Sunday, July 22, 2018

விஜயகாந்த் பிறந்த நாள் விழா : மாவட்ட நிர்வாகிகள் புலம்பல்

Added : ஜூலை 21, 2018 23:17

விஜயகாந்த் பிறந்த நாளை பழையபடி கொண்டாடுவதற்கு, தே.மு.தி.க., தலைமை திட்டமிட்டு உள்ளதால், கட்சி நிர்வாகிகள், அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இலங்கை பிரச்னையை காரணம் காட்டி, தன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை, விஜயகாந்த் தவிர்த்து வந்தார். தே.மு.தி.க.,வை, 2005ல் துவங்கிய பின், தன் பிறந்த நாளை, 'வறுமை ஒழிப்பு' என்ற பெயரில், கொண்டாட துவங்கினார். இதற்காக, ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும், கட்சி நிர்வாகிகளிடம் பணம் வசூலிக்கப்படும். அந்த பணத்தை பயன்படுத்தி, பொது மக்களுக்கு பல லட்சம் ரூபாய் செலவில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். கட்சி தலைமை அலுவலகம் மற்றும் விஜயகாந்த் வீட்டில், தடபுடல் மட்டன் பிரியாணி விருந்தும் வழங்கப்படும். 

இதுமட்டுமின்றி, கட்சி தலைமையிடம் நற்பெயர் பெறுவதற்காக, மாநில நிர்வாகிகளை வரவழைத்து, மாவட்ட செயலர்களும் பிறந்த நாளை கொண்டாடுவர். கட்சிக்கு, பணத்தை அள்ளி இறைத்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும், வெளியேறி விட்டனர். இந்நிலையில், சிகிச்சைக்காக, விஜயகாந்த், அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அடுத்த மாதம், அவர் சென்னை திரும்பவுள்ளார். விஜயகாந்தின் பிறந்த நாள், அடுத்த மாதம், 25ம் தேதி வருகிறது. பழையபடி, விஜயகாந்த் பிறந்த நாளை கொண்டாடி, மக்கள் மத்தியில், மீண்டும் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என, தே.மு.தி.க., தலைமை நிர்வாகிகள் கணக்கு போடுகின்றனர். இதற்காக, மாநில நிர்வாகிகள், மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் செய்து வருகின்றனர். விஜயகாந்த் நலம் பெற வேண்டி, கோவில்களில் நடக்கும் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்கின்றனர். அதன்பின், மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக பேசுகின்றனர். மாநில நிர்வாகிகளின் நடவடிக்கையால், மாவட்ட நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: விஜயகாந்த் பிறந்த நாளுக்காக, சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், பேனர்கள், அதிகளவில் வைக்க வேண்டும் என, கட்சி தலைமை, ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக, மாவட்டங்களில், சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இப்போது, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்க வேண்டும் என்கின்றனர்.

சுவர் விளம்பரம் : எழுதுவதற்கே, பணம் இல்லாத போது, நலத்திட்ட உதவிகளை, எப்படி வழங்க முடியும் என, மாவட்ட நிர்வாகிகள் புலம்புகின்றனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024