Sunday, October 7, 2018

மாவட்ட செய்திகள்

கேளம்பாக்கம் அருகே 22 கிலோ கஞ்சாவுடன் ஆந்திர கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது


கேளம்பாக்கம் அருகே 22 கிலோ கஞ்சாவுடன் ஆந்திர கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: அக்டோபர் 07, 2018 03:45 AM
திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சிறுசேரி சிப்காட் அருகே ஏகாட்டூரில் கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட சென்றனர். அப்போது கேளம்பாக்கத்தை அடுத்த படூர்-கழிப்பத்தூர் இடையே நின்று கொண்டிருந்த வெளிமாநில வாலிபர்கள் 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களிடம் இருந்த பைகளை போலீசார் சோதனையிட்டனர். அதில் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. பின்னர் 3 பேரையும் கேளம்பாக்கம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த அமலேஷ் (வயது 21), விஜயவாடா மாவட்டத்தை சேர்ந்த சாய்கிரண் (22), சுகேஷ் (21) என்பதும், அங்கு வெவ்வேறு கல்லூரிகளில் இவர்கள் படித்து வருவதும் தெரியவந்தது.

மேலும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கொண்டு வந்து இங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு அறை எடுத்து உள்ளனர். பின்னர் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 35 கிராம் அளவு கொண்ட கஞ்சா பொட்டலங்களை ரூ.500-க்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் போட பயன்படும் எந்திரங்கள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சாவின் மதிப்பு ரூ.4½ லட்சம் ஆகும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024