Thursday, July 26, 2018


2 காவலர்களுக்கு தூக்குத்தண்டனை வாங்கிக்கொடுத்த தாய்! - மகனுக்காக இனி அழமாட்டேன் என உருக்கம்


சிந்து ஆர்

கேரள மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸார் சித்ரவதை செய்ததால் ஒருவர் இறந்த வழக்கில் இரண்டு போலீஸாருக்கு சி.பி.ஐ நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்துள்ளது.



கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபாவதியின் ஒரே மகன் உதயகுமார். உதயகுமாருக்கு ஒரு வயது இருக்கும்போது அவரின் தந்தை மரணமடைந்துவிட்டார். இந்த நிலையில் வீட்டு வேலைகள் செய்து மகனை வளர்த்து வந்தார் பிரபாவதி. உதயகுமார் வளர்ந்ததும் கிள்ளிப்பாலம் பகுதியில் ஆக்கர் கடையில் சுமைதூக்கும் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். 2005-ம் ஆண்டு ஓணம் பண்டிகையின்போது போனஸ் தொகையை வாங்கிக்கொண்டு அம்மாவுக்கு புது ஆடை எடுப்பதற்காகச் சென்றார். அப்போது சந்தேக வழக்கில் உதயகுமாரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது உதயகுமாரிடம் இருந்த 4,000 ரூபாயை போலீஸார் எடுத்ததாகவும் அந்தப் பணத்தை உதயகுமார் திருப்பிக் கேட்டபோது காவல்துறையினர் அவரை சித்ரவதை செய்ததால் இறந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவர் திடீரென உடல்நிலை சரியில்லாமல் விழுந்ததாகப் போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.



ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் உதயகுமாரின் தொடைப்பகுதியில் உலக்கை போன்ற உருளையால் உருட்டியதில் ரத்த நாளங்கள் உடைந்து அவர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உதயகுமாரின் தாய் போலீஸார் மீது வழக்கு தொடர்ந்தார். 13 ஆண்டுகள் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, உதயகுமாரை கொலை செய்த வழக்கில் காவல்துறை அதிகாரிகள் ஐந்து பேருக்கு தண்டனை வழங்கியுள்ளது சி.பி.ஐ நீதிமன்றம். போலீஸ் அதிகாரிகள் ஜிதகுமார், ஸ்ரீகுமார் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. போலீஸ் அதிகாரி அஜித்குமார் மற்றும் முன்னாள் எஸ்.பி-க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகியோருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு தூக்குத்தண்டனை விதிப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

  இதுகுறித்து உதயகுமாரின் தாய் பிரபாவதி கூறுகையில், "இந்த உலகத்தில் இதுபோன்று எந்த ஒரு மகனுக்கும் காவல்துறையினரால் துன்பம் ஏற்படக் கூடாது. குற்றம் செய்யாதவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தக் கூடாது. ஒரு ஓணம் பண்டிகையின்போது என் மகனை பிடித்துக்கொண்டு போனார்கள். ஒரு தாய் தன்னுடைய போராட்டத்துக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. தவறு செய்த காவல் துறையினருக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று நான் நினைத்தேன். அதுபோன்றே தண்டனை கிடைத்துள்ளது. என் கண்ணீருக்கு விடை கிடைத்துள்ளது. இனி நான் அழமாட்டேன்" என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024