தீபாவளிக்கு 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
By சென்னை, | Published on : 13th October 2018 04:00 AM |
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை - திருநெல்வேலி, சென்னை }கோவைக்கு இடையே 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்சிரேஷ்டா தெரிவித்தார்.
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில், "ரயில் பார்ட்னர்' என்னும் செயலி அறிமுக நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தச் செயலியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்சிரேஷ்டா அறிமுகம் செய்து பேசியது:
இந்த செயலி மூலம், ரயில்கள் புறப்படும் நேரம், வந்தடையும் நேரம், பாதுகாப்பு உதவி எண், ரயில் பயணத்தின்போது தேவையான வசதிகள், தேவைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளமுடியும். இந்த செயலி மூலம் 20 முக்கியத் தேவைகளுக்கான நேரடி அழைப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த செயலி பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
50 சிறப்பு ரயில்கள்: தாமிரவருணி மஹா புஷ்கரம் விழாவுக்காக 18 சிறப்பு ரயில்களும், தசரா பண்டிகைக்காக 33 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏற்கெனவே 42 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ரயில்கள் சென்னையில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கோவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தீபாவளி பண்டிகை நெருங்கும்வேளையில் 8 முன்பதில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இவற்றில் சென்னை-திருநெல்வேலிக்கு 4 சிறப்பு ரயில்களும், சென்னை-கோவைக்கு 4 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.
311 ஆளில்லா ரயில்வே கேட்டுகள் நீக்கம்: நடப்பாண்டில், தெற்கு ரயில்வேயின்கீழ் வரும் பாலக்காடு, திருவனந்தபுரம், சென்னை ஆகிய கோட்டங்களில் 311 ஆளில்லாத ரயில்வே கேட்டுகள் நீக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே 2018-19-ஆம் ஆண்டில் செப்டம்பர் வரை ரூ.4,434.14 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலக்கட்ட வருவாயுடன் ஒப்பிடும்போது, 14.94 சதவீதம் அதிகமாகும்.
இதேபோல் கடந்த செப்டம்பர் வரை 42.2 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.8 சதவீதம் அதிகம் என்றார் ஆர்.கே.குல்சிரேஷ்டா.
இந்த நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.கே.மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment