Sunday, July 22, 2018

உயர்கல்வி ஆராய்ச்சிகளுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் : யு.ஜி.சி., முன்னாள் துணை தலைவர் பேட்டி

Added : ஜூலை 22, 2018 00:33

மதுரை: "உயர் கல்வித்துறையில் ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்," என பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) முன்னாள் துணை தலைவர் தேவராஜ் தெரிவித்தார்.மதுரையில் நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:தேசிய அளவில் கல்வி தரத்தை மேம்படுத்த உயர்கல்வி ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வரைவு திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.தமிழகம் உட்பட சில மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, பல்கலை திட்டங்களுக்கு யு.ஜி.சி., சார்பில் 100 சதவீதம் நிதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் உயர்கல்வி ஆணையத்தில் நிதி அதிகாரம் எதுவும் இல்லை.பல்கலை திட்டங்களுக்கு 60:40 என்ற விகிதத்தில் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கிக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட சில முடிவுகளை மாநில அரசுகள் எதிர்க்கின்றன. மாநில அரசுகளிடம் கருத்து கேட்ட பின் தான் உயர்கல்வி ஆணையம் அமைப்பது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கும்.பல்கலைகளில் தற்போது ஆராய்ச்சிகள் குறைந்து வருகின்றன. இதுதொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. உயர்கல்வியில் ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புக்களை ஊக்குவிக்க பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.உடன்பாடு இல்லை: மும்பை, டில்லி ஐ.ஐ.டி.,க்கள் உட்பட 6 கல்வி நிறுவனங்கள் தலைசிறந்த நிறுவனங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். இதில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் இன்னும் துவங்கப்படாத ஜியோ இன்ஸ்டிடியூட் தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை.தமிழகத்தில் 'நீட்' தேர்வு அவசியம். ஆனால் இத்தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாரபட்சமின்றி அனைத்து மாணவர்களும் இத்தேர்வுக்கு தயாராகும் வகையில் தமிழக அரசு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். 'நீட்' தேர்வு எழுதிய தமிழ் மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற நீதிமன்றம் தீர்ப்பு சரியானதாக தெரியவில்லை. இதுபோன்ற வழக்குகளில் கல்வியாளர்கள் கருத்துக்களை கேட்க வேண்டும்.பல்வேறு நோய்களுக்கு தீர்வாக உள்ள 'ஸ்டெம்செல்' ஆய்வுகள் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகம் நடக்கின்றன. ஆனால் இந்தியாவில் இதுதொடர்பான ஆய்வுகள் வர்த்தக ரீதியில் நடக்கிறது. இதை முறைப்படுத்த வேண்டும், என்றார்.குஜராத் மத்திய ஆசிரியர் கல்வி நிறுவன துணைவேந்தர் கமலேஷ் ஜோஷிபுரா கூறுகையில், "மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி பொன் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவும், குஜராத் மத்திய ஆசிரியர் கல்வி நிறுவன படிப்புகள் இக்கல்லுாரியில் துவங்கவும் முயற்சி எடுக்கப்படும்," என்றார்.

யு.ஜி.சி., ஆலோசகர் வழக்கறிஞர் கோபிநாதன், சவுராஷ்டிரா கல்லுாரி தலைவர் ராம்தாஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 16.11.2024