ஆச்சரியப்பட வைக்கும் 'அடடே...' அஞ்சலகம்!
Added : ஜூலை 22, 2018 02:20
க்ணிங்... க்ணிங்...' என, சைக்கிள் மணி ஓசை முன்னே வர, அதில் 'சார்...போஸ்ட்' என, வீடு தேடி வந்து கடிதம் கொடுத்து செல்லும் தபால்காரரின் நினைவலைகளை கொண்டிராத கிராமத்து சாலைகளும், வீதிகளும் இருந்திருக்கவே முடியாது.
மெத்த படித்தவர்கள் நிறைந்த நகர்ப்புறங்களை காட்டிலும், படிப்பறிவு குறைந்தவர்கள் நிறைந்த கிராமப்புறங்களில் உள்ள அஞ்சலகங்களுக்கு மவுசும், மதிப்பும் அதிகம்.எழுத, படிக்க தெரியாத பெரியவர்களின் வீடு தேடிச்சென்று, கடிதத்தையும், மணியார்டரையும் கொண்டு சேர்க்கும் தபால்காரர்களுக்கு என்றுமே தனி மதிப்புதான்.அந்த வரிசையில், அவிநாசி அருகே, போத்தம்பாளையத்தில், 10க்கு 5 என்ற சிறிய கட்டடத்தில், இயங்கி வரும் போத்தம்பாளையம் துணை அஞ்சலகத்தின் சேவை, விழிகளை விரிக்க செய்கிறது.
''இந்த போஸ்ட் ஆபிஸ், 1959ல், ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆரம்பிக்கப்பட்டதுங்க. 1981ல், தான் இந்த கட்டடத்துக்கு மாற்றப்பட்டது; இது, தபால் துறையின் சொந்த கட்டடம்'' என, அறிமுகம் கொடுத்தார், கிளை அஞ்சல் அலுவலர் காளியப்பன்.
பகுதி நேரம் மட்டுமே செயல்படும் கிராமப்புற கிளை அஞ்சல் அலுவலர்களுக்கு பணி மாறுதல் இல்லை என்பதால், 37 ஆண்டுகளாக அதே அஞ்சலகத்தில், காளியப்பன் பணிபுரிகிறார். அவருக்கு துணையாக, 22 ஆண்டுகளாக வரதராஜன் என்பவர், தபால்காரராக பணிபுரிகிறார் என்பது கூடுதல் தகவல்.
'குட்டி' அஞ்சலகம் தான்... ! ஆனாலும், சுத்தமாக, வைத்திருக்கிறார்கள். அஞ்சலகம் அமைந்துள்ள சூழல், அங்கே சில நிமிடம் நின்று, அஞ்சலகத்தை கவனிக்க துாண்டுகிறது.''இந்த அஞ்சலகத்தை, சுற்றியுள்ள கிராமத்து மக்களில், 700க்கும் மேற்பட்டோர் சேமிப்பு கணக்கு துவக்கி, தங்கள் உழைப்பின் ஒரு பகுதியை சிறுகச்சிறுக சேமித்து வருகின்றனர். இதுவரை, ஒரு கோடி ரூபாய் வரை முதலீடும் திரட்டப்பட்டு, மெயின் ஆபீசில் சேர்க்கப்பட்டுள்ளது,'' என பெருமிதப்பட்டு கொண்ட காளியப்பன், ''இனியும், கையெழுத்து போட தெரியாத பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.
எங்களிடம் நம்பிக்கையா பணத்தை கொடுத்துட்டு போறாங்க; அதை அவங்க சேமிப்புக் கணக்கில் வரவு வைத்து, அதற்குரிய ரசீதை, அவங்க கிட்ட சேர்த்துடறோம்'' என்கிறார் வெள்ளந்தியாக.'இ-மெயில், இன்டர்நெட், வாட்ஸ்-ஆப், டிவிட்டர் என, வளர்ந்துவிட்ட தொழிற்நுட்பத்தில், கடித போக்குவரத்தும், அஞ்சலக பயன்பாடும் அழிந்து போகுமா' என, கேட்டதற்கு, 'நிச்சயமாய் இல்லை' என, பட்டென்று பதில் கூறிய காளியப்பன், ''வளர்ந்துவிட்ட தொழிற்நுட்பத்தில் கடித போக்குவரத்து குறையலாம்; ஆனா, கிராமத்து மக்களின் சேமிப்பு, அஞ்சலகம் சார்ந்து தான் இருக்கும்,''
''இவங்கள தக்க வைக்க, அஞ்சலகங்களில் வேலை செய்றவங்க, வாடிக்கையாளர்களை தங்களின் உறவா நினைக்கனும்; அவங்களின் சேமிப்புக்கு ஊக்குவிப்பாக இருக்கனும். அப்படி செஞ்சா, கிராமத்து அஞ்சலங்கள் கூட, பொன் விழா, பவள விழா தாண்டி, ஆண்டாண்டு காலம் பயணிக்கும்,'' என்றார் கண்களில் நம்பிக்கை ஒளிர.
குளிரூட்டப்பட்ட பளபளக்கும் கண்ணாடி அறை, மிளிரும் பர்னிச்சர், 'டை' கட்டிக்கொண்டு, 'தமிலீங்கீஷ்' பேசும் விற்பனை பிரதிநிதிகள்... என, பகட்டாக, பெரு நகரங்களில் நிதி நிறுவனங்கள் நடந்து வரும் நிலையில், கிராமப்புறச்சூழலில், ஒரு சிறிய அறையில், ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் டெபாசிட் பெற்று, இன்றளவும், மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ள போத்தம்பாளையம் கிளை அஞ்சலகத்தை பாராட்டுவது சாலப்பொருத்தம்.
No comments:
Post a Comment