வேலை தேடும் வேலை வேண்டாம்
By உதயை மு. வீரையன் | Published on : 13th October 2018 04:27 AM |
இந்தியாவின் வளர்ச்சி என்பது இளைஞர்களின் வளர்ச்சியாகும். மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் வீணே காலம் கழித்தால் தேசம் எப்படி முன்னேறும்? அவர்களின் ஆற்றலை தேசம் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா?
நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை. இப்போது எட்டப்பட்டுள்ளது வேலை வாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி என்று கூறப்படுகிறது. ஆனால், இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று நிதி அமைச்சக ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் கூறியுள்ளார்.
பொருளாதார வல்லுநரான இவர் 2017-ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகத்துக்கு ஆலோசகராக மூன்று ஆண்டு காலத்துக்கு நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன்பு பிரபல வங்கியொன்றின் நிர்வாக இயக்குநராக இருந்தவர்.
முறைசாரா தொழில்துறையில் எந்த அளவுக்கு வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன என்பதற்குத் தெளிவாக புள்ளி விவரங்கள் இல்லை. அதே போல வேலைக்காகப் புலம் பெயர்ந்தோர் பற்றிய விவரமும் இல்லை. "இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை மற்றும் பரப்பளவு மிகுந்த நாட்டில் வேலை உருவாக்கம் என்பது மிகப்பெரும் பிரச்னையாகும். இருந்தாலும் இப்போது எட்டப்பட்டுள்ள வளர்ச்சியானது வேலை வாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி என்று கூறப்படுவதை ஏற்க முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாலும், மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும் மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியத் தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இதில் மிகப் பெரிய சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.
வேலை என்பது நாள் ஊதியம், மாத ஊதியம் எனப் பெயரளவுக்கு ஊதியம் வருவதாக இருந்தால் போதாது. நிறைவான ஊதியம் கொண்ட தரமான வேலை வாய்ப்புகளையே இன்றைய இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் உண்மை நிலை இதற்கு நேர்மாறாகவே இருக்கிறது.
அரசாங்கம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைகளுக்கு அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்து குவிவதைப் பார்க்கும்போது, இப்போது அவர்கள் பார்க்கும் வேலை நிறைவளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
அல்லது அவர்கள் வேலையில்லாமல் இருந்தாலும் தற்காலிக வேலைகளை நாடாமல், நிரந்தர வேலைகளையே நாடுகின்றனர்.
இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைக் கணக்கிடும்போது நாட்டின் வேலை வாய்ப்புச் சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி முதல் ஒரு கோடியே 20 லட்சம் பேர் வரை வேலை தேடி வருகின்றனர். அத்துடன் கடந்த காலங்களில் வேலை தேடத் தொடங்கி வேலையில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அண்மையில் வெளிவந்த ஒரு செய்தி, நமது இளைஞர்களின் படிப்பும், வேலைவாய்ப்பும் எப்படி யிருக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்ஸி) நடத்தும் குரூப்-2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த செப்டம்பர் 9 நள்ளிரவுடன் முடிவடைந்தது. மொத்தம் உள்ள 1,199 காலிப் பணியிடங்களுக்கு, 6 இலட்சத்து 41 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
23 விதமான பதவிகளில் 1,199 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் நாள் குரூப்-2 தேர்வுக்கான (நேர்காணல் பதவிகள்) அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் பதிவு அன்றைய தினத்தில் இருந்தே ஆரம்பமானது.
குரூப்-2 தேர்வுக்கான குறைந்தபட்சக் கல்வி தகுதி இளங்கலை பட்டப்படிப்பு என்ற போதிலும் முதுகலைப் பட்டதாரிகளும், எம்.பில். முடித்தவர்களும், பி.இ., பி.டெக். பயின்ற பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளனர்.
முதன்மைத் தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். கலந்தாய்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான பதவியைத் தேர்வு செய்து கொள்ளலாம். வேலையின் எண்ணிக்கையும், விண்ணப்பித்தவர் எண்ணிக்கையும் எண்ணிப் பார்த்தால் வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சம் தெரியும்.
இங்கு மட்டும்தான் இந்நிலை என்பது இல்லை. வடமாநிலங்களில் சில நூறு கடைநிலை ஊழியர் பணியிடங்களுக்குப் பட்டதாரிகளும், பட்ட மேற்படிப்பு படித்தவர்களும், பி.இ., பி.டெக்., படித்தவர்களும் இலட்சக்கணக்கில் விண்ணப்பித்துள்ள செய்திகளும் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
வடமாநில இளைஞர்கள் வேலைதேடி தினந்தோறும் தமிழ்நாட்டுக்கு வந்து குவிகின்றனர். இவர்களில் படித்தவர்களும் இருக்கின்றனர்; படிக்காதவர்களும் இருக்கின்றனர். இவர்களின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிப் பேசுவதால் பயன் என்ன?
தமிழ்நாட்டில் 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும், சென்னை மற்றும் மதுரையில் மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. சென்னையில் கூடுதலாக மாற்றுத் திறனாளிகள், தொழில்நுட்பம், தொழில் திறன் இல்லாதோர் ஆகியோருக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.
பட்டப்படிப்பு வரையிலான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ்., பி.எஸ்ஸி., (விவசாயம்) பி.எல். உள்ளிட்ட தொழில்சார் படிப்புகளுக்கான கல்வித் தகுதியை சென்னை அல்லது மதுரையில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவுதாரர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
பதிவு மூப்பை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வந்தால் அது நடைமுறையில் இருக்கும். இல்லாவிட்டால் பதிவு மூப்பு காலாவதி ஆகிவிடும்.
இந்த வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ஆங்கிலேயர் காலத்திலிருந்து உயிரோட்டமாகச் செயல்பட்டு வந்தன. படித்த இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக இயங்கி வந்தன. இந்த அலுவலகம் பணிமூப்பு, கல்வித்தகுதி அடிப்படையில் வேலைக்கான ஆணையை அனுப்பும். அதனை நம்மூர் அஞ்சல்துறை ஊழியர் கொண்டு வந்து கொடுப்பார். அந்த மகிழ்ச்சியை என்னென்பது?
இப்போது வேலை வாய்ப்புப் பெறும் மிகச் சிலரை தலைமைச்செயலகத்துக்கு வரவழைத்து முதலமைச்சரும், அமைச்சர்களும் வேலை நியமன ஆணைகளை வழங்கும் நிலைமை உருவாகி யிருக்கிறது.
உலக அரங்கில் பெருமை மிகு நாடாக இந்தியா பேசப்படுகிறது. இதற்குக் காரணம், வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிக மனித வளம். பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்தியா 2022-இல் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் இளைஞர்களைக் கொண்டிருக்கும் தேசமாகப் போகிறது.
விடுதலை பெற்ற இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விவசாயத்திலே ஈடுபட்டு வந்தனர். இந்தியப் பொருளாதாரம் வேளாண் பொருளாதாரமாக இருந்தது.
உலகமயம், தனியார் மயம், தாராளமயம் என்னும் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தையும் கேள்விக்குறியாக்கி விட்டன. இந்தச் சவாலை ஏற்று சமாளிக்க வேண்டிய, வழிகளைக் காண வேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது.
அண்மைக்காலமாக சுயவேலை வாய்ப்பைப் பெருக்குவது பற்றி ஆராயப்பட்டு வருகிறது. தொழில் முனைவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது.
"இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது, வேலைகளை உருவாக்கு பவர்களாக இருக்க வேண்டும்' என்று பிரதமர் மோடி தேசிய இளைஞர் தினத்தன்று பேசியிருப்பது இது பற்றியேதான்.
சுய தொழில்களைத் தொடங்குவதற்குப் பொருத்தமான சூழ்நிலையை உருவாக்குவது அரசின் உடனடிப் பணியாகும். அத்துடன் வேலைவாய்ப்பளிப்பவர்களுக்கு மானியம், தொழிலாளர் நல நிதிக்கும், தொழிலாளர் காப்புறுதிக்கும் பங்களிப்பு ஆகியவற்றை அளிப்பதன் மூலம் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் திட்டங்களுக்குக் குறைவு இல்லை. ஆனால் செயல்பாட்டில்தான் குளறுபடிகள். திட்டங்களின் பயன்கள் மக்களுக்குச் சென்று சேரவில்லை என்பது திட்டம் நிறைவேறும்போதுதான் அரசுக்கே தெரிய வருகிறது.
1947-இல் விடுதலை பெற்றது முதல் நமக்கு நாமே சொல்லிக் கொண்டிருக்கும் பொருளாதாரக் கதைகளின் விளைவாகவே நம்முடைய உற்பத்தியும், வளர்ச்சியும் பரிதாபகரமான நிலையில் உள்ளன.
சுதந்திர நாளிலும், குடியரசுத் தினத்திலும் வறுமை, வேலையில்லாத் திட்டம் இவற்றை ஒழிப்பதைப் பற்றியே அரசியல் தலைவர்களின் முழக்கங்கள் இருந்தன. மக்களும் இதனை நம்பியே 71 ஆண்டுகளைக் கழித்து விட்டனர்.
இனியும் இப்படி இருக்க முடியாது.
அப்படியொரு நெருக்கடி நாட்டுக்கு மட்டுமல்ல, நமக்கும்தான். மக்கள் தலைவிதியை நொந்து கொண்டு வாக்களிப்பதோடு அவர்களின் கடமை முடிந்துவிடாது. இளைஞர்கள் வேலை தேடும் வேலையிலேயே இனியும் இருக்க முடியாது.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
No comments:
Post a Comment