Friday, July 13, 2018

கமல் கட்சியின் துணைத்தலைவராக பேராசிரியர் கு.ஞானசம்மந்தன் நியமனம் 

dinamalar 13.07.2018





சென்னை : மக்கள் நீதி மையத்தின் முக்கிய நிர்வாகிகள் பட்டியலை, கமல் நேற்று வெளியிட்டார். கட்சியின் துணைத் தலைவராக, பேராசிரியர், கு.ஞானசம்பந்தன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

நடிகர் கமல், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை துவக்கி உள்ளார். இந்திய தேர்தல் கமிஷனில், இக்கட்சி முறைப்படி

பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியை, தேர்தல் கமிஷன் அங்கீகரித்ததை அடுத்து, நேற்று சென்னையில் உள்ள அலுவலகத்தில், கட்சி கொடியை, கமல் ஏற்றி வைத்தார்.

பின், அலுவலகத்தின் வெளியே கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில், கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை, கமல் வெளியிட்டார். கட்சியின் உயர்மட்டக்குழு கலைக்கப்பட்டு, அதில் உறுப்பினர்களாக இருந்த, ஸ்ரீப்ரியா, கமீலா நாசர் உள்ளிட்ட,11 பேரும், செயற்குழு உறுப்பினர்களாக தொடர்வர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவராக கமல் செயல்படுகிறார். கட்சியின் துணைத்தலைவராக, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்,

பொதுச்செயலராக, அருணாச்சலம், பொருளாளராக, சுரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு என, நான்கு மண்டலங்களாக, கட்சியின் அமைப்பு பிரிக்கப்பட்டு உள்ளது. சட்டசபை தொகுதி வாரியாக, கட்சி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். 'மண்டல பொறுப்பாளர்கள், துறை வாரியான நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவர்' என, கமல் தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கோரிய கமல் :

சென்னை, ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் உள்ள, மக்கள் நீதி மைய அலுவலகத்தின் வெளியே, கட்சி நிர்வாகிகளை அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கட்சியினர் ஏராளமாக கூடியதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிவில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதற்காக, கமல் மன்னிப்பு கோரினார். நிகழ்ச்சியின் போது, தொண்டர்கள், 'ஆழ்வார்பேட்டை ஆண்டவர்' என்ற அடைமொழியுடன், கமலை வாழ்த்தி கோஷம் போட்டனர்.


No comments:

Post a Comment

NEWS TODAY 09.01.2025