ஊக்கமது கைவிடேல்! – டாக்டர் ஆர். கார்த்திகேயன்
ஜூன் 26, 2014 இல் 8:11 முப (மருத்துவம்)
ஒரு வினோத வாழ்க்கை முறைக்கு நாம் தள்ளப்
பட்டிருக்கிறோம்.
வேலை நாளில் எந்த புது விஷயம் செய்ய
வேண்டும் என்றாலும் ‘நேரமில்லை’ என்று
சொல்வோம். வாரக் கடைசியில் விடுமுறை
என்று உட்கார்ந்தால் ‘என்ன செய்யறதுன்னே
தெரியலை!’ என்போம்.
–
காரியம் வந்தால் நேரம் இல்லை. நேரம்
இருந்தால் செய்ய காரியம் இல்லை. இதுதான்
பெரும்பாலோர் பிரச்னை.
–
இதை நேர நிர்வாகம் என்பதை விட நம் சுய
நிர்வாகம் என்பதே சரி. நேரத்தை யாரும்
நிர்வாகம் செய்ய முடியாது. நம் வாழ்க்கையை
நேரத்தால் அளக்கலாம். அந்த நேரத்தில் நாம்
என்ன செய்கிறோம் என்பதைத் தான் நிர்வாகம்
செய்ய முடியும்.
–
சிலர் குறுகிய காலத்தில் நிறைய சாதிக்கிறார்கள்
என்றால் அவர்கள் தங்களை நன்கு நிர்வாகம்
செய்து கொள்கிறார்கள் என்றுதான் பொருள்.
–
விடுமுறை நாளை சரியாக நிர்வாகம் செய்தால்
வேலை நாளை நிர்வாகம் செய்வது சுலபம்.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்ன செய்கிறீர்கள்?
–
பலர் தாமதமாக எழுந்து (அல்லது எழுப்பப்பட்டு)
ஒரு பெரிய முடிவு எடுக்க முடியாமல் திணறுவார்கள்.
என்ன அது? முதலில் குளிப்பதா அல்லது சாப்பிடுவதா?
பிறகு தொலைக்காட்சி பெட்டி அவர்களை இயக்கும்.
நாம் கையில் ரிமோட் வைத்திருப்பதாக நினைப்பது
மாயை. டி.வி. தான் நம்மை ரிமோட் கன்ட்ரோலில்
இயக்குகிறது. பார்த்த படத்தை ஓசியில் வருவதால்
திரும்பப் பார்ப்போம்.
பிறகு வருவதையெல்லாம் மாற்றி மாற்றிப் பார்த்தால்
மாலையில் ஒரு நாள் வேலை செய்ததை விட
சோர்வாக இருக்கும். பற்றாக்குறைக்கு மதியம்
உறங்குபவர்கள் இரவில் மந்தகாசமாக செய்வதறியாது
விழித்து கிடப்பார்கள்.
–
மறுநாள் வேலைக்கு ஓட வேண்டுமே என்கிற
கவலை வேறு மாலையிலேயே வந்த விடும்!
ஒரு ஓய்வு நாள் குழப்பமாக வந்து சென்றுவிடும்.
இப்படி ஒரு 52 தடவை சென்றால் ஒரு வருடம்
ஓடிவிடும்!
–
இதைவிடக் கொடுமை சிலர் ஒரு வாரம்
சுற்றுலா என குடும்பத்துடன் செல்வார்கள்.
கிளம்பும் நாளிலிருந்து திரும்பும் நாள் வரை
பயணம் செய்து கொண்டே இருப்பார்கள்.
அவசரம் அவசரமாக எல்லா இடங்களையும்
பார்த்து ‘கிளம்பு… கிளம்பு’ என்று விரட்டிக்
கொண்டு வருவார்கள். திரும்பி வந்து அசதி
நீங்க ஒரு நாள் ஓய்வெடுப்பார்கள்!
–
விடுமுறை நாளின் நோக்கம் புத்துணர்வு
கொள்வது. நல்ல ஓய்வு. சரியான அளவு தூக்கம்,
ரசி்த்து ருசித்து சாப்பாடு, குடும்பத்தாருடன்
பகிர்வு இவைதான் ஆதாரத் தேவைகள்.
இத்துடன் நேரம் ஒதுக்கி வாசிப்பு, உடற்பயிற்சி,
தியானம், தோட்ட வேலை, இசை, தேர்ந்தெடுத்த
பொழுதுபோக்கு போன்றவை மனதை புத்துணர்வு
கொள்ளச் செய்யும்.
–
அதுபோல சுற்றுலா என்றால் வெளிநாட்டவர்
பலரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். அவர்கள்
பெரும்பாலும் பகலில் பயணம் செய்வார்கள்,
இரவு தூக்கம் காக்க! ஒரு இடத்தில் அதிக நாட்கள்
தங்குவார்கள். அதை முழுவதும் ரசிப்பார்கள்.
பலர் கடற்கரையில் அல்லது நீச்சல் குளம் அருகே
படுத்து மணிக்கணக்கில் புத்தகம் படிப்பதைப்
பார்க்கலம்.
‘இதைப் படிக்க இவ்வளவு செலவு பண்ணி இங்கே
வரணுமா?’ என்று நினைக்கலாம். ஆனால் ஒரு
விடுமுறை நாளை எதையும் இழக்காமல் அணு
அணுவாக ரசிக்கத் தெரிந்தவர்கள் அவர்கள்.
–
ஒருமுறை ஒரு உளவியல் பேராசிரியர்
அமெரிக்காவிலிருந்து இங்கு வந்திருந்தார்.
என்னிடம் சில இந்தியா சுற்றுலா மையங்கள்
பற்றி விசாரித்தார். அது அவருக்கு இரண்டாவது
இந்தியப் பயணம். முதல் முறை மூன்று மாதங்கள்
இருந்து விட்டுச் சென்றிருந்தார். பேசுகையில்
புரிந்தது:
–
அவர் பார்த்த அளவு நான் இந்தியவைப்
பார்த்திருக்கவில்லை என்று. நேரம், பணம், உழைப்பு
மூன்றும் தேவைப்படும் சுற்றுலாவையும்
பக்காவாக திட்டமிட்டு மேற்கொள்கிறார்கள்.
–
இதுதான் விடுமுறை விட்டு வந்ததும் ஒரு உந்து
சக்தியைக் கொடுக்கிறது. வார விடுமுறை நாளில்
நோக்கம் வாரம் முழுதும் தொடர்ந்து வேலை
செய்ய ஊக்கசக்தியை புதப்பித்திக்
கொடுப்பதுதான்.
–
விடுமுறை நாளை சரியாக நிர்வாகம் செய்பவர்கள்
வேலையில் திறமையாக இருப்பார்கள் என்கிறது
மனித வள ஆய்வுகள்.
யோசியுங்கள், ஒரு விடுமுறையை எப்படி
ரம்மியமாக களிக்கலாம் என்று!
–
ஒரே ஒரு விஷயம் தான் நீங்கள் செய்ய வேண்டும்.
ஒரு ஞாயிறு செய்ய வேண்டிய காரியங்களை
நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அது போக
வேண்டிய சினிமாவாக இருந்தாலும், படிக்க
வேண்டிய புத்தகமானாலும், சமைக்க வேண்டிய
உணவாக இருந்தாலும், செய்ய வேண்டிய
வேலைகளாக இருந்தாலும்!
–
டிவி பார்க்கலாம், தவறில்லை, விரும்பி நிகழ்ச்சி
மட்டும் திட்டமிட்டுப் பாருங்கள். அவசரமில்லா
காலைப் பொழுதுகள் விடுமுறை நாட்களுடையது.
அதை தூக்கத்தை விட சுவாரசியமான காரியங்கள்
செய்ய முடியுமா என்று பார்க்கலாமே!
–
ஒரு குடும்பம் முழுவதும் சேர்ந்து செய்யும்
சமையலும் வீட்டு வேலையும் குதூகலம் அளிக்கக்
கூடியவை. முண்டிப் பிடித்து, பணத்தைக் கொட்டி
வெளியே சென்று சாப்பிடுவது மட்டும்தான்
சந்தோஷமா என்ன?
–
நண்பர்களை சந்திக்கலாம். பக்கத்தில் உள்ள
சின்ன குன்றுகள் ஏறி ட்ரெக்கிங் செய்யலாம்.
போகாத கோயில்களுக்கு போகலாம். நேரமில்லை
என்று ஆரம்பிக்காத விஷயங்கள் எதையாவது
ஆரம்பிக்கலாம். ஒரு வேளை ஓட்டலுக்குச் செலவு
செய்வதை ஒரு நல்ல காரியத்திற்கு செலவிட்டு
திருப்தி படலாம்.
–
ராத்திரி மொட்டை மாடியிலோ, கடற்கரையிலோ
அல்லது ஏதாவது ஒரு திறந்த வெளியில் வானத்தை
நோக்கலாம். மேகங்கள் கொள்ளும் வடிவங்கள்
என்ன என்று ஆளுக்கு ஆள் பேசி்க் கொள்ளலாம்.
–
நேற்று வரை நாம் செய்த தேர்வகள்தான் நம்
கடந்த கால வாழ்க்கை. இன்று முதல் நீங்கள்
செய்யும் தேர்வுகள் தான் நம் வருங்கால
வாழ்க்கை!
–
வேலை நாட்களுக்குத் தேவையான ஊக்க
சக்தி விடுமுறை நாட்களில்தான் மறைந்துள்ளது.
இனி விடுமுறை நாள் ஒவ்வொன்றையும் ரசித்து
செதுக்குவோம்!
–
———————————––
– டாக்டர் ஆர். கார்த்திகேயன்
நன்றி: குமுதம்
No comments:
Post a Comment