Friday, July 13, 2018

சிறு வயது கனவை நனவாக்கிய மதுரை பெண்; விடாமுயற்சியால், 'பைலட்'டாகி சாதனை

Added : ஜூலை 13, 2018 00:29 |




பெங்களூரு : விடா முயற்சியும், துடிப்பும் இருந்தால், எதையும் சாதிக்க முடியும் என்பதை, மதுரையைச் சேர்ந்த இளம் பெண், நிரூபித்துள்ளார். பைலட் ஆக வேண்டும் என்ற, இவரது சிறு வயது கனவு, தற்போது நனவாகியுள்ளது.

தமிழகத்தின், மதுரை, களங்கத்துபட்டியைச் சேர்ந்தவர், ரவிகுமார்; பஸ் டிரைவர். இவரது மனைவி கல்பனா. இந்த தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள். மூத்த மகள், காவ்யா, 22, மதுரை, டி.வி.எஸ்., பள்ளியில், பிளஸ் 2 வரை படித்தார். ஆறாம் வகுப்பு படிக்கும் போது, வானத்தில் விமானம் பறப்பதை ஆச்சரியமாக, இவர் பார்த்தார். அப்போதே, பைலட் ஆக வேண்டும் என, கனவு காணத் துவங்கினார்.

அந்த பள்ளியில் படித்த சக மாணவ - மாணவியர், காவ்யாவை, 'பைலட்' என்றே அழைத்தனர். பள்ளி படிப்பு முடித்ததும், பைலட் கனவை, நனவாக்குவது எப்படி என்பது தெரியாமல் இருந்தார். கர்நாடக மாநிலம், பெங்களூரில் வசித்து வந்த அவரது நண்பர் ஒருவர் மூலம், அங்குள்ள ஜக்கூரில், அரசு விமான பயிற்சி மையம் செயல்படுவது, அவருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, பெங்களூருக்கு வந்த காவ்யா, விடுதியில் தங்கினார். விமான பயிற்சிக்கான கட்டணம், 23 லட்சம் ரூபாய் என தெரியவந்ததும், அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே, காவ்யா, தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவி என்பதால், பயிற்சியாளர் அமர்ஜித் சிங், ஆலோசனையின்படி, மத்திய அரசின் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பித்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், விமான பயிற்சிக்கான முழு கட்டணமும், மத்திய அரசிடமிருந்து கிடைத்தது.

இதையடுத்து, 2013ல், ஜக்கூர் விமான பயிற்சி மையத்தில், காவ்யா உட்பட, 17 பேர் சேர்ந்தனர். கல்வி கட்டணம் செலுத்தி விட்டு, தங்குவதற்கும், உணவுக்கும் பணமின்றி சிரமப்பட்டார். அப்போது, இவருக்கு பின், விமான பயிற்சியில் இணைந்த ஜூனியர்களுக்கு வகுப்புகள் எடுத்து, பகுதி நேரமாக பணி புரிந்து, பணம் சம்பாதித்தார். இரண்டரை ஆண்டுகளில், 200 மணி நேரம் விமானத்தில் பறந்து, பயிற்சியை முடித்தார். துவக்கத்தில், பயிற்சியாளர் உதவியுடன், விமானம் ஓட்டிய அவர், சிறிது காலத்துக்கு பின், தனியாகவே விமானத்தை செலுத்தும் திறமையை பெற்றார்.

இதையடுத்து, காவ்யாவுக்கு, 'பைலட் லைசென்ஸ்' வழங்கப்பட்டது. இதன் மூலம், விமான பைலட் ஆக வேண்டும் என, 10 வயதில், அவர் கண்ட கனவு, தற்போது, 22 வயதில் நனவாகியுள்ளது. இதன்மூலம், மற்ற பெண்களுக்கு முன் உதாரணமாக, காவ்யா திகழ்கிறார். பயிற்சி பெற்ற, அதே ஜக்கூர் விமான பயிற்சி மையத்தில், விமான கட்டுப்பாட்டு அதிகாரியாக, தற்போது காவ்யாவுக்கு வேலை கிடைத்துள்ளது.

இதுகுறித்து காவ்யா கூறியதாவது: தனியாக விமானம் ஓட்டும் போது பயமாக இருந்தது. அப்போது, பயிற்சியாளரிடம் பல முறை திட்டு வாங்கினேன். ஓரளவு பயிற்சி பெற்றதும், பயமின்றி ஓட்டினேன். சாதனை படைப்பதற்கு பல பெண்கள் துடிக்கின்றனர்.

ஆனால், சரியான வழிகாட்டி இல்லாமல் தவிக்கின்றனர். தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால், யார் வேண்டுமானாலும், எதையும் சாதிக்க முடியும். பெண்கள், பைலட்டாவதற்கு முன்வர வேண்டும்; அவர்களுக்கு பயிற்சி அளிக்க தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...