Wednesday, October 3, 2018

அரசு விழாவில் கவர்னர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மோதல் : 'யூ கோ - யூ கோ' என இருவரும் காரசார வாக்குவாதம்

Added : அக் 02, 2018 22:01



புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த அரசு விழாவில், ஒதுக்கப்பட்ட நேரம் கடந்தும் எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ. தொடர்ந்து பேசியதால், 'டென்ஷன்' ஆன கவர்னர் கிரண்பேடி, மைக்கை, 'ஆப்' செய்து, 'யூ கோ' என்றார். பதிலுக்கு, எம்.எல்.ஏ.,வும், 'யூ கோ' எனக் கூறியதால், பரபரப்பு ஏற்பட்டது.துாய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், புதுச்சேரியை திறந்தவெளி கழிப்பிடமற்ற மாநிலமாக அறிவிக்கும் விழா, கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது.கவர்னர் கிரண்பேடி தலைமை வகித்தார். 

அமைச்சர்கள், நமச்சிவாயம், கமலக்கண்ணன், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சாமிநாதன், சங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். விழா அழைப்பிதழில், தொகுதியின், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால், நிகழ்ச்சி நிரலில் அவரது பெயர் இல்லாததால், விழாவிற்கு வந்த போதே, அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் சமாதானம் செய்து, வாழ்த்துரை வழங்க அனுமதிப்பதாக கூறி, மேடைக்கு அழைத்து சென்றனர். விழா துவங்கியதும், 10 நிமிடம் மட்டும் என்ற நிபந்தனையுடன், 11:35 மணியளவில் அன்பழகன், வாழ்த்திப் பேச அழைக்கப்பட்டார்.

அவர் பேசியதாவது: 'ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்கும் விழாக்களில், நேரம் கருதி, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் பேச வாய்ப்பு அளிப்பதில்லை. இவ்விழா, அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. எனவே, எம்.எல்.ஏ.,வை பேச அனுமதித்து, நிகழ்ச்சி நிரல் தயாரித்திருக்க வேண்டும்.எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ., என்பதால், என் தொகுதி புறக்கணிக்கப்படுகிறது. என் தொகுதியில், 900க்கும் மேற்பட்ட கூரை வீடுகள் உள்ளன. கழிப்பிடம் கட்ட விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி தரவில்லை; துப்புரவு பணி படுமோசம்.இவ்வாறு குற்றச்சாட்டுகளை அடுக்கியபடி பேசினார்.கால அவகாசம் முடிந்தும், அவர் தொடர்ந்து பேசியதால், பேச்சை முடித்துக் கொள்ளுமாறு, அதிகாரி ஒருவர் மூலம், கவர்னர் தெரிவித்தார்.

 ஆனால், அன்பழகன் பேச்சை தொடர்ந்தார். சில நிமிடங்களில், மீண்டும், பேச்சை முடித்துக் கொள்ளுமாறு மற்றொரு அதிகாரி மூலம், கவர்னர் கூறினார். அந்த அதிகாரி, துண்டு சீட்டில் எழுதி கொடுத்ததையும், அன்பழகன் பொருட்படுத்தவில்லை.தொடர்ந்து, ''10 நிமிடங்கள் கடந்து விட்டது. நிகழ்ச்சியை முடிக்க வேண்டும். எனவே, பேச்சை முடித்துக் கொள்ளுங்கள்,'' என, கவர்னரே நேரடியாக கூறினார். இதையும் கண்டுகொள்ளாத அன்பழகன், ''இத்திட்டத்தை நிறைவேற்றும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தினீர்களா?''குப்பை அகற்றும் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா, அவர்களுக்கு மத்திய அரசின் உத்தரவுப்படி, குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா,'' என, சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதனால், ஆத்திரமடைந்த கவர்னர் கிரண்பேடி, அன்பழகன் அருகே சென்று, பேச்சு நிறுத்தும்படி கூறினார். ஆனால், அன்பழகன் பேச்சை தொடர்ந்ததால், மைக்கை 'ஆப்' செய்யும்படி கூறி, துண்டிக்கச் செய்தார். இதனால், ஆவேசமடைந்த அன்பழகன், கவர்னரை நோக்கி, ''நீங்கள் தவறாக நடந்து கொள்கிறீர்கள்,'' என்றார். கையெடுத்து கும்பிட்ட கவர்னர், ''தயவு செய்து கிளம்புங்கள்,'' என்றார். தொடர்ந்து, இருவருக்கும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட, டென்ஷனின் உச்சத்திற்கே சென்ற கவர்னர், ''யூ கோ'' என்றார்.''நான் போக மாட்டேன்; யூ கோ,'' என, பதிலுக்கு, கவர்னரை பார்த்து, அன்பழகன் கூறினார். இதனால், விழா மேடையில், பதற்றமான சூழல் ஏற்பட்டது. பின், அமைச்சர் நமச்சிவாயம், ராதாகிருஷ்ணன், எம்.பி., இருவரும், அன்பழகனை சமாதானம் செய்து, அனுப்பி வைத்தனர்.

சபாநாயகரிடம் புகார்

விழாவில் இருந்து வெளியேறிய அன்பழகன், சபாநாயகர் வைத்திலிங்கத்தை அவரது வீட்டில் சந்தித்து, 'எம்.எல்.ஏ.,வின் உரிமையை பறிக்கும் வகையில் கவர்னர் நடந்து கொண்டார்' என புகார் தெரிவித்தார்.


நிருபர்களிடம் அன்பழகன் கூறுகையில், '

'அரசு விழாவில், எம்.எல்.ஏ.,வை வெளியேறுமாறு கூற கவர்னருக்கு என்ன அதிகாரம் உள்ளது. ஆளும் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் கடமையும், பொறுப்பும் எம்.எல்.ஏ.,க்களுக்கு உண்டு. கவர்னர் இந்த மாநிலத்தின் ராணி இல்லை. கட்சி தலைமையிடம் பேசி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன்,'' என்றார்.

கவர்னர் விளக்கம்டுவிட்டரில், கவர்னர் கிரண்பேடி 

விளக்கம்:அன்பழகனுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கடந்து பேசியதால், முடித்துக் கொள்ளும்படி, விழா தலைமை பொறுப்பில் இருந்த நானும், அமைச்சரும் அறிவுறுத்தினோம்.ஆனால், அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.அதையடுத்து, விழாவை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என, நானே நேரடியாக சென்று கூறினேன். அவர் ஏற்றுக் கொள்வதாக தெரியாததால், மைக்கை, 'ஆப்' செய்யுமாறு கூறினேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024