Sunday, October 7, 2018

மனநலம் பாதித்த மகளுக்குப் பூச்சிக்கொல்லி மருந்துகொடுத்த பெற்றோர்! - ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

அருண் சின்னதுரை

ஆர்.எம்.முத்துராஜ்

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மனநலம் பாதித்த மகளுக்கு, தந்தை பூச்சிமருந்து கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்தார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த வாழைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முனீஸ்வரன் - ரேவதி தம்பதியினர். அவர்களுக்குத் திருமணம் முடிந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவர்களுக்கு சாதனா (9) என்ற பெண் குழந்தை உள்ளார். சாதனா பிறப்பிலிருந்தே மனவளர்ச்சி குன்றி இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இருவரும் சாதனாவுக்கு முக்கியம் கொடுத்து கவனித்து வந்துள்ளனர். இதனால் குழந்தையின் சிகிச்சைக்கு அதிகமாகச் செலவு செய்துள்ளனர். இருவரும் நல்ல வேலையில் இருந்ததால் கஷ்டம் தெரியாமல் இருந்துள்ளது. ஆனால், முனீஸ்வரன் - ரேவதி ஆகியோருக்குக் கடந்த சில ஆண்டுகளாகப் போதிய வருமானம் இல்லாததால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததாகவும் அதனால் சிறுமியைப் பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் சிறுமியை தாய், தந்தை இருவரும் வீட்டுக்கு அருகிலுள்ள நாகபாளையம் காத்தப்ப சுவாமி கோயிலுக்கு அழைத்துச் சென்று பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்தும் கழுத்தை நெரித்தும் கொல்ல முயன்றுள்ளனர். கோயில் நிர்வாகி மற்றும் அருகில் உள்ள பொதுமக்கள், இருவரையும் எச்சரித்து சிறுமியை மீட்டனர். அவர்கள் உடனடியாகச் சிறுமியை ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த அப்பகுதி காவல்துறையினர் முனீஸ்வரன் - ரேவதி மீது வழக்கு பதிவு செய்து தந்தை முனீஸ்வரனைக் கைது செய்தனர். தாய் ரேவதி பாதுகாப்பில் சாதனாவுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிறுமி சாதனா சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024