dinamalar 13.07.2018
புதுடில்லி : குஜராத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. மாணவர்களை கவர 'ஸ்கூட்டர், லேப்டாப்' என சலுகைகளை அள்ளித் தரும் முயற்சியில் அந்த கல்லுாரிகள் இறங்கியுள்ளன.
இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நாடு முழுவதும் நடந்து வருகிறது. நுாற்றுக்கணக்கான புதுப்புது பாடப்பிரிவுகள் வந்துகொண்டுள்ளன. தொழில்நுட்ப படிப்பு எப்பொழுதும் கைகொடுக்கும் என்பதால் எதைப்படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மாணவர்கள் முடிவு செய்து அதற்கேற்ற பாடப்பிரிவுகளை சிறந்த கல்லுாரிகளில் தேர்வு செய்கின்றனர்.
நாட்டில் மொத்தமுள்ள 3,291 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் 15.5 லட்சம் இடங்கள் உள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை சில ஆண்டுகளாக குறைவாக உள்ளது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையிலும் இதே நிலை தொடருவதாக குஜராத் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவர்களை கவர
குஜராத் மாநில தனியார் கல்லுாரிகள் பல வித்தியாசமான முயற்சிகளில் இறங்கியுள்ளன.
இது குறித்து குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இருந்து வெளியாகும் 'மிரர்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: குஜராத் மாநிலத்தில் இன்ஜினியரிங் பாடத்துக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கை முடிவடைந்து உள்ளது. இதில் மொத்தமுள்ள 55 ஆயிரத்து 422 இடங்களில் 34 ஆயிரத்து 642 இடங்கள் காலியாகவே உள்ளன. இதனால் தனியார் கல்லுாரி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலைமையை சமாளிக்க பல்வேறு புதுப் புது திட்டங்களை அறிவித்து மாணவர்களை கவர முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக கல்வி உதவித்தொகை என்ற பெயரில் கல்வி கட்டணத்தில் பெரும் அளவில் தள்ளுபடி தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் 'செமஸ்டருக்கான' கட்டணம் தள்ளுபடி, கல்லுாரி பேருந்து மற்றும் விடுதிக்கு பாதி கட்டணம், இலவச 'லேப்டாப்' போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை குஜராத் மாநில தனியார் கல்லுாரி நிர்வாகத்தினர் அள்ளி வீசியுள்ளனர்.
இதன் உச்சகட்டமாக 'நான்கு ஆண்டு கல்வி கட்டணத்தையும் ஒரே தவணையில் செலுத்தும் மாணவர்களுக்கு நான்காம் ஆண்டு படிப்பு முடிந்ததும் இரு சக்கர வாகனம் இலவசமாக வழங்கப்படும்' என பல கல்லுாரிகள் அறிவித்துள்ளன.
சில கல்லுாரிகள் 'ஆண்டுக்கு 2,500 ரூபாய் கல்வி கட்டணம் செலுத்தினால் போதும்' என ஆடித் தள்ளுபடி போன்ற சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
மேலும் சில கல்லுாரிகள் மாணவர்களை சேர்த்து விட 'கமிஷன் ஏஜன்ட்'களை நியமித்துள்ளன. 'ஒரு மாணவனை சேர்த்துவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் கமிஷன் தரப்படும்' என அறிவித்துள்ளன. இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போதிய மாணவர் இல்லாமல் கல்லுாரியை நடத்தி நஷ்டமடைவதை விட இது போன்ற சலுகை மற்றும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நிலைக்கு குஜராத் கல்லுாரிகள் தள்ளப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment