Sunday, October 14, 2018

தேசிய செய்திகள்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு கேரளாவில் போராட்டம் தீவிரம் அடைகிறது


சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

பதிவு: அக்டோபர் 14, 2018 05:45 AM
திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந் தேதி தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை அமல்படுத்தப் போவதாக கேரளாவில் ஆட்சியில் இருக் கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு அறிவித்து உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டுக்கு இந்த தீர்ப்பில் உடன்பாடு இல்லை என்ற போதிலும், கோர்ட்டு தீர்ப்பை மீற முடியாது என்றும், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும், வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளது.

சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து அய்யப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் கேரள அரசுக்கு எதிர்க்கட்சியான காங்கிரசும் மற்றும் பாரதீய ஜனதா, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாரம்பரியத்தையும், வழிகாட்டு முறைகளையும் மாற்றக்கூடாது என்று கோரி பாரதீய ஜனதா போராட்டம் நடத்தி வருகிறது.

மேலும் பல்வேறு இந்து அமைப்புகளும் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றன. கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் டெல்லியிலும் போராட்டங்கள் நடைபெற்று உள்ளன. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்தாலும், பாரம்பரியத்தை தாங்கள் மீறப்போவது இல்லை என்றும், கோவிலுக்கு செல்லமாட்டோம் என்றும் ஏராளமான பெண்கள் அறிவித்து உள்ளனர்.

இதற்கிடையே, பெண்களின் உரிமைகளுக்காக போராடும் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், பெண்களுடன் விரைவில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபடப் போவதாக கூறினார். அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்துவது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது என்று கூறிய அவர், சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் வருவதை அவர்கள் வரவேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்த பிரச்சினையில் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை தெளிவு படுத்த வேண்டும் என்றும் திருப்தி தேசாய் கேட்டுக் கொண்டார்.

இவர், மராட்டிய மாநிலத்தில் சில வழிபாட்டு தலங்களுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி பிரசாரம் மேற்கொண்டவர் ஆவார்.

சபரிமலை கோவிலுக்கு செல்லப்போவதாக அறிவித்துள்ள திருப்தி தேசாய்க்கு அய்யப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதேபோல் பாரதீய ஜனதாவும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

திருப்தி தேசாய் ஆட்சேப கரமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ள பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த சசிகுமார் வர்மா, சபரிமலையில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க கேரள அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளார்.

இந்தநிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 17-ந் தேதி (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து, சபரிமலையில் பெண்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கேரள அரசு கூறி இருப்பதால், நடை திறக்க இருப்பதையொட்டி அங்கு பெண்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கேரளாவில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று கொச்சியில் சிவசேனா சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் சென்றவர்கள் சபரிமலையை பாதுகாப்போம் என்றும், அய்யப்பன் கோவிலின் புனிதத்தையும், பாரம்பரியத்தையும் மத்திய-மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும் என்று வற்புறுத்தியும் கோஷங்களை எழுப்பினார்கள்.

பேரணியின் போது சிவசேனா பிரமுகர் பெரிங்கமலா அஜி கூறுகையில், தங்கள் கட்சியைச் சேர்ந்த தற்கொலைப்படை பெண்கள் 17-ந் தேதியும், 18-ந் தேதியும் பம்பை நதி பகுதியில் கூடுவார்கள் என்றும், இளம்பெண்கள் யாராவது சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்றால் அங்கு கூடி இருக்கும் தங்கள் கட்சி பெண்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றும் மிரட்டல் விடுத்தார்.

இதற்கிடையே, சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கேரளாவில் நடத்தும் நீண்ட தூர பேரணி நேற்று கொல்லம் மாவட்டத்துக்கு வந்தது.

பேரணிக்கு தலைமை தாங்கி வந்த மாநில பாரதீய ஜனதா தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பேசுகையில், சபரிமலை கோவிலுக்கு செல்லப்போவதாக திருப்தி தேசாய் கூறி இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். எரியும் நெருப்பில் எண்ணெய் விட வேண்டாம் என்றும், சபரிமலையை பதற்றம் நிறைந்த பகுதியாக மாற்ற வேண்டாம் என்றும் திருப்தி தேசாயை அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024