Thursday, July 26, 2018

`உயிரின் விலை இவ்வளவுதானா?' - பரங்கிமலை விபத்து குறித்து கேள்விகளைத் தொடுக்கும் சமூக ஆர்வலர்!



மலையரசு

சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து நான்குபேர் பலியான சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியம் தான் இந்த விபத்துக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் பட்டியலிடுகின்றனர்'.



சென்னையில் இருந்து திருமால்பூர் நோக்கி சென்ற மின்சார ரயில் பரங்கிமலையை கடக்கும் போது நேற்று காலை விபத்துக்குள்ளானது. இதில் ரயிலில் இருந்து தவறி விழுந்த நான்கு பேர் பலியாகினர். விபத்து குறித்து ரயில்வே போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்புக்குழு ஆணையர் மனோகரன் விபத்து நடந்த பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, `மாற்றுப்பாதையில் மின்சார ரயிலை இயக்கியபோதே விபத்து ஏற்பட்டுள்ளது. படியில் தொங்கியபடி பயணிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்" என விளக்கம் அளித்தார்.

இந்த கோரவிபத்து குறித்து சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த புகழேந்தியிடம் பேசினோம். அப்போது, ``சில வாரங்களுக்கு முன் தமிழ் நாளிதழ் ஒன்றில் தமிழக ரயில்வே துறையின் கூடுதல் டிஜிபி சைலேந்திர பாபு “குற்றங்கள்” பற்றி கட்டுரை ஒன்று எழுதி இருந்தார். அதில் தனிநபர் காரணங்கள் தவிர்த்து சமூக காரணங்களையும் விரிவாக அலசியிருந்தது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் கூட்ட நெரிசலும் படிக்கட்டு பயணமும்தான் இந்த விபத்துக்கு காரணம் என அவர் கூறியது மிகுந்த மன வேதனையை கொடுத்தது. ஏனெனில் குற்றங்களுக்கு சமூக காரணங்களை ஆராயத்தெரிந்த அவருக்கு கூட்ட நெரிசல், படிக்கட்டு பயணத்திற்கான காரணங்களை எழுதாமல் விட்டது ஏனோ?" என்று கூறியவர், கூட்ட நெரிசல், படிக்கட்டு பயணத்திற்கான காரணமும், அரசின் கடமைகள் குறித்து, சில கேள்விகளை முன் வைத்தார்.
  *கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் நேற்று மின் பழுது ஏற்பட்டதால் ஏறத்தாழ 45 நிமிடம் ரயில் சேவை பாதிக்கப்பட்டு தாமதம் ஏற்பட்டது. மின் பழுது ஏற்பட காரணம் என்ன? பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் மின்பழுது ஏற்பட்டதா? அதற்கு மக்கள் எப்படி பொறுப்பாக முடியும்? அதிகாரிகள் மின்பழுதை சரிசெய்யும் கடமையிலிருந்து தவறிவிட்டனரா?

*கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. காலை 7.05 க்கு புறப்பட வேண்டிய இரயில் 35 நிமிடம் தாமதமாக புறப்பட்டதால் தானே கூட்டநெரிசல் ஏற்பட்டது. ரயில் சேவை தடைப்பட்டதற்கு அரசுதானே காரணம். இரண்டாவது நடைமேடைக்கு வரவேண்டிய ரயில், எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் கடைசி நேரத்தில் எக்ஸ்பிரஸ் வழித்தடமான நடைமேடை நான்கிற்கு மாற்றப்பட்டது. பயணிகளைப் பொருத்தவரை இரண்டாவது நடைமேடைக்கு வரும் என்று எண்ணியே, அதில் வலப்புறமாக தான் இறங்க வேண்டும் என்பதால் அந்தப்பக்கம் சென்றுள்ளனர். ஆனால் நான்காவது நடைமேடையில் இறங்குமிடம் இடப்பக்கமாக இருந்துள்ளது. முன்னறிவிப்பு இருந்திருந்தால் பயணிகள் வலப்பக்கமாக இறங்குவதை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும்.

*விபத்தில் சிக்கிய அந்த ரயில் பரங்கிமலையில் நிச்சயம் நிற்கவேண்டும் என்பது விதியாக இருந்தும் வண்டியின் ஓட்டுனர். அதன் வேகத்தை முழுமையாக கட்டுப்படுத்தவில்லை ஏன்? அது கவனக்குறைவு ஆகாதா? ரயில் தண்டவாளத்திலிருந்து 2.2 மீட்டர் வரை எந்தவொரு கட்டுமானமும் இருக்கக்கூடாது என்பது விதி. ஆனால் நான்காவது நடைமேடை இடைவெளி விதிகளை மீறி 1 மீட்டருக்கும் குறைவாக இருந்ததே விபத்திற்கு காரணமாக இருந்தது. இதில் விதிமுறை மீறல்கள் இல்லையா?

*விபத்து நடந்த அதே இடத்தில் திங்கள் அன்று மாலை இரண்டு பேர் உயிரிழந்தும் ஏன் ரயில்வே துறை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை?. ஆக பிரச்னை இருப்பது அதிகாரிகளுக்கு தெரிந்தே இது நடந்திருக்கிறது. உயிரின் விலை இவ்வளவுதானா? அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய பின் சென்னையை பொருத்தமட்டில் முன்பதிவு இல்லாமல் ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 10 இலட்சமாக உயர்ந்துள்ளது அரசுக்கு தெரியாதா? பேருந்துகளில் கட்டணத்தை அதிகப்படுத்தியதால் சாதாரண மக்கள் பயணிக்க ரயிலைதான் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதும் அரசுக்கு தெரியாதா?

*தற்சமயம் கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை மின்சார ரயிலுக்கென மட்டுமே இரண்டுவழிப் பாதைகள் உள்ளது. ஆனால் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டிற்கு செல்லும் இருவழிப்பாதையில் மின்சார ரயில், விரைவு ரயில், சரக்கு ரயில் என அனைத்துமே பயணிக்க வேண்டியுள்ளது. இரயில்வே நிர்வாகம் 2015-ல் தாம்பரம் - செங்கல்பட்டு இடையில் மூன்றாவது பாதை ஏற்படுத்த அனுமதியளித்த பின்னும் அது நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதற்கு அரசு காரணமாகாதா?

*பெருகிவரும் தேவைக்கேற்ப நான்காவது பாதையை ஏற்படுத்த ரயில்வே துறையிடமிருந்து தமிழக அரசிற்கு கடிதம் வந்தது. அதில் அரசும் பாதையமைக்க பொறுப்பேற்க வேண்டும் என இருந்தும் தமிழக அரசு இதுவரை அதற்கு பதிலளிக்கவில்லை ஏன்? கூடுதல் தடங்கள், சேவை ஏற்படுத்தப்பட்டால் தனக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என நினைத்து இத்திட்டங்களை செயல்படுத்த ரயில்வே முனைப்புக் காட்டவில்லை. மேலும் புறநகர் ரயில் சேவை மூலம் அரசிற்கு நஷ்டம் ஏற்படுவதால் யாரும் இதற்கு முன்னுரிமை கொடுக்க முன்வரவில்லையா? ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு, ஆட்கள் அங்கிருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்ய ஒருவர் கூட முன்வரவில்லையே ஏன்?

*விபத்து குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள கமிஷன் மேற்குறிப்பிட்ட விஷயங்களை கருத்தில் கொண்டு, முறையான விளக்கங்களை அளிக்க முன்வருமா? மக்களின் வலியை உணர்ந்தால் மட்டுமே அரசு சரியாக செயல்பட முடியும் என ரயில்வே அதிகாரி ரோகித்நாதன் இராஜகோபால் சொன்னது முற்றிலும் உண்மை. அதை உணர்ந்து அரசு, அதிகாரிகள் (சைலேந்திர பாபு உட்பட) மக்களுக்கான பணியை செய்ய முன்வருவார்களா?

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024