Tuesday, May 22, 2018

'கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் துவக்குங்க!'

Added : மே 22, 2018 01:40

சென்னை: கூடுதலாக மருத்துவ கல்லுாரிகள் துவங்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்து உள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று, அகில இந்திய அளவிலான தரவரிசை பட்டியலில், தமிழக மாணவர்கள் இடம்பெற்றனர்.17 மாணவர்கள்இவர்களுக்கு, இடங்களும் ஒதுக்கப்பட்டு விட்டன. மாநில அளவிலான தரவரிசை பட்டியல் வெளியிடப்படாததால், மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்களை தேர்வு செய்யும் வகையில், தங்கள் பெயர்களை, மாநில கவுன்சிலிங்கில் சேர்க்கும்படி, ௧௭ மாணவர்கள், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த, நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:

மருத்துவ படிப்பில், மாணவர்கள் சேர்க்கைக்கான கால அட்டவணையை, அதிகாரிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். சில வழக்குகளில் தேவைப்பட்டால், அதை மட்டும் தனியாக அணுகலாம். ஒருவருக்கு நிவாரணம் வழங்குவதற்காக, ஒட்டுமொத்த நடவடிக்கையையும் தடுக்கக் கூடாது. சிலர் மட்டுமே, நீதிமன்றத்தை அணுகுகின்றனர். சிலரது வழக்குகளுக்காக, ஒட்டுமொத்த மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கையை நிறுத்தக் கூடாது. வழக்கு தொடுத்தவர்கள் மற்றும் வழக்கு தொடுக்காதவர்களின் உரிமைகளை, சம நிலையில் பரிசீலிக்க வேண்டும். நீதிமன்றத்துக்கு வராதவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.இடைக்கால உத்தரவில், மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கும் போது, மருத்துவ படிப்புக்காக ஏங்கி நிற்கும், மற்ற மாணவர்களின் சேர்க்கையும் பாதிக்கப்படுகிறது.தரவரிசை பட்டியல்தனிப்பட்டவர்களின் வழக்கை, தகுதி அடிப்படையில் முடிவு செய்யும் போது, அதற்கான நிவாரணம் கிடைத்து விடும். மாநில தரவரிசைப் பட்டியலை வெளியிட, கால தாமதம் ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால், மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலை வெளியிட முடியவில்லை.இந்த மனுக்களை தாக்கல் செய்தவர்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களும் பெற்றுள்ளனர். மாநில ஒதுக்கீட்டின் கீழ், இடங்களை பெற, இவர்களுக்கு தகுதி இருந்தால், அதை அவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், அதை சட்டப்பூர்வ உரிமையாக கருத முடியாது.நாட்டில், அதிக அளவில் நிலப்பரப்பு உள்ளது; மக்கள் தொகையும் அதிகம். இளைஞர்கள், புத்தி கூர்மையுடன் உள்ளனர். மருத்துவ படிப்பில் சேர, ஏராளமான மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.இத்தகைய சூழ்நிலையில், மாணவர்கள் விருப்பப்படி பாடங்களையும், கல்லுாரிகளையும் தேர்வு செய்ய ஏதுவாக, போதிய அளவில், மருத்துவ கல்லுாரிகள் இருப்பதை, உறுதி செய்ய வேண்டிய கடமை, மாநில அரசுக்கு உள்ளது.தற்போதைய தேவை கருதி, கூடுதலாக மருத்துவ கல்லுாரிகளை, மத்திய, மாநில அரசுகள் துவங்குவது முக்கியமானது. அவ்வாறு போதிய எண்ணிக்கையில், மருத்துவ கல்லுாரிகள் துவங்குவதால், அரசியலமைப்பு சட்டத்தில் கூறியுள்ளபடி, மத்திய, மாநில அரசுகள், தங்கள் கடமைகளை ஆற்றுவதாக கருதலாம். மக்களுக்கு, போதிய மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டியதும், அடிப்படை உரிமையாகும்.மக்கள் தொகைக்கு ஏற்ப, மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை என்றால், அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்றாமல், அரசு கடமை தவறுவதாக தான் அர்த்தம். அதிக டாக்டர்கள், சிறப்பு மருத்துவர்கள் தேவை உள்ளது. எனவே, அதற்கான வாய்ப்புகளை, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இல்லையென்றால், மாணவர்கள் விரக்தி அடைந்து விடுவர்.இந்த வழக்கைப் பொறுத்தவரை, மனுதாரர்களுக்கு சட்டப்பூர்வ உரிமை இருக்கிறது என்பது நிரூபிக்கப்படவில்லை. எனவே, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024