Sunday, October 7, 2018

கம்பீரமாக நிற்கும் எம்.ஜி.ஆர். வீடுகள்... பாதியில் நிற்கும் எடப்பாடியின் பசுமை வீடுகள்!

இரா. குருபிரசாத்
   vikatan

`` `அம்மா (ஜெயலலிதா) வழியில் ஆட்சி செய்கிறோம்' என்று அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்தி முடித்திருக்கிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு. ஆனால், எம்.ஜி.ஆர் வழியிலும் இல்லாமல், ஜெயலலிதா வழியிலும் செல்லாமல், எளிய மக்களை வதைத்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறது" என்கின்றனர், கோவை மக்கள்.



கோவை மாவட்டம், ஆனைக்கட்டி அருகே இருக்கின்றன தூமனூர், சேம்புக்கரை என்ற பழங்குடி கிராமங்கள். இது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இதனால், பேருந்து வசதி இல்லை. கடந்த ஆண்டுதான் மின்சார வெளிச்சத்தைப் பார்த்திருக்கின்றன இந்தக் கிராமங்கள். அதுவும் முழுதாகச் சென்று சேரவில்லை. புதிதாக யாராவது இந்தக் கிராமத்துக்குச் செல்லவேண்டும் என்றாலும், வனத்துறையிடம் அனுமதி வாங்கி, கையெழுத்திட்ட பிறகே செல்ல முடியும். யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் எப்போது வேண்டுமானாலும் வீட்டின் முன்பு வந்து நிற்கலாம். இப்படி, பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் 150-க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பங்கள் இந்தக் கிராமங்களில் வசித்து வருகின்றன.



கடந்த 2016-17-ம் ஆண்டு, 2017-18-ம் ஆண்டுகளில், இரண்டு பிரிவுகளாக மொத்தம் 44 பசுமை வீடுகள் கட்ட ஜாப் ஆர்டர் வழங்கப்பட்டது. இந்த ஜாப் ஆர்டர் வந்து 90 நாள்களுக்குள் வீட்டை கட்டி முடிக்க வேண்டும் என்பது சட்டம். இதற்காக, அரசுத் தரப்பிலிருந்து 2.10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்கள். ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஒரு வீடுகூடக் கட்டி முடிக்கப்படவில்லை. எம்.ஜி.ஆர் காலத்தில் கட்டிக்கொடுத்த வீடுகள்கூடக் கம்பீரமாக நிற்கின்றன. ஆனால், அவர்கள் வழியில் ஆட்சி செய்பவர்கள் கட்டும் பசுமை வீடுகளின் பணிகள் பாதியைக் கூட எட்டாமல் நிற்கின்றன.

இதுகுறித்து தூமனூர் கிராமத்தைச் சேர்ந்த மயிலான், ``எம்.ஜி.ஆர் காலத்துல கட்டிக்கொடுத்த வீட்லதான் பொழப்ப ஓட்டிட்டு இருந்தோம். பசுமை வீடு திட்டத்துல 44 வீடு கட்றோம்னு, 2016 கடைசில வேலைய தொடங்கினாங்க. ஒவ்வொரு வீடும் இப்படித்தான் இருக்கும்னு பிளான் எல்லாம் போட்டுக் காமிச்சாங்க. நாங்க இருந்த வீடுகளையெல்லாம் இடிச்சுட்டாங்க. கொஞ்ச நாளுக்கு, வனவிலங்குங்க தொந்தரவு காரணமா, இருக்கற வீடுகள்ல தங்கிட்டு இருக்கோம். இப்பவும், எங்க ஊரு பொம்பளைங்க பள்ளிக்கூடத்துலதான் தூங்கறாங்க. எங்க ஊரே இப்ப காலி ஆகிடுச்சு.

போன வருஷம் தீபாவளிக்கு வீடு கட்டற வேலை முடிஞ்சுடும்னு சொன்னாங்க. அப்பறம், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, பொங்கல் பண்டிகைனு கொடுத்த வாக்குறுதி எல்லாம் உருண்டோடிச்சு. கொட்டற மழைல, கட்டின செங்கல் எல்லாம் கரைஞ்சுட்டு இருக்கு. இதுல, இடிச்ச 6 வீடுங்கள கட்டிக் கொடுக்க முடியாதுனு சொல்றாங்க. எங்களுக்கு, சீக்கிரம் வீடு கட்டித் தந்தா பயம் இல்லாம நிம்மதியா இருப்போம்" என்றார்.



``கவுண்டம்பாளையம் தொகுதி முழுவதுமே, அரசுப் பணி கான்ட்ராக்ட்களை, எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கி வருகிறார். குறிப்பாக, பசுமை வீடு கட்டுபவர்களுக்கு இந்தத் தொழிலில் போதுமான அனுபவம் இல்லை. மேலும், பசுமை வீடு கட்டுவதற்கான நிதி, சம்பந்தப்பட்ட பயனாளிகளின் கணக்குக்குத்தான் செல்லும். ஆனால், இங்கு, அந்த கான்ட்ராக்டருக்குச் செல்லும்படி மக்களே எழுதிக் கொடுத்துவிட்டனர். அதனால்தான், பணி நிறைவு பெறாமல் இருக்கிறது" என்கின்றனர், இதன் விவரமறிந்தவர்கள்.

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், ``அரசு மானியத் தொகை போக, மீதம் உள்ள தொகையை அந்தப் பயனாளிகள்தான் கொடுக்க வேண்டும். ஆனால், அது இந்தப் பழங்குடி மக்களால் சாத்தியம் இல்லை என்பதால், செங்கல், ஜல்லி, மணல் உள்ளிட்ட பொருள்களுக்கு ஸ்பான்சர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலும், தொடர்ந்து பெய்யும் மழையாலும் பணியில் சற்றுத் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஜனவரிக்குள் வீடுகள் கட்டிவிடுவோம்" என்றார், நம்பிக்கையுடன்.

கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுக்குட்டியைத் தொடர்புகொண்டபோது, ``நஷ்டத்துலதான் அந்த வீடுகளைக் கட்டிட்டு இருக்காங்க. செங்கல் விலை ஜாஸ்தி ஆகிடுச்சு. அந்த கான்ட்ராக்டரிடம் சீக்கிரம் கட்டி முடிக்கச் சொல்லிருக்கேன். அந்த மலைவாழ் மக்களுக்கு நிறைய செய்யணும்னு ஆசையாப் போனேன். ஆனா, எதுக்கெடுத்தாலும் மீடியாவ கூப்பிட்டு பிரச்னை பண்றப்ப, செய்யறதுக்கே இன்ட்ரஸ்ட் இல்லாம இருக்குது. ஒரு மாசத்துக்குள் வீடுகளைக் கட்டி முடிச்சிருவோம்" என்றார், மிகத் தெளிவாக.



இது தொடர்பாக கான்ட்ராக்டர் வசந்த், ``இது மிகவும் குறைஞ்ச ரேட். இந்தத் தொகையில காம்பவுண்ட் சுவருகூடக் கட்ட முடியாது. எம்.எல்.ஏ சொன்னதால பணிகளைத் தொடங்கினோம். அந்தக் கிராமங்களுக்கு ஒவ்வொரு தடவை போய்ட்டு வர்ற செலவு அதிகமாகுது. உயிரைப் பணயம்வெச்சு வேலை பார்க்குறோம். ஆனா, அந்தக் கிராம மக்களும், அரசு அதிகாரிங்களும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்றாங்க. அந்த மக்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாம நிறைய பொறாமைப்படறாங்க. அவங்க கிளப்பிவிட்டதுதான் இது. அந்த வீடுகளைக் கட்டி முடிக்க, இன்னும் 6 மாசத்துல இருந்து ஒரு வருஷம் ஆகும்" என்றார்.

திட்ட இயக்குநர் ஜனவரி மாதம் என்கிறார், எம்.எல்.ஏ ஒரு மாதம் என்கிறார், கான்ட்ராக்டரோ ஒரு வருடம்கூட ஆகலாம் என்கிறார். இதிலிருந்தே, இவர்கள் யாரும் மக்கள் பிரச்னை குறித்து ஆலோசிப்பதே இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இன்னும், எத்தனை நாள்களுக்குத்தான், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரைச் சொல்லி எளிய மனிதர்களை ஏமாற்றப்போகிறார்களோ?

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024