Monday, October 15, 2018

5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி?- வெளிவராத பின்னணி!

vikatan 

எஸ்.மகேஷ்





சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில்மூலம் கொண்டுவரப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுக்களைக் கொள்ளையடித்தவர்கள், அதை எப்படி மாற்றினார்கள் என்பதை சிபிசிஐடி போலீஸார் விவரித்தனர்.

கடந்த 8.8.2016-ல் சேலத்திலிருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கில் துப்பு துலக்கிய சிபிசிஐடி போலீஸார், மத்தியப்பிரதேசம், ரட்லத்தைச் சேர்ந்த தினேஷ், ரோஹன்பார்தி ஆகிய இருவரையும் கடந்த 12-ம் தேதி கைதுசெய்தனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில், 5 பேருக்கு நேரடியாகவும் 8 பேருக்கு மறைமுகமாகவும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மீதமுள்ளவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட 5.78 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றினார்கள் என்பதை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.


இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் கூறுகையில், ``சேலம் மண்டலத்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.342 கோடி பழைய நோட்டுகள் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி, சேலம் -சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ரூபாய் நோட்டுகள், 226 மரப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. பணப் பெட்டிகள் வைக்கப்பட்ட ரயில்பெட்டியின் கதவு ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 9-ம் தேதி, ரயில் பெட்டியின் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டபோது, 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளைபோயிருந்தது. இந்த வழக்கை முதலில் ரயில்வே போலீஸார் விசாரித்தனர். 11.8.2016-ல் எழும்பூர் போலீஸாரிடமிருந்து எங்களுக்கு மாற்றப்பட்டது.

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பல கோணங்களில் விசாரணை நடத்தினோம். நாசாவின் உதவியோடு நடத்தப்பட்ட விசாரணையில் சின்ன சேலத்திலிருந்து விருத்தாச்சலம் ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையே கொள்ளை நடந்தது எங்களுக்குத் தெரியவந்தது. உடனே, கொள்ளையர்களைத் தேடியபோது செல்போன் சிக்னல், நாசாவிடமிருந்து கிடைத்த புகைப்படங்கள் எங்களுக்கு இந்த வழக்கை துப்பு துலக்க முக்கிய துருப்புச் சீட்டாக அமைந்தது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள பார்தி என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார், கொள்ளைக் கும்பல் குறித்து ரகசியமாக விசாரணை நடத்தினோம். விசாரணையில் இந்தக் கொள்ளையில் மோஹர்சிங் என்பவரின் தலைமையில் 5 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள்குறித்து விசாரித்தபோது, மோஹர்சிங் மற்றும் அவரின் கூட்டாளிகள் குணா, மாவட்ட மத்திய சிறையில் வேறு வழக்குகளில் கைதாகியிருக்கும் தகவல் கிடைத்தது. ஆனால் தினேஷ், ரோஹன் பார்தி ஆகியோர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

மத்தியப்பிரதேச போலீஸாரின் உதவியோடு அவர்களை நாங்கள் பிடித்தோம். அவர்களிடம் விசாரித்தபோது, ரயிலில் பணம் கொண்டு செல்லும் தகவல் கிடைத்ததும் மோஹர்சிங் தலைமையில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். ரயிலின் மேற்கூரையில் ஏறிய 5 பேரும் சின்ன சேலத்திலிருந்து விருத்தாசலம் இடையே கொள்ளையடித்துவிட்டு தப்பவும் முடிவுசெய்துள்ளனர். அதன்படி நாங்கள் இருவரும் ரயிலின் மேற்கூரையில் துளைபோட்ட பிறகு, பெட்டிக்குள் இறங்கி பணத்தைக் கொள்ளையடித்தோம். பிறகு, விருதாச்சலம் ரயில் நிலையத்தின் அருகே கூடாரமிட்டுத் தங்கியிருந்த எங்களின் கூட்டாளிகளிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு ரயிலிலிருந்து குதித்து தப்பிவிட்டோம் என்று கூறியுள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் 13 பேர் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ள 11 பேரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துவருகிறோம். சிறையிலிருக்கும் மோஹர்சிங்கிடம் விசாரித்தால் கூடுதல் தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றனர்.



சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கொள்ளை நடந்த ரயில் பெட்டியிலிருந்த கைரேகைகளுடன் தினேஷ், ரோஹன் பார்தி ஆகியோரின் கைரேகைகளும் ஒத்துப்போய் உள்ளன. கொள்ளையடித்த செல்லாத ரூபாய் நோட்டுக்களை மத்தியப்பிரதேசத்தில் சொத்துகளாக வாங்கியுள்ளதாக எங்களிடம் சிக்கிய தினேஷ், ரோஹன் பார்தி கூறியுள்ளனர். மேலும், செல்லாத ரூபாய் நோட்டுக்களை வங்கி அதிகாரிகளின் உதவியோடு மாற்றியதாகவும் அவர்கள் கூறினர். சொத்துகளை மீட்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள்குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், ரயிலில் பணம் கொண்டுசெல்லும் தகவலைக் கூறியவர்கள் முதல், பணத்தை மாற்றிக் கொடுத்தவர்கள் வரை உள்ளனர்.


தமிழகத்தைப் பொறுத்தவரை பெரிய கொள்ளைச் சம்பவத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாவரியா கொள்ளையர்கள்தான் கைவரிசை காட்டியுள்ளனர். தமிழகத்தில் கொள்ளையடித்த பாவரியா, கொள்ளையர்களை ஜாங்கிட் ஐபிஎஸ் தலைமையிலான போலீஸ் டீம் கைதுசெய்தது. இதுதான் 'தீரன்' படமானது. பாவரியா கொள்ளையர்களைப் போல பார்தி என்ற இனத்தைச் சேர்ந்தவர்களும் போலீஸூக்கு சவால் விடும் வகையில் கொள்ளையடிப்பார்கள். அவர்களை இரண்டு ஆண்டுகள் நீண்ட விசாரணைக்குப் பிறகு தமிழக சிபிசிஐடி போலீஸார் பிடித்துள்ளனர். இந்த கொள்ளைக் கும்பல், தமிழகத்தில் இரண்டு பெரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது" என்றார்.

ரயில் கொள்ளை சம்பவம் கடந்துவந்த பாதை

8.8.2016-ல், 342 கோடி ரூபாய் சேலத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்டது. 9.8.2016-ல் ரூ.5.78 கோடி கொள்ளைபோனது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக எழும்பூர் போலீஸார் வழக்குபதிவு செய்தனர். 11.8.2016-ல் சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டு ஓராண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லை. போலீஸ் அதிகாரிகள் அம்ரேஷ் புஜாரி, சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட பிறகு, கிடப்பில் கிடந்த ரயில் கொள்ளை வழக்கை தொழில்நுட்ப யுக்திகளைக் கொண்டு விசாரித்தார். மத்திய உளவுப்பிரிவு மற்றும் என்ஐஏ போலீஸாரின் உதவியையும் சிபிசிஐடி போலீஸார் நாடினர். சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அமரேஷ் பூஜாரி, ஐஜி ஸ்ரீதர் மேற்பார்வையில், எஸ்பி பிரவீன்குமார் அபிநபு தலைமையில் ஏடிஎஸ்பி செந்தில்குமரன், டிஎஸ்பி கிருஷ்ணன், எஸ்ஐக்கள் சாஸ்தா இந்துசேகரன், சாமிக்கண்ணு மற்றும் தலைமைக் காவலர் தண்டபாணி ஆகியோர் இரவும் பகலாகப் புலனாய்வு செய்தனர். மேலும், சிபிசிஐடியில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரிகள் தாமரைக்கண்ணன், மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயரதிகாரிகள், இந்த வழக்கில் தீவிரமாகக் களம் இறங்கினர். நெல்லை துணை கமிஷனராக இருந்த அமித்குமார் சிங் சிறப்பு பணிக்காக சேலம் வரவழைக்கப்பட்டு, ரயில் கொள்ளை குறித்து ஆய்வு நடத்தினர். போலீஸ் அதிகாரிகளின் சிறப்பான புலனாய்வில், பார்தி இனக் கொள்ளையர்கள் சிக்கிக்கொண்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024