Wednesday, July 25, 2018

வயிறு தூய்மையானால் வாழ்க்கையே மகிழ்ச்சியாகும்!


மு.ஹரி காமராஜ்  

மனத்தூய்மை ஒருவரை மகத்தான மனிதராக்கும். உடல் தூய்மை ஒருவரை மகிழ்ச்சியான நபராக மாற்றும். குறிப்பாக வயிறு அதாவது குடல்கள் தூய்மையாக இல்லாவிட்டால் உற்சாகம் குன்றி செயல்படுவதே சிக்கலாகிவிடும். உண்மையில் காலையில் எழுந்ததுமே செய்ய வேண்டிய அத்தியாவசிய செயலே வயிறை சுத்தம் செய்துகொள்வதுதான். வயிறு தனது கழிவுகளை முழுமையாக நீக்காவிட்டால் தலைவலி, கண் எரிச்சல், முதுகுவலி, மலச்சிக்கல், நீர்க்கடுப்பு, சோர்வு, வாய் துர்நாற்றம், இடுப்புவலி, உடல் துர்நாற்றம், மந்தமான மனநிலை, தோல் பிரச்னை, வாயுத்தொல்லை, வயிற்றுப்போக்கு, வயிறு வலி என பிரச்னைகள் நீண்டுகொண்டே செல்லும். வாழ்வுக்கு வளம் சேர்க்கும் வயிறு தூய்மையைப் பெற என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.



ஆறு மாதத்துக்கு ஒருமுறை அலோபதியோ, சித்த மருத்துவமோ ஏதாவது ஒருவகை பேதி மருந்து உட்கொண்டு வயிறைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு நீர் எடுத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி துரித உணவகங்களில் உண்பதை நிறுத்த வேண்டும். மசாலா பொருள்களை கண்டபடி உணவில் பயன்படுத்தக் கூடாது. சோற்றுக்கற்றாழை வயிறை தூய்மையாக்கும் நல்ல பொருள். இதை மாதம் ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம். கடுக்காய்ப் பொடியும் நல்லது. தொடர்ந்து வயிறு பிரச்னை உள்ளவர்கள் ‘கலோனிக் லாவேஜ்’ என்ற குடலை நீர் கொண்டு சுத்தம் செய்யும் முறையையும் மருத்துவமனையில் எடுத்துக்கொள்ளலாம். மாதம் ஒருமுறை மேற்கொள்ளும் உண்ணாநோன்பு கூட வயிறை சுத்தம் செய்ய ஒரு நல்ல வழியே. வயிறு சுத்தம் என்பது உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் தீர்மானிக்கும் காரணி என்பதால் அதில் கவனம் கொள்வது அவசியமானது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024