Sunday, July 15, 2018

அம்மை பாதிப்பு மாணவி கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதி

Added : ஜூலை 15, 2018 02:23

சென்னை:அம்மை நோயால் பாதிக்கப்பட்டு, துணை தேர்வு எழுதிய மாணவியை, மருத்துவ கவுன்சிலிங்கிற்கு பரிசீலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த, ஜெயகுமார் தாக்கல் செய்த மனு:என் மகள் ஹரிணி, ௨௦௧௭ மார்ச்சில் நடந்த, பிளஸ் ௨ தேர்வை எழுதினார். இந்த தேர்வின் போது, அம்மை நோயால் பாதிக்கப்பட்டதால், இயற்பியல், வேதியியல், விலங்கியல் ஆகிய பாடங்களின் தேர்வுகளை எழுத முடியவில்லை. 

குணமடைந்த பின், ஜூன் மாதம் நடந்த, துணை தேர்வில், மூன்று பாடங்களுக்கான தேர்வையும் எழுதி, தேர்ச்சி பெற்றார்.
நிராகரிப்புகடந்த, 2017 - 18ம் ஆண்டுக்கான மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை குறித்த நேரத்தில் சமர்ப் பித்தாலும், மூன்று பாடங்களுக்கான தேர்வு முடிவு வராததால், மதிப்பெண் விபரங்களை, விண்ணப்பத்தில் குறிப்பிட முடியவில்லை; விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.எனவே, 2017 மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் எழுதிய தேர்வுகளை ஒன்றாக சேர்த்து, முதல் முறையாக எழுதியதாக கருதி, மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கில் அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி, எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், ஆர்.மலைச்சாமி, தேர்வு குழு சார்பில், கூடுதல் அரசு பிளீடர் ராஜபெருமாள் ஆஜராகினர்.

பரிசீலனை

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:பிளஸ் ௨ தேர்வில், முதன் முறையாக எழுதி பெற்ற மதிப்பெண்கள் தான் பரிசீலிக்கப்படும்; பகுதி பகுதியாக தேர்வு எழுதி பெறும் மதிப்பெண்கள் பரிசீலிக்கப்படாது என, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அம்மை நோயால், மாணவி பாதிக்கப்பட்டுள்ளார். அதற்கான மருத்துவ சான்றிதழையும் தாக்கல் செய்துள்ளார். இதை, அரசும் மறுக்கவில்லை.

தன்னை மீறி நடந்த காரியத்தால், ஒரு மாணவியால் தேர்வு எழுத முடியவில்லை. அதன்பின், எழுதிய துணை தேர்வை, பகுதி பகுதியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அம்மை நோயால் பாதிக்கப்பட்ட மாணவியை, தேர்வு மையத்துக்குள் கண்டிப்பாக அனுமதித்திருக்க மாட்டார்கள். மற்றவர்களுக்கு பரவக்கூடும் என்பதால், மாணவியை அனுமதிக்காமல், ஆசிரியர் தடுத்திருப்பார்.

ஒவ்வொரு விதிமுறைக்கும், விதிவிலக்கும் உண்டு. இந்த வழக்கைப் பொறுத்தவரை, தேர்வு எழுத முடியாமல் போனதற்கு, மாணவிக்கு நியாயமான காரணங்கள் உள்ளன. எனவே, துணை தேர்வில் எழுதிய பாடங்களை, முதல் முறையாக எழுதியதாக கணக்கில் கொள்ள வேண்டும். 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றால், கவுன்சிலிங்கிற்கு மாணவியை பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024