சென்னை- சேலம் விமான சேவைக்கு வரவேற்பு: 5 மாதங்களில் 17,621 பேர் பயணம்
By ஆர். ஆதித்தன் | Published on : 12th October 2018 03:49 AM |
சென்னை-சேலம்-சென்னை இடையேயான விமான சேவையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான 5 மாதங்களில் மட்டும் 17,621 பயணிகள் பயணித்துள்ளனர்.
சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் கடந்த 1993 இல் சுமார் 136 ஏக்கர் பரப்பளவில் இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் மூலம் சேலம் விமான நிலையம் அமைக்கப்பட்டது.
இதில், என்.இ.பி.சி. ஏர்லைன்ஸ் மூலம் விமான சேவை இயக்கப்பட்டது. ஆனால், போதிய வருவாய் இல்லாததால் விமான சேவை நிறுத்தப்பட்டது.
ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பிறகு கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் மூலம் சேலம்-சென்னை மார்க்கத்தில் 2009 முதல் 2011 வரை விமான சேவை இயக்கப்பட்டது.
போதிய பயணிகள் இல்லாதது, வருவாய் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2011 இல் மீண்டும் விமான சேவை நிறுத்தப்பட்டது. அண்மையில், இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த தேசிய விமானப் போக்குவரத்து கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
உதான் என்ற புதிய திட்டத்தின்படி 1 மணி நேரத்திற்குள் பயண இலக்கை அடையும் குறைந்த தொலைவு விமானங்களில் பயணிகள் கட்டணமாக ரூ.2,500 மட்டுமே விமான நிலையங்கள் வசூலிக்க முடியும்.
மத்திய அரசின் புதிய விமானப் போக்குவரத்து கொள்கையால் 2018 மார்ச் 25 ஆம் தேதி முதல் சேலம் விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது. இதில், தினமும் சென்னையில் இருந்து காலை 9.50 மணிக்குப் புறப்பட்டு, சேலத்துக்கு காலை 10.40 மணிக்கு வந்தடைகிறது.
பின்னர், சேலத்தில் இருந்து காலை 11 மணிக்குப் புறப்பட்டு, சென்னைக்கு 11.50 மணிக்கு சென்றடைகிறது. இந்த விமானத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக வரிகள் சேர்த்து ரூ.1,700 ஆகும். இதில் 50 சதவீத இருக்கைகள் உதான் திட்டத்தின் கீழ் நிரப்பப்படும். இதர இருக்கைகளுக்கான கட்டணம் மாறுபடும்.
சேலம் விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை துவங்கியுள்ளதால், சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை-சேலம்-சென்னை என இரு மார்க்கமாக இயக்கப்படும் ட்ரூஜெட் விமான சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, சேலம் விமான நிலைய அதிகாரிகள் கூறியது: சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானம் இயக்கப்படுவதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
அந்தவகையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 17,621 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இருந்து சேலத்துக்கு வரும் போது 60 இருக்கைகளும், சேலத்தில் இருந்து சென்னைக்குத் திரும்பிச் செல்லும் போது 60-க்கும் மேற்பட்ட இருக்கைகளும் நிரம்பி விடுகின்றன.
சுமார் 72 இருக்கைகள் கொண்ட விமானத்தில் நாளொன்றுக்கு சுமார் 60 பயணிகள் பயணித்து வருகின்றனர். இதில் சுமார் 80 சதவீதத்துக்கு மேல் இருக்கைகள் நிரம்பி விடுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 3,429 பயணிகள் பயணித்துள்ளனர்.
தற்போது காலை நேரத்தில் மட்டும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. அடுத்து மாலை நேரத்தில் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு தொடர்புடைய விமான நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் சேவையைத் துவங்கும் அளவுக்கு தேவையான வசதிகள் உள்ளன. சேலம் விமான நிலையத்தில் பகல் நேரத்தில் மட்டுமே விமான சேவை இயக்கப்படுவதற்கு தேவையான வசதி உள்ளது.
மேலும் இரவு நேர விமான சேவை வேண்டுமானாலும் ஓடுதளத்தில் (ரன்வே) போதிய மிளிரும் விளக்குகள் பொருத்த வேண்டும்.
அதுமட்டுமில்லாமல், இரவு நேரத்தில் விமானம் இறங்குவதற்கு தேவையான விளக்குகள் வசதி மற்றும் அப்ரோச் சாலை எனப்படும் ஓடுதள வசதி ஆகியவை தேவைப்படுகின்றன.
தற்போது 1.8 கிலோ மீட்டர் அளவுக்கு ஓடுதளம் உள்ளது. இன்னும் கூடுதலாக அரை கிலோ மீட்டருக்கும் மேலாக ஓடுதள வசதி இருந்தால்தான் இரவு நேரத்தில் விமானம் இறங்க முடியும். விமான நிலைய மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறோம் என்றனர்.
No comments:
Post a Comment