Thursday, October 18, 2018

மூட்டுகளைப் பாதுகாப்போம்: முதுமை மூட்டு வலியை நீக்க நவீன ஸ்டெம்செல் சிகிச்சை

Published : 17 Oct 2018 20:19 IST

க.சே.ரமணி பிரபா தேவி




உலக மூட்டுவலி (Arthritis) தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 12-ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆர்தரிடிஸ் சிகிச்சை நிபுணர் ஜாகீர் உசேனிடம் பேசினோம்.

முதுமை மூட்டுவலி (OsteoArthritis) என்றால் என்ன?

வயதாக வயதாக மூட்டுகளில் தேய்மானம் ஏற்பட்டு குருத்தெலும்பு பாதிக்கப்படும். இதில் எலும்பு மூட்டுகள் உரசுவதால் கடுமையான வலி ஏற்படும்.

யாருக்கெல்லாம் வரும்?

1. இப்போதைய மருத்துவ முறையால் மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. இதனால் வயதானவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அவர்களுக்கு மூட்டு தேய்மானம் அதிகமாக ஏற்படும்.

2. அதிகமான உடற்பருமன் உடையவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது.

3. இவர்கள் தவிர்த்து மரபியல் வழியாகவும் மூட்டு தேய்மானம் உண்டாகும்.

என்ன உணவுகளை உண்ண வேண்டும் / தவிர்க்க வேண்டும்?

உடற்பருமன் அதிகமாக உள்ளவர்கள், எடையைக் குறைத்தால், பருமன் குறைவது காரணமாக வலி குறையும்.

கால்சியம் நிறைந்த சரிவிகித உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பால், தயிர், காலிஃபிளவர், மீன் ஆகியவற்றில் கால்சியம் அதிகம் இருக்கிறது.



டாக்டர் ஜாகீர் உசேன்.

என்னென்ன சிகிச்சைகள்?

இந்தியாவில் சுமார் 18 கோடி பேர் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் இதில் முழங்கால் மூட்டுத் தேய்மானத்தால் அவதிப்படுவோர் அதிகமாக உள்ளனர்.

இவர்களுக்கான சிகிச்சை, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தேய்மானத்தைப் பொறுத்து மாறும்.

நிலை 1: சிறு அளவிலான உடற்பயிற்சிகள் மற்றும் மாத்திரைகள்,

நிலை 2: பிஸியோதெரபி மற்றும் மாத்திரைகள்,

நிலை 3: ஜெல் ஊசிகள்

நிலை 4: மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

நவீன சிகிச்சை முறை: ஸ்டெம்செல் மூலம் குருத்தெலும்பை வளர்க்கும் லேசர் சிகிச்சை

இந்த சிகிச்சை முறையில் சிறு துவாரம் வழியாக முழங்கால் மூட்டில் எங்கு தேய்மானம் இருக்கிறது என்பது கண்டறியப்படுகிறது. அந்த இடத்தில் உள்ள தேய்ந்துபோன குருத்தெலும்பு மற்றும் துகள்கள் நீக்கப்படுகின்றன.

பின் நோயாளியின் இடுப்பெலும்பில் இருந்து சுமார் 50 மில்லி எலும்பு மஜ்ஜை எடுக்கப்படுகிறது. அதில் இருந்து ஸ்டெம்செல் பிரித்தெடுக்கப்பட்டு, தனித்துவமான ஜெல் ஒன்றுடன் சேர்க்கப்படுகிறது. இதை சேதமடைந்த மூட்டு எலும்பில் ஒட்டுவதன் மூலம், அது இறுகிவிடுகிறது.

இந்த சிகிச்சை மூலம் அடுத்த 4- 5 மாதங்களில் தேய்மானம் அடைந்த பகுதியில் புதிய குருத்தெலும்பு வளர்ந்து, வலி நிவாரணம் ஏற்படும்.

இந்த நவீன ஸ்டெம்செல் லேசர் சிகிச்சை ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும். இதன்மூலம் அடுத்த நாளே நடக்கமுடியும். வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த சிகிச்சை இந்தியாவில் தற்போது பிரபலமாகி வருகிறது. இங்கு சென்னையில் டோஷ் மருத்துவனை(TOSH – Trauma & Orthopaedic Speciality Hospital) இந்த சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது’’ என்று ஜாகீர் உசேன் தெரிவித்தார்.

தொடர்புக்கு: ramanipirabhadevi.s@thehindutamil.co.in

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024