Sunday, July 15, 2018

அவசியத்திற்கு போராட வேண்டும், அனாவசியத்திற்கு போராடக்கூடாது: நீதிபதி என்.கிருபாகரன்

By DNS | Published on : 14th July 2018 05:57 PM |




நெய்வேலி: அரசியல், வீடு, சமூகம் எங்கும் இணக்கமில்லை, எதிர் மறையான சிந்தனையே உள்ளது. அவசியத்திற்கு போராட வேண்டும், அனாவசியத்திற்கு போராடக்கூடாது. இந்நிலையை மாற்றி சரியான பாதைக்கு மாணவா்களாகிய நீங்கள் தான் கொண்டுச்செல்ல வேண்டும் என்று சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசினார்.

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள டாக்டா் நா.மகாலிங்கம் கலையரங்கில் ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர்.செல்வராஜ் எழுதிய அருட்செல்வரின் தருமத்தின் தவம் என்ற நூல் வெளியிட்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நூலை வெளியிட்டு பேசினார்.

அப்போது, கல்வி தற்போது வியாபாரமாகி விட்டதாகக் கூறுகின்றனா். அந்த வியாபாரத்தில் கொஞ்சமும் எதிர்பார்ப்பு இல்லாமல் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என சொல்லக்கூடிய நிறுவனம் ஓபிஆா் கல்வி நிறுவனம்.

நடிகா்கள், அரசியல் கட்சித்தலைவா்கள் பேசினால் கை தட்டல்கள் எழும். ஆனால், ஒரு கல்வி நிறுவனத்தின் செயலர் பேசுகையில் கை தட்டல் எழுந்தால் அவா் எந்த அளவிற்கு அரும்பணியாற்றியிருக்க வேண்டும்.

மருத்துவ தொழிலை தவிர வேறு எந்தத் தொழிலும் கிடையாது என சில பெற்றோர்கள் நினைக்கின்றனா். மருத்துவர் ஆக வேண்டும் என்று குழந்தை பருவம் முதலே மனப்பால் கொடுத்து வளர்க்கின்றனர். அதை அடைய முடியாத நிலையில் அந்த குழந்தை தற்கொலை செய்துக்கொள்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கக் கூடாது.

மருத்துவராக நினைக்கின்றனா். ஆக முடியாத நிலையில் பொறியாளா், ஆசிரியர், நல்ல அரசியல் வாதியாகலாம். நல்லவா்கள் வந்தால் தான் அரசியல் நன்றாக இருக்கும். ஆகவே, எந்தவொரு தொழிலாக இருந்தாலும் சரி நோ்மையாக நடந்துக்கொண்டால் தவறு ஏதுமில்லை.

கிராமத்தில் படித்தாலும், தமிழ் வழியில் படித்தாலும் உங்களின் உழைப்பு, நன்நடத்தை உங்களை உயா்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லும். தாய், தந்தையரை கடவுளாக போற்ற வேண்டும். ஆசிரியருக்கு மரியாதை செலுத்த வேண்டும். உற்றார் உறவினா்களிடையே விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். இதுதான் வாழ்க்கை.

எல்லோரும் சோ்ந்து வாழ்வது, விட்டுகொடுப்பது, இணக்கமாக இருப்பது, இருப்பதை கொடுப்பது போன்ற கொள்கைகளை கடைபிடித்தால் அமைதி மட்டும் தான் இருக்கும். மற்றவா்கள் உங்களை இழிவு படுத்தி பேசினாலும், அவா்கள் மனம் புண்படும் வகையில் நீங்கள் பேசக்கூடாது. வாதத்தை மென்மையானதாக இருக்க வேண்டும்.

சுதந்திரத்திற்காக பலா் தியாகம் செய்துள்ளனா். காந்தி, நேரு கண்ணுக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் பலா் உள்ளனா். அவா்கள் பெற்று தந்த சுதந்திரம் தான் நமது சுதந்திரம். இது வீணாகக்கூடாது. அரசியல், வீடு, சமூகம் எங்கும் இணக்கம் இல்லை. எதிர்மறை சிந்தனையே உள்ளது. இந்த சூழ்நிலையை சரியான திசைக்கு மாணவா்களாகிய நீங்கள் தான் கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் போராட்ட வீரா்களின் ஆம்மா சாந்தி அடையும்.

கல்வி வேண்டும் அதுவும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். அந்த மகிழ்ச்சிதான் உலக வாழ்க்கை. தற்போது சமூதாயத்தில் ஒத்துச்செல்லும் குணங்கள் இல்லை. ஜாதி, மதம், அரசியல், கட்சிகள் என பலவாக பிரிந்து கிடக்கிறார்கள். பள்ளி, கல்லூரியில் மகிழ்ச்சியான சூழல் உருவாகிறது என்றால் அந்த சமுதாயமே மகிழ்ச்சியான சமுதாயமாக அமையும். அங்கு பிரிவினை, ஏற்றத் தாழ்வுகள், சாதி, மதம், பிரிவினைகள் இருக்காது. சுத்த சன்மார்க்க வள்ளலார் கண்ட வழி அங்கே பிறக்கும்.

இப்போது எந்த இடத்தில் இருந்தாலும் எதிர் மறையான செயல்கள் நடக்கின்றன. எதற்கெடுத்தாலும் போராட்டங்கள். நமக்கு பகுத்தறிவு சிந்தனை வேண்டும். அவசியத்திற்கு போராட வேண்டும், அனாவசியத்திற்கு போராடக்கூடாது. தமிழ் தொன்மையான மொழி, அதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. நாம் பல அறிய பொக்கிஷங்களை அழித்து விட்டோம், அதன் பெருமை தெரியாமல். தமிழ்மொழி கடல் கடந்து பேசக்கூடிய மொழி. தமிழ் மொழியை நாம் பறைச்சாற்ற வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024