Tuesday, October 9, 2018

மாவட்ட செய்திகள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார்



மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழாவை அகண்ட தீபம் ஏற்றி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார்.

பதிவு: அக்டோபர் 09, 2018 04:15 AM
மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நேற்று நவராத்திரி விழா தொடங்கியது. இதையொட்டி சித்தர் பீடத்தின் நுழைவு வாயில் மற்றும் வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

கோவில் பிரகாரத்தில் அமைக்கப்பட்டு இருந்த நவராத்திரி கொலுவில், மேல்மருவத்தூரில் அமைய உள்ள அதிநவீன பன்நோக்கு மருத்துவமனை பற்றிய விவரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

விழாவையொட்டி அதிகாலையில் கருவறையில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. காலை 9.15 மணியளவில் ஆன்மிககுரு பங்காரு அடிகளார் சித்தர்பீடம் வந்தார். அவரை விழா பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர்.

மதியம் 12.20 மணியளவில் பங்காரு அடிகளார், ஈர உடையுடன் கருவறைக்குள் சென்று அம்மனுக்கு தீபாராதனை செய்து, கருவறையில் சுயம்பு அம்்மனுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தை ஏற்றி வைத்து நவராத்திரி விழாவை தொடங்கி வைத்தார்.

பின்னர் மகிஷாசூரமர்த்தினி அம்மன் போலவும், அசுரர் மற்றும் 3 முனிவர்கள் போலவும் வேடமணிந்து வந்திருந்த சிறுவர்கள் அந்த அகண்ட தீபத்தை கையில் ஏந்தி சித்தர் பீடத்தில் உள்ள அனைத்து சன்னதிகளையும் வலம் வந்தனர். பின்னர் அகண்ட தீபம் கருவறையின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த தனிமேடையில் வைக்கப்பட்டது.

அதைதொடர்ந்து பங்காரு அடிகளார், அகண்ட தீபத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றினார். அவரை பின்தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களும் அகண்ட தீபத்தில் எண்ணெய் விட்டு தீபஒளியை வழிபட்டனர்.

இதையடுத்து லட்சார்ச்சனை தொடங்கியது. அப்போது கருவறை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யப்பட்டது. நேற்று தொடங்கிய நவராத்திரி விழா, வருகிற 19-ந் தேதிவரை நடைபெறுகிறது. அப்போது அம்மனுக்கு வெவ்வேறு காப்புகள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.

இந்தநிலையில் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய அமாவாசை வேள்வி, நள்ளிரவு வரை நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் லட்சுமிபங்காரு அடிகளார் தலைமையில் இயக்க துணைத்தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் சென்னை மாவட்ட சக்திபீடங்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024