பாம்புகள் கிடைக்காத நேரங்களில் அணில், ஓணான் ஆகியவற்றை உணவாகவும் எடுத்துக்கொள்ளும். ராஜநாகங்கள் இனப்பெருக்கக் காலத்தின்போது, 30 முட்டைகள் வரை இடும். இதன் விஷம் ஒரே நேரத்தில் 20 பேரைக் கொல்லும் தன்மை கொண்டது. இது தெற்கு ஆசியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் பற்கள் மனிதனைத் தீண்டும்போது 1.5 செ.மீக்கு ஆழமாகக் காயம் ஏற்படும். ராஜநாகம் கடித்துவிட்டால் பெரும்பாலும் மரணத்தைத்தான் தழுவ வேண்டி இருக்கும். இதன் பற்கள் மிகக் கூர்மையானதாகவும், மிகச் சிறிய துளையுடனும் அமைந்திருக்கும். இந்தப் பாம்பு மனிதனைத் தீண்டும்போது நரம்பு மண்டலத்தைத் தாக்கி கண்களைச் செயல் இழக்க வைக்கும். அதன் பின்னர் மூளை செயலிழந்து கோமா நிலையை அடைய நேரிடும். அதன் பின்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணத்தைத் தழுவ வேண்டியிருக்கும். ஒரு ஆண் ராஜநாகம் மற்றொரு பெண் ராஜநாகத்துடன் இணையும்போது ஒருவித புனுகு வாசனையையும், உளுந்து வாசனையையும் வெளிப்படுத்தும். இந்த வாசனைகளை வைத்துத்தான் கிராமங்களில் ராஜநாகங்களை மக்கள் கண்டுபிடிக்கிறார்கள்.

இணையும் பெண் பாம்பு இரண்டு மாதங்கள் கழித்து முட்டைகளை இடும். அந்த முட்டைகளை அடைகாப்பதற்கு பெண் ராஜநாகம் கூடுகளைக் கட்டும். அடைகாக்கும் நேரத்தில் கூட்டின் காவலன் ஆண் ராஜநாகம்தான். 60 முதல் 100 நாள்கள் முதல் குட்டிகள் வெளிவரத் தொடங்கும். அவை 50 செ.மீ நீளம் வரை இருக்கும். முட்டையிலிருந்து குட்டிகள் வெளிவருவதற்கு ஒரு நாளைக்கு முன்பே அடைகாக்கும் தாய் ராஜநாகம் கூட்டை விட்டு வெளியேறிவிடும். அதன் பின்னர் எப்போதுமே அதன் கூட்டுக்கு அது திரும்பாது. குட்டிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும். தாய் ராஜநாகம் வெளியேறுவதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அடைகாக்கத் தொடங்கும் நேரத்தில் இருந்து உணவை எடுத்துக்கொள்ளாது. அதனால் குட்டிகள் வெளிவந்தால் பசியில் தின்றுவிடுவோமோ என்ற எண்ணத்தால்தான் ஒரு நாளைக்கு முன்னரே கூட்டை விட்டு வெளியேறுகிறது, பெண் ராஜநாகம். ராஜநாகம் நுனி வாலை மட்டும் தரையில் பதித்து ஐந்து அடிவரை மேலே எழுந்து நின்று தாக்கக் கூடியது. சாதாரணமாக 20 வருடங்கள் வரைக்கும் இவை உயிர்வாழும். மனிதர்களைக் கண்டால் பயந்து ஒதுங்கிக்கொள்ளும் தன்மையுடையது இந்த ராஜநாகம். தன்னைச் சீண்டுபவர்களிடம் மட்டும்தான் தனது பலத்தைக் காட்டும்.



Photo - San Diego Zoo Animals

பாம்பின் விஷமானது அதிகமான புரோட்டீன்களால் ஆனது. இது நியூக்ரோ டாக்ஸிஸ் என அழைக்கப்படுகிறது. புரதம் என்ற ஒரு பொருள் மனிதன் உயிர்வாழ மிகவும் அத்தியாவசியமான ஒன்றுதானே என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆம், நாம் உண்ணக்கூடிய உணவில் புரதங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், நமது உடலுக்கு என சில விதிமுறைகள் உண்டு. ஒரு புரதம், வைட்டமின் என எதுவாக இருந்தாலும், அது வாய் வழியாக உட்கொள்ளப்பட்டு வயிற்றில் செரிமானம் ஆக வேண்டும். செரிமானம் ஆன உணவிலிருந்து மெட்டாபாலிசம் செய்யப்பட்டு தேவையற்ற பொருள்கள் அகற்றப்பட்டு அதன் பின்னர்தான் ரத்தத்தில் புரோட்டீன் கலக்கும். பொதுவாகப் பாம்புகள் கடிக்கும்போது, நேரடியாக ரத்தத்தில் கலக்கும் புரோட்டீனால், மனித உடல் இயல்பானது மாறுகிறது. இதனால்தான் மரணம் ஏற்படுகிறது. பாம்புக் கடிக்கான மருந்து தயாரிப்பு தவிர, வலி நிவாரணி, மூட்டுத்தசை மற்றும் புற்றுநோய் ஆகியவற்றைத் தயாரிப்பதில் பாம்பின் விஷம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ராகநாகம் பாம்புக் கடிக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறது அறிவியல். ராஜநாகம் ஒரு முறை கடிப்பதால் வெளியேறும் விஷம் மிகப்பெரிய யானையையே சில நிமிடங்களில் மரணத்தைத் தழுவச் செய்யும் அளவுக்கு வீரியம் மிக்கதாக இருக்கும்.



ராஜநாகம் அடைகாத்த பின்னர் அதிலிருந்து முழுவதுமாக வெளியேறும் குட்டிகள் முழு வீரியம் கொண்டதாகவே வெளியேறும். சிறிய குட்டிகளின் விஷம் கூட பெரிய ராஜநாகத்தின் விஷத்தைப் போல வீரியம் மிக்கதாக இருக்கும். அதிகமான விஷம் கொண்டதாக இருந்தாலும், ஒரு காலத்தில் அதிகமாக வேட்டையாடப்பட்ட பாம்புகளில் முக்கியமான இடம் ராஜநாகத்துக்கு உண்டு. அதனால் தற்போது வன உயிரின பாதுகாப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024