Saturday, July 14, 2018


கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

By DIN | Published on : 14th July 2018 01:35 AM

 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு தானாகவே கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி நிர்வாகம் கல்விக் கட்டணம் வசூலிக்கும் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம், இத்தீர்ப்பை வெள்ளிக்கிழமை அளித்தது. மருத்துவப் படிப்பில் சேர நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவி ஆமிரா ஃபாத்திமா உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு 2016-இல் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள், கடுமையான நிதி நெருக்கடி ஆகியவை காரணமாக இப்பல்கலைக்கழகத்தை தமிழக அரசு 2013-ஆம் ஆண்டு முதல் ஏற்று நடத்தி வருகிறது. இப்பல்கலை.க்கு உள்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 2013-14 கல்வியாண்டில் சேர்ந்த மாணவ, மாணவிகளிடம் அரசின் கல்விக் கட்டணக் குழு நிர்ணயித்த கட்டணத்துக்கு மாறாக, ரூ.5,54,370 வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி விசாரித்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜி. சிவபாலமுருகன், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 2.20 லட்சம் முதல் ரூ. 2.50 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அரசுக் கல்லூரிகளில் ரூ.13,500 கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவருக்கு சுமார் ரூ. 5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருந்தார். அண்ணாமலைப் பல்கலை. சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ். நந்தகுமார் வாதிடுகையில், கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமை கல்லூரி நிர்வாகத்துக்கு உள்ளது' என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் உதவும் பொருட்டு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் ரஞ்சித் குமார், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசுக் கல்லூரியும் அல்ல. நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் அல்ல. இதனால், தாங்களாகவே கல்விக் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள அக்கல்லூரிக்கு அதிகாரம் இல்லை' என்று தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி யு.யு. லலித் அமர்வு சார்பில் மற்றொரு நீதிபதி அருண் மிஸ்ரா வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

தீர்ப்பு விவரம் வருமாறு: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு தானாகவே கல்விக் கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை இல்லை. மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இரு வாரங்களில் தமிழக அரசின் கட்டண நிர்ணயக் குழுவிடம் அக்கல்லூரி நிர்வாகம் அளிக்க வேண்டும். அந்தக் கட்டணங்களை நிர்ணயிக்கும் நடைமுறைகளை நிகழாண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு முன்னதாக அரசின் கட்டண நிர்ணயக் குழு முடிக்க வேண்டும். அக்குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணம் ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தைவிட குறைவாக இருக்கும்பட்சத்தில், கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணங்களை 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் இருந்து கணக்கிட்டு மாணவர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும். மேலும், நிர்ணயிக்கப்படும் கல்விக் கட்டணம் 2018-2019-ஆம் கல்வி ஆண்டுக்கும் பொருந்தும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024