Friday, October 5, 2018

15 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல் அவதிப்படும் நல்லம்பாக்கம் கிராம மக்கள்



15 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல் நல்லம்பாக்கம் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.

பதிவு: அக்டோபர் 05, 2018 04:00 AM
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே நல்லம்பாக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசு புதிய வழித்தடத்தில் தாம்பரத்தில் இருந்து நல்லம்பாக்கம் வரை பஸ் போக்குவரத்தை தொடங்கியது. சில மாதங்களுக்கு பின்னர் சாலை வசதி சரியில்லை என்று காரணம் காட்டி பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் சுமார் 15 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் தினமும் நல்லம்பாக்கம் கிராமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கண்டிகையில் இருந்து பஸ் ஏறி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.

இதே போல கூலி வேலைக்கு செல்பவர்களும், முதியோர், கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் நல்லம்பாக்கம் கிராமத்திற்கு பஸ் போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சாலை வசதி சரியில்லை என்று காரணம் காட்டி பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது சாலை வசதி நல்ல முறையில் இருக்கிறது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:- கடந்த 15 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல் நாங்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து பல முறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை போக்குவரத்து துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உடனே கண்டிகையில் இருந்து நல்லம்பாக்கம் கிராமம் வரை தமிழக அரசின் மினி பஸ்சை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நல்லம்பாக்கம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024